ரூபாய் மதிப்பு உயரும்?

ரூபாய் மதிப்பு உயரும்?
Updated on
2 min read

சீனா மத்திய வங்கி யுவான் மதிப்பைக் குறைத்த போது டாலர் மதிப்பு உயர்ந்தது. டாலர் மதிப்பு உயர்ந்ததால் இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்தது. தனியாக பார்க்கும்போது ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்தது போல தெரிந்தாலும், மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் சரிவு மிகவும் குறைவானதே.

2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 4 சதவீத அளவில் மட்டுமே சரிந்திருக்கிறது. ஆனால் டாலருக்கு நிகரான பிரேசில் கரன்ஸி 23%, ரஷ்யா 15% மற்றும் தென் ஆப்பிரிக்கா கரன்ஸி 10 சதவீதம் அளவிலும் சரிந்திருக்கிறது. கடந்த ஒரு வருட காலத்தில் பிரேசில் கரன்ஸி ரியால் கிட்டத்தட்ட 53% சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மலேசிய நாணயமான ரிங்கிட் இதுவரை இல்லாத சரிவினை சந்தித்திருக்கிறது.

ரூபாய் மதிப்பு பலமாக இருந்த காலங்களில் ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணியை கணிசமாக உயர்த்தியது. நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,600 கோடி டாலர் அமெரிக்க டாலரை இந்தியா வாங்கி இருக்கிறது. 2014-ம் ஆண்டின் ஒட்டு மொத்த ஆண்டில் 3,200 டாலர் மட்டுமே ரிசர்வ் வங்கி வாங்கியது.

ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி இதுவரை இல்லாத அளவுக்கு 35,535 கோடி டாலராக இருக்கிறது. அந்நிய செலாவணி கணிசமாக இருப்பதினால்தான் தேவைப்பட்டால் ரூபாய் சரிவில் தலையிட முடியும் என்று ரிசர்வ் வங்கி தைரியமாக கூறியது. தவிர ரூபாய் சரிவு மற்றும் பங்குச்சந்தை சரிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட அனைவரும் இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் பலமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

நிதிப்பற்றாகுறை, நடப்புக்கணக்கு பற்றாக்குறை, பணவீக்கம் உள்ளிட்ட தகவல்கள் பலமாக இருப்பதால் இந்த சரிவு சர்வதேச சந்தையின் தாக்கம் தற்காலிகமானது என்றே கருத்து கூறினார்.

கிட்டத்தட்ட இதே கருத்தைதான் கிரிசில் ரேட்டிங் ஏஜென்சியும் கூறியிருக்கிறது. கூடுதலாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64 என்ற அளவுக்கு வருவதற்கு (2016-மார்ச்) மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கணித்திருக்கிறது. 2013-ம் ஆண்டு இருந்த நிலையிலே ரூபாய் மதிப்பு இருந்தாலும், அப்போது இருந்த சூழ்நிலைகளும் இப்போதைய சூழ்நிலையும் வேறு. இப்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது.

இறக்குமதி காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டில் குறைவாகவே இருக்கும். ஆனால் ஏற்றுமதியை நம்பி இருக்கும் நாடுகளான பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்று கணிக்கபட்டிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு சாதகம் என்றால் மூன்றில் ஒரு பங்கு பாதகம் என்றுதானே அர்த்தம். அமெரிக்க வட்டி விகித உயர்வு உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களை பொருத்து ரூ.64 என்ற இலக்கை தொட முடியும்.

பொருளாதாரம் என்பதே கணிப்புகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in