

பன்முக சொத்து பரஸ்பர நிதித் திட்டங்களின் மிக முக்கியமான அம்சமே, ஒரு முதலீட்டாளர் எதிர்பார்க்கும் அனைத்து வகையான சிறந்த உத்திசார்ந்த முதலீட்டு கலவைகளையும் இது உள்ளடக்கியதாக இருப்பதுதான். உங்களது முதலீடுகளை ஒரே திட்டத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு நிதித் திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு ஏற்றதாக இந்த பன்முக சொத்து பரஸ்பர நிதித் திட்டம் உள்ளது.
இந்தத் திட்டமானது மாறிவரும் சூழலுக்கேற்ப சிறப்பாக செயலாற்றும் தன்மை கொண்டது. சொத்து நிர்வாக செயல்பாடானது சுழற்சி அடிப்படையிலானது. ஆனாலும் அது கணிக்க முடியாத தன்மை கொண்டது. இதன் காரணமாகத்தான் ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் இதை நன்கு உணர்ந்து தங்களது முதலீடுகளைப் பரவலாக அனைத்து முதலீட்டுத் திட்டங்களிலும் மேற்கொள்வர்.
பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்க உதவும் வழியாகும். ஆனால் அதை ஒவ்வொரு கட்டமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த வகையிலான முதலீடுதான் சொத்து உருவாக்கத்துக்கு வழி வகுக்கும். கடன் பத்திர முதலீடானது ஸ்திரமானது.
இது ஸ்திரமான வருவாயைத் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு அளிக்கும் தன்மை கொண்டது. இதைப் பகுதி வாரியாக மேற்கொண்டு ஸ்திரப்படுத்தும் போதுதான் முதலீட்டின் பலன்பல மடங்காக வளரும். இதன் மூலம் தான் பணவீக்கம் உள்ளிட்ட சந்தை அபாயங்களிலிருந்து நமது முதலீடுகளைப் பாதிக்காமல் காக்க முடியும்.
ஒவ்வொரு சொத்து முதலீட்டு திட்டங்களும் அதன் தன்மைகேற்ப செயல்படுபவை. ஒன்றிரண்டு சொத்து முதலீடுகள் சிறப்பாகச் செயல்படும் போது மூன்றாவது திட்டம் வேறுவகையில் செயல்படும். அதைப்போலவே ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் ஒரு குறிப்பிட்ட சொத்து நிர்வாக திட்டமானது மிக மோசமான செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கும். அதே சமயம் மற்றொரு நிதி திட்டம் மிகச் சிறப்பாக செயல்படும். 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையின்போது இந்திய பங்குச் சந்தைகள் 52 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன.
அதே சமயம் தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் ஒற்றை இலக்கத்தில் லாபம் ஈட்டின. அதேபோல 2015-ம் ஆண்டில் பங்குச் சந்தைகளும் தங்கமும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஆனால் கடன் பத்திரங்கள் 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையில் லாபம் ஈட்டின. 2017-ம் ஆண்டில் கடன் பத்திரங்கள் ஒற்றை இலக்கத்தில் லாபம் ஈட்டியபோது பங்குச் சந்தைகள் 28 சதவீத அளவுக்கு லாபம் ஈட்டின. இவை அனைத்துமே நமது முதலீட்டைப் பரவலாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவையாகும்.
பன்முக சொத்து நிர்வாக நிதியங்களில் முதலீடு செய்வதன் மூலம் நமது முதலீடுகளைப் பரவலாக மேற்கொள்ள வழியேற்படுகிறது. ஒரு முதலீட்டாளராக உங்களது எதிர்பார்ப்பானது நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு ஸ்திரமான வருவாய் கிடைக்க வழி ஏற்படுத்தும் சிறந்த நிதித் திட்டங்களைத்தான் விரும்புவீர்கள்.
பன்முக நிதித் திட்டங்களைத் தேர்வு செய்யும் முன்பு முதலீட்டாளர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் துணிகரமாக மேற்கொள்ளும் முதலீட்டு இலக்கை எட்டுவதற்கு அந்த குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டம் சரியானதா என்று ஆய்வு செய்ய வேண்டும். பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப மிகவும் துணிச்சலாக முடிவுகளை மேற்கொள்ளும் நிதித் திட்டங்களுக்கு முன்னுரிமை தரலாம்.
நிரந்தர வருமானம் தரும் திட்டங்கள் கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றின் செயல்பாடு குறித்து விவரம் அறிந்து பிறகு முதலீடு செய்ய வேண்டும். மேலும் வட்டிக் குறைப்பு நடவடிக்கையின்போது கடன் பத்திரங்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதையும் ஆராய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்ய தேர்ந்தெடுத்த நிதியத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்யலாம்.