Published : 13 Apr 2020 10:57 AM
Last Updated : 13 Apr 2020 10:57 AM

கரோனா உலக நாடுகள் எப்படி சமாளிக்கின்றன?

உலகின் 209-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது மட்டுமல்லாமல், வரும் மாதங்கள் எப்படி இருக்கும் என்கிற பீதியில் உள்ளனர். ஒருபக்கம் நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் என்ற கவலை, மறுபக்கம் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்னவாகுமோ என்ற கவலை. பெரும்பான்மை நாடுகள் மக்களின் “வாழ்வு”தான் முக்கியம் என்றும், சில நாடுகள் “வாழ்வாதாரமும்” முக்கியம் என்றும் செயல்பட்டுவருகின்றன. சீனாவில் ஆரம்பித்து இத்தாலி, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து சென்ற தொற்று இங்கு புகுந்து இந்தியாவையும் பதற வைத்துள்ளது.

அரசின் நிவாரண நடவடிக்கைகள்

கரோனா வைரஸ் மொத்த இந்தியாவையும் “21 நாட்கள்” முடக்கி போட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிரடியாகச் செயல்பட்டுவருகின்றன. நிதியமைச்சர் முதல் அறிவிப்பாக வரி தாக்கல் செய்யப்பட வேண்டிய பல்வேறு தேதிகளை ஜூன் 30 வரை தளர்த்தினார். அடுத்ததாக ரூ.1.70 லட்சம் கோடி அளவில் பொதுமக்களுக்கு நிவாரண திட்டங்களை அறிவித்தார். ரிசர்வ் வங்கி தன் பங்கிற்கு கடன் தவணை மற்றும் வட்டியை மூன்று மாதத்துக்கு தள்ளிவைக்கும் வசதியை அறிவித்தது.

அதேசமயம் வங்கிகள் அதிகளவில் கடன் கொடுக்க ரெப்பொ, ரிவர்ஸ் ரெப்போ மற்றும் சி ஆர் ஆர் (cash reserve ratio)ஆகியவற்றின் விகிதங்களை கணிசமாகக் குறைத்தது. அதன் மூலம் சுமார் ரூ.3.75 லட்சம் கோடி பணம் வங்கிகள் மூலம் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர்கள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் நாட்களுக்கும் சேர்த்து பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அரசு நிர்பந்தித்துள்ளது.

ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டின் நடைமுறை சிக்கல்களுக்கு இவை மட்டுமே போதாது என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு முன்னரே கரோனா தாக்கிய நாடுகளில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

இங்கிலாந்து

கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ‘பொருளாதார எமர்ஜென்சி'யாக இங்கிலாந்து அறிவித்து 'பிசினஸ் பேக்கேஜ்' பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. வியாபாரத் தடை கடனாக (Business Interruption Loans) வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் வரை கட்ட வேண்டிய வாட் (VAT) வரியையும் இந்த நிதியாண்டின் இறுதிவரை கட்டலாம். இதன் மூலம் சுமார் 30 பில்லியன் பவுண்டு அளவு (சுமார் 1.5 சதவீதம் ஜிடிபி) தொழில்களுக்கு கிடைக்கும். மூன்று மாதத்திற்கு 80% சம்பளத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறியுள்ளது. சுற்றுலா, ஓய்வு விடுதிகள் போன்ற வணிக சொத்து வரிகளுக்கு சில மாதங்கள் அரசு தள்ளுபடி கொடுத்திருக்கிறது.

ஜெர்மனி

முதலாளிகள் (Employer) கட்டவேண்டிய மார்ச் முதல் மே வரை உள்ள சோஷியல் செக்யூரிட்டி தொகையை (நம்ம ஊர் PF, ESI மாதிரி) வட்டி இல்லாமல் மூன்று மாதத்துக்கு ஒத்திவைத்து கட்டலாம். வைரஸ் பாதிப்பால் தொழில் முடங்காமல் இருக்க வங்கிகள் வரம்பில்லாத அளவில் தேவையான கடன்களை வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். ஜெர்மனியின் மேம்பாட்டு நிதி வங்கி அரை டிரில்லியன் யூரோ (சுமார் ரூ 21 லட்சம் கோடி) அளவில் கடன் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூர்

கம்பெனி வருமானவரி மூன்று மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற வணிக சொத்துகளுக்கு சொத்து வரியில் ஒரு பகுதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த முதலாளிகள் கொடுக்கும் மொத்த மாத ஊதியத்தில் 25 சதவீதம் வரை மானியம் பெறலாம்.

கனடா

ஜிஎஸ்டி வரி செலுத்துதல் மற்றும் வரி தாக்கல் 30 ஜூன் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தகுதியான சிறு வணிக நிறுவனங்களுக்கு அவற்றின் பணியாளர்கள் பெறும் சம்பளத்திற்கு தற்காலிக ஊதிய மானியமாக 10% உதவி தொகை மூன்று மாதங்களுக்கு நிதி அமைச்சகத்தினால் கொடுக்கப்படும். மொத்த நிவாரணம் 107 பில்லியன் கனடா டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா

உலகின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவில் இந்த கொடிய தாக்கத்திற்கு பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் இதுவரை 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ 151 லட்சம்கோடி) அளவில் நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 301 பில்லியன் டாலர் நேரடி பண பட்டுவாடாவாகவும், 500 பில்லியன் டாலர்கள் வியாபார அமைப்புகளுக்காகக் குறைந்த வட்டி கடன் தரவும் (ஒரு நிறுவனத்துக்கு அதிக பட்சமாக 2 மில்லியன் டாலர் 30 ஆண்டு வரை கடன்), 250 பில்லியன் டாலர்கள் வேலையற்றவர்களுக்கான காப்பீட்டிற்காகவும், 280 பில்லியன் டாலர்கள் மருத்துவ செலவிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, சிறு வணிக உரிமையாளர்களுக்காக “மன்னிக்கக்கூடிய கடனாக” 377 பில்லியன் டாலர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி, 8 வாரங்கள் அதே ஊழியர்களுக்குச் சம்பள செலவு, வாடகை அல்லது பயன்பாடுகள் ஆகியவற்றிற்காகச் செலவழித்த பகுதிகளை உரிமையாளர்கள் திருப்பிச் செலுத்தவேண்டியதில்லை. வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட இந்த கடன் பணத்தை அரசு திருப்பித்தரும்.

அந்நாட்டு மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் தங்களுக்குச் சொந்தமான சிறு வணிக உதவித் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. உதாரணமாக, நியூயார்க் நகர சிறு வணிக சேவைகள் துறை சிறப்பு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. வாஷிங்டன் மாநிலம் பணப்புழக்க பிரச்சினைகள் உள்ள வணிகங்களுக்கு வட்டி இல்லாத கடன்களை வழங்குவது போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தந்த நாடுகள் அவற்றுக்கேற்ப திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால், இந்தியாவில் நிலைமையே வேறு. இங்கு ஏற்கெனவே தொழில்துறை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஓராண்டாகவே அனைத்து துறைகளும் கடும் நிதி நெருக்கடியையும், தொழில் நஷ்டத்தையும் சந்தித்தன. இந்நிலையில் வர்த்தகமே ஒரு மாதமாக முடங்கியிருக்கிறது. முக்கியமாக உற்பத்தியும் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழப்பும் கணிசமாக இருக்கும். சில சிறு நிறுவனங்கள் தொழிலை மீட்டெடுக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். இத்தனை சிக்கல்களையும் சமாளிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். ஒரேநேரத்தில் மக்களையும் தொழில்துறையையும் பாதுகாக்க வேண்டும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது.

அரசும் தற்போது தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்காக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில் வருமான வரி ரீபண்ட் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு உடனடியாக திருப்பி தரப்படும் எனக் கூறியுள்ளது. இது 14 லட்சம் வரிதாரர்களுக்கு உதவும். இதேபோல ஜிஎஸ்டி மற்றும் கலால் ரீபண்ட் தொகையையும் உடனடியாக திரும்பப் பெறலாம் இதன் மூலம் ஒரு லட்சம் தொழில் அமைப்புகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ 18 ஆயிரம் கோடி அளவில் ரீபண்ட் அரசாங்கத்திடம் இருந்து வழங்கப்படும். ஆனால், கூடுதலாக தொழில் மூடப்பட்டிருக்கும் காலத்திலும் சம்பளம் கொடுக்கவும் மற்ற செலவுகளை சமாளிக்கும் விதத்திலும் பாதிக்கப்பட்ட காலத்திற்கான வட்டி குறைப்பு, கடன் ஒத்திவைத்தல், ஜிஎஸ்டி மற்ற வரிகளை செலுத்துதலில் தளர்வுகள், சம்பளம் கொடுக்க சிறப்பு கடன் போன்ற அறிவிப்புகளை தொழிலதிபர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டும், எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலை மாறும் பொருட்டும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு இனி திட்டமிட வேண்டும். நெருக்கடி காலங்களில் மக்களைக் கைவிடாத அரசுதான் மக்களுக்கான அரசு என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x