Published : 17 Aug 2015 10:35 AM
Last Updated : 17 Aug 2015 10:35 AM

உன்னால் முடியும்: மதிப்புக் கூட்டலில் கிடைத்த வருமானம்

பல்லடம் அருகே உள்ள கொசவம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். நெல்லிக்காய் விவசாயம் செய்து வருகிறார். தனது விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்பதால் இவர் எடுத்த முடிவு இன்று தொழில்முனைவர் ஆக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் நெல்லிக்காயை பறித்துக்கொண்டு சந்தைக்கு போய்வரும்போது ஏண்டா விவசாயம் செய்கிறோம் என்று இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. மதிப்புக் கூட்டு பொருட்களாக கொடுக்கத் தொடங்கிய பிறகு எனது விளைபொருட்களுக்கான மதிப்பு கூடியுள்ளது.

வீடு தேடி வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். அந்த வகையில் மனநிறைவான விவசாயியாக உணர்கிறேன். அதே சமயத்தில் மதிப்புக் கூட்டு தொழில் முனைவோராக இன்னும் இன்னும் அடுத்தது என்ன செய்யலாம் என்பதை யோசித்துக் கொண்டே இருக்கிறேன் என்று தனது தொழில்முனைவு அனுபவத்துக்கான முன்னுரை கொடுத்தார்.

சிறு வயதிலிருந்தே விவசாயம்தான் தொழில். பத்தாம் வகுப்புவரைதான் படித்துள்ளேன்.

1995 வாக்கில் எதார்த்தமாக நெல்லிக்காய் சாகுபடி குறித்து ஒரு பத்திரிகை மூலமாகத் தெரிந்து கொண்டேன். மேலும் இந்த சாகுபடிக்கு கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் பயிற்சி கிடைத்தது, கூடவே நாற்றுகளையும் கொடுத்தார்கள். முதலில் 10 நாற்றுகள் கொடுத்தார்கள். பிறகு மெல்ல மெல்ல நானே நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்ததுடன், பலருக்கும் தயாரித்து கொடுத்தேன். அதுவே தனி தொழிலாகவும் இருந்தது.

நெல்லிகாய் மரங்கள் காய்ப்புக்கு வந்ததும் அதை பறித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வேன். பாடுபட்டு விளைவித்ததை வியாபாரிகளிடம் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசிதான் விற்றுவர வேண்டியிருக்கும்.

நெல்லிகாய்தான் பிரதான விவசாயமாக இருந்ததால், வீட்டில் அவ்வப்போது நெல்லிகாய் ஊறுகாய், நெல்லிக்காய் வத்தல் போன்றவை செய்வதும், அவற்றை உறவினர்களுக்கு கொடுப்பதும் பழக்கமாக இருந்தது. இப்படி செய்வதை உறவினர்களும் ஊக்கப்படுத்த அதிகமாகவே செய்து கொஞ்சம் விற்பனையும் செய்தோம். இதற்கிடையே கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் மதிப்புக்கூட்டு தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொண்டு களத்தில் இறங்கினேன்.

நெல்லிகாயிலிருந்து ஊறுகாய் மற்றும் வத்தல் தவிர, ஜாம், மிட்டாய், பவுடர் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்யத்தொடங்கினேன். இதற்கடுத்து நெல்லிக்காய் ஜூஸ், தொக்கு, நெல்லி பாக்கு சீவல் என தயாரிப்புகளை அதிகப்படுத்தினேன். ஆரம்பத்தில் வேறு சிலருக்காக தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பின்பு ஒரு கட்டத்தில் நானே தனியாக நிவி என்கிற பிராண்டில் சில்லரை விற்பனையில் இறங்கினேன்.

நெல்லிக்காய் மூட்டைகளை சந்தை களுக்கு கொண்டு செல்வதற்காக அலைந்த நான் இந்த பொருட்களை கடைகளுக்கும், கண்காட்சிகளுக்குமாக கொண்டுச் செல்லத்தொடங்கினேன். ஒருபக்கம் விவசாயம், இன்னொரு பக்கம் தயாரிப்பு, இதை சந்தைபடுத்த அலைவது என கடந்த பத்து வருடங்களில் கடும் போராட்டம்.

ஆரம்பத்தில் கிடைத்த பயிற்சி மற்றும் ஆலோசனைகள் தொழிலுக்கு வழிகாட்டியது என்றாலும் இது எல்லாமே எனது சொந்த முயற்சி மற்றும் உழைப்பிலிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதும் நெல்லிகாயிலிருந்து இதேபோல வேறு ஏதாவது மதிப்புக்கூட்டி உற்பத்தி செய்ய முடியுமா என்பதுதான் எனது யோசனையாக இருக்கும். தற்போது எனது பிராண்டுகள் கேரளா, கர்நாடகா என பக்கத்து மாநிலங்கள்வரை அனுப்புகிறேன். மலேசியாவிலிருந்தும் ஆர்டர் கிடைக்கிறது.

விவசாய வேலைகளுக்கான ஆட்கள் தவிர, இப்போது நெல்லி ஜூஸ் தயாரிப்பு பணிகளுக்கு என்றே இருபது நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு அளித்து வருகிறேன். தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஏற்ப எனது மகள் உணவுபதப்படுத்துதல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்து தொழிலுக்கு உதவி செய்கிறார். மார்க்கெட்டிங் வேலைகளுக்கு என்று ஆட்களை நியமித்துள்ளேன்.

நெல்லிக்காயை பறித்து வெறுமனே விற்றபோது கிடைத்த வருமானத்துக்கும், அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்கிறபோது கிடைக்கும் வருமானத்துக்கும் பல மடங்கு வித்தியாசம் உள்ளது.

அப்போதெல்லாம் 50 ஆயிரத்துக்கு நெல்லிகாய் விற்பதற்கே கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதைத் தாண்டி யோசிக்காமல் இருந்திருந் தால் இப்போதும் நான் பல்லடத்துக்கும் ஒட்டஞ்சத்திரம் சந்தைக்கும் அலையும் ஒரு விவசாயியாகத்தான் இருந் திருப்பேன். இப்போது விவசாய தொழில்முனைவோர் என்கிற அடையா ளத்துடன் மிக சந்தோஷமாக உணர் கிறேன் என்று தனது அனுபவத்தை முடித்தார். சாமானியருக்குள்ளும் ஒரு சாதனையாளராக நமக்குத் தெரிந்தார் ராஜேந்திரன்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x