Published : 06 Apr 2020 08:32 am

Updated : 13 Oct 2020 12:32 pm

 

Published : 06 Apr 2020 08:32 AM
Last Updated : 13 Oct 2020 12:32 PM

நடந்து செல்லும் நாடு!

walking-country

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

டெல்லியில் கடந்த வாரம் அரங்கேறிய காட்சி, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த இடம்பெயர்வுக் காட்சிகளை மீண்டும் நினைவூட்டியது. எந்த முன்னேற்பாடுகளும் இன்றி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், நிரந்தர தங்குமிடமற்று இருக்கும் வெளிமாநில தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாகத் திரும்பத் தொடங்கினர். போக்குவரத்து வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், தங்கள் பிள்ளைகளைக் கையில் பிடித்தபடி, உடைமைகளை மூட்டைகளாக தலையில் சுமந்தபடி, நிராதரவாய் அவர்கள் நடந்து செல்லத் தொடங்கினார்கள்.

இந்திய யதார்த்தம்

உணவுக்கும் இருப்பிடத்துக்கும் பெரிய நெருக்கடி ஏதும் இல்லாத இந்திய குடும்பங்கள், இந்த 21 நாட்கள் ஊரடங்கை ஒரு விடுமுறைக் கொண்டாட்டமாகவே அணுகுகிறது. ‘இந்த விடுமுறையில் அம்மா, அப்பாவுடன் வீட்டில் இருக்கிறேன்; மணிக்கு ஒரு தடவை பலகாரம் கிடைக்கிறது’ என்று அது முகநூலில் மகிழ்ச்சிப் பொங்குகிறது. டிக்டாக், ஹலோ, ஃபேஸ்புக் என சமூக வலைதளங்கள் முழுக்க கொண்டாட்டங்கள்தான். ஒருபக்கம் சக்திமான் போன்ற பிரபல தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பப்படுகின்றன. மறுபக்கம் ‘ராமாயணா’ தொடரை மறு ஒளிபரப்பு செய்யப் போவதாக அரசு அறிவிக்கிறது. அதேவேளையில்தான் பெருநகரங்களிலிருந்து வெளிமாநிலத் தொழிலாளிகள் பெருங்கூட்டமாகத் தங்கள் ஊர்களை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்.

தினக்கூலித் தொழிலாளி ஒருவர் தன் மகளைத் தோளில் சுமந்துகொண்டு 500 கி.மீ தொலைவில் உள்ள தன் கிராமத்தை நோக்கிச் செல்கிறார். ஒருவர் 200 கிலோ மீட்டர் நடந்து தன் கிராமத்தை அடைவதற்கு முன்பாகவே இறந்துபோகிறார்; ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே உண்பதற்கு வழியில்லை என்ற நிலையில் 8 வயது சிறுவன் பசியில் மடிகிறான். இந்த சம்பவங்கள் அனைத்தும் எல்லோர் மனசாட்சியையும் உலுக்கியிருக்க வேண்டும். ஆனால், அரசும் கூட அந்தக் காட்சியை வெறும் செய்தியாகத்தான் கடந்துபோனது. எனில், பால்கனியில் நின்று கைதட்டிக்கொண்டிருக்கும் மக்களை என்ன சொல்ல முடியும்.

வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை

இந்தியாவில் ஆண்டுக்கு 12 கோடி மக்கள் கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பிழைப்புத் தேடி இடம்பெயர்கின்றனர். நகரத்தில் இவர்களுக்கு நிரந்தர வேலைகள் கிடையாது. குறைந்த ஊதியத்தில் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்துதான் வாழ்கின்றனர். கட்டுமான வேலைகள், தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அடித்தட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு நகரின் கட்டமைப்புகளிலும் இவர்களின் இரத்தம் தோய்ந்திருக்கிறது. தொடர்ந்து நாடோடிகள்போல் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதும், அரசியல் பலம் இல்லாதிருப்பதும் சமூக அமைப்பில் இவர்களை பலவீனப்பட்டவர்களாக மாற்றியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்குத் தங்குமிடம் என்பது, அவர்கள் வேலை செய்யும் இடங்களில் அமைத்துத் தரப்படும் தற்காலிக குடில்கள்தாம். வேலை முடிந்ததும் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவார்கள்.

இந்தச் சூழலில் நாடு தழுவிய நீண்ட நாள் ஊரடங்கை அறிவிக்கும்முன், இவர்களின் நிலை குறித்து சிந்திப்பதும், அவர்களின் அடிப்படைத் தேவைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தருவதும் ஒரு அரசின் கடமை அல்லவா? ஆனால், இந்திய அரசின் கண்களுக்கு இவர்கள், தானேத் தோன்றி தானே மறையும் உதிரிப் புழுக்களாகவே இருக்கின்றனர். ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரும் இவர்களுக்கான ஏற்பாடுகள் ஏதுமில்லை. சாலைகளில் கூட்டம் கூட்டமாகப் பசியும் பட்டினியுமாக நடந்தே சென்றுகொண்டிருந்தபோதும் அவர்களுக்காக உதவ எந்த அரசுகளும் முன்வரவில்லை.

பிறநாடுகள் கையாண்ட விதம்

உலக வரலாற்றில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி காலகட்டமான 2007-2008 ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையைவிட, தற்போது மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக அந்நியச் செலாவணி நிதியம் தெரிவித்து இருக்கிறது. அப்போது உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சி என்ற ஒற்றை பிரச்சினையை மட்டும்தான் எதிர்கொண்டன. ஆனால் தற்போது, உயிர் பிழைத்திருத்தல் என்ற நெருக்கடியும் இணைந்துள்ளது. இந்தச் சூழலில்தான் உலக நாடுகள் அதன் குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குதல், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தல் உள்ளிட்ட அடிப்படை கடமைகளை மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுத்தி வருகின்றன.

அமெரிக்க அரசு கரோனா சூழலை எதிர்கொள்ள 2 லட்சம் கோடி டாலர் நிவாரண நிதி அறிவித்துள்ளது. இது அந்நாட்டு ஜிடிபியில் 10 சதவீதம். ஆண்டுக்கு 75,000 டாலருக்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மாதம் 1,200 டாலர் நிவாரணத் தொகையாக வழங்க உள்ளது. அதேபோல் திருமணம் ஆனவர்களுக்கு 2,400 டாலர், குழுந்தைகள் இருப்பவர்களுக்கு ஒரு குழந்தைக்கு 500 டாலர் என்ற அடிப்படையில் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து அரசுகள் அதன் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலைகளை விட்டு நீக்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கான ஊதியத்தில் 75 முதல் 90 சதவீதம்வரை அரசே வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

இந்தியா கையாண்ட விதம்

இந்தியா நிவாரண நிதியாக ரூ.1.7 லட்சம் கோடியை அறிவித்திருக்கிறது. இது இந்தியாவின் ஜிடிபி-யில் 0.8 சதவீதம்தான். தற்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் அசாதாரண சூழலில் இது மிகவும் குறைவு என்றும், இதைவிட ஐந்து மடங்கு அதிகமாக நிவாரணம் ஒதுக்கினால் மட்டுமே தற்போதையச் சூழலை குறைந்த பட்சமாகவேனும் எதிர்கொள்ள முடியும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். நெருக்கடியான சூழலில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத மக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒதுக்கப்படுவதே நிவாரண நிதி. ஆனால் தற்போது இந்திய அரசு அறிவித்திருப்பதை அவ்வாறு வகைப்படுத்திவிட முடியாது.

அரசு அறிவித்துள்ள ரூ.1.7 லட்சம் கோடி நிதியில் ரூ.60,000 கோடி அளவில் மட்டுமே தற்போதைய சூழலில் நேரடியாக மக்களுக்கு சென்றுசேரும்.
உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச சிலிண்டர்கள், உணவு விநியோகம், கைம்பெண்கள் மற்றும் முதியோருக்கான கருணைத் தொகை, இந்த மூன்று பிரிவுகளில் மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவையெல்லாம், மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின்கீழ் வழங்கப்பட வேண்டியது. உதாரணமாக ஜெய் கிஸான் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு 8.69 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரத்தை மூன்று தவணைகளில் வழங்குகிறது. அந்த வகையில் தற்போது அந்தத் தவணையை, அதாவது ரூபாய் 2 ஆயிரத்தை முன்னதாகவே வழங்குகிறது. இது அந்தத் திட்டத்தின்கீழ் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைதான்.

அதை முன்னதாக வழங்குவதை எவ்வாறு நிவாரண ஒதுக்கீடாகக்கொள்ள முடியும்? அடுத்ததாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தினக்கூலி ரூ.182-லிருந்து ரூ.202-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கு வேலை செய்து அவர்கள் இந்தக் கூலியைப் பெறுவது? உண்மையில் இந்தத் தொகை அவர்களைச் சென்றடைய வேண்டுமென்றால் அத்திட்டத்தின்கீழ் பதிவு செய்தவர்களின் கணக்குக்கு அனுப்ப வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத்
திட்டங்களுக்குப் பெறப்பட்ட நிதியில் ரூ.31,000 கோடியை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளிகள் பயன்பெறுவார்கள் என்று சீதாராமன் கூறினார்.

ஆனால், அரசின் புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் 5.1 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். நலத்திட்ட அமைப்பில் பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கையையே சீதாராமன் குறிப்பிடுகிறார் எனில், பதிவு செய்யப்படாமல் மீதம் இருப்போருக்கு என்ன செய்யப்போகிறது அரசு? தவிரவும், இந்தத் தொகை ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக செலவிடப்படாமல் இருந்த தொகைதான். அதனால் இதையும் அறிவிப்பு என்று கொள்ள முடியாது. கட்டுமானத் தொழிலுக்கு பணிக்கு அமர்த்தும் முதலாளிகள் அதற்கு செஸ் வரி செலுத்த வேண்டும். அந்த வகையில் ரூ.52,000 கோடி கைவசம் உள்ளது. இது தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும். ஆனால் இதுவரையில் ரூ.31,000 கோடி இன்னும் செலவிடப்படாமல் உள்ளது. தற்போது அந்தத் தொகையைத்தான் மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அனைத்துக்கும் மேலாக, மேற்கூறப்பட்ட நலத்திட்டங்களில் பதிவுசெய்து கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் வராத, முற்றிலும் கைவிடப்பட்டு இருக்கும் நபர்கள் சார்ந்து அரசின் திட்டங்கள் என்ன? இந்தியாவில், சுமார் 18 லட்சம் பேர் வீடற்று சாலையோரங்களில் வசிப்பவர்களாக உள்ளனர். 7.3 கோடி மக்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாத தகரங்கள் போன்றவற்றை வீடுகளாக பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் அவர்கள் நலன் சார்ந்து என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது? அவர்களும் இந்நாட்டு குடிமக்கள்தானே?

இந்தியாவின் பிழை

இங்கு ஒரு கேள்வியை முன்வைத்துக் கொள்ளலாம். அமெரிக்கா, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகள் ஒதுக்கீடு செய்ததைப்போல், இந்தியாவால் ஒதுக்கீடு செய்ய முடியுமா, அதன் பொருளாதாரம் அந்த அளவுக்கு வலுவாக உள்ளதா என்று. ஒரே பகுதியில் இருக்கும் வசதி படைத்த வீட்டையும், ஏழ்மையில் உள்ள ஒரு குடும்பத்தையும் கற்பனை செய்துகொள்வோம். இரு பிரிவினரையும் தாக்கும் வகையில் பொதுவான ஒரு பிரச்சினை வருகிறது. அதை வசதிபடைத்த குடும்பம் தன் பணத்தின் வழியே எளிதாக எதிர்கொள்கிறது. ஆனால் ஏழைக் குடும்பத்தால் என்ன செய்ய முடியும்? அமெரிக்காபோல் இந்தியாவால் பெரும் நிதி ஒதுக்கிவிட முடியாது. ஆனால் இந்தியா தன்னளவில் செய்யக்கூடிய விஷயங்கள் என்று சில இருக்கின்றன.

தன் குடிமக்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தி தருதல் அவற்றில் மிக முக்கியமானது. இது நாட்டின் நிதி ஆதாரம் சம்பந்தப்பட்டது அல்ல; மாறாக, நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது. இவ்வரசு அதை கைக்கொள்ளத் தவறுகிறது. நிவாரண ஒதுக்கீட்டில் உள்ள போதாமை ஒருபுறம் இருக்கட்டும்; உணவு இன்றி தவிக்கும் மக்களை அரசு கையாளும் விதமே மிக மோசமாக இருக்கிறது. உச்சமாக, உத்தரபிரதேசத்தில் தங்கள் ஊர்களுக்கு திரும்பிய அடித்தட்டு உழைப்பாளிகளை, அவ்வரசு மாடுகள்போல் அமரவைத்து அவர்கள்மேல் மருந்துத்தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்கிறது. அடிப்படையில் ஒரு அரசுக்கு தன் மக்கள்மீது பெரும் கருணை தேவை. வெற்று பாவனைப் பேச்சுகள்
இன்றி, உளப்பூர்வமான அக்கறையின் வழியே மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடிச் சூழலில் அரசு தங்குமிடங்களுக்கும், உணவு விநியோகத்துக்கும் தெளிவான திட்டமிடலுடன் உரிய வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எவ்வித அடையாள அட்டையின் தேவையின்றி, அனைவருக்கும் உணவு கிடைத்திட வழிவகை செய்திருக்க வேண்டும். ஒரு அரசு என்ற அமைப்பின் அடிப்படைக் கடமையே இதுதான். இது தவறும்பட்சத்தில்தான் அந்நாட்டின் குடிமகனுக்கும் அரசுக்குமான தொடர்பு என்பது என்ன? என்ற கேள்வி எழுகிறது.

இது வரலாற்றுத் தருணம்

சமீப ஆண்டுகளாக உலகளாவிய அரசியல்போக்குகள், காலநிலை அழிவு, ஏற்றத் தாழ்வுகள், வன்முறை என உலகம் கொதி நிலையை எட்டி இருந்தது. தற்போது நாடுகள் முடங்கி இருப்பது வரலாற்றில் புதிய நிகழ்வல்ல. நோய்ப் பரவல், தீவிரவாதத் தாக்குதல், அணு அழிவு என பல்வேறு அழிவுக் காலகட்டங்களில் உலகம் முடக்கத்தை சந்தித்து இருக்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இதுபோலான பேரழிவு காலகட்டம் உருவாகியிருக்கிறது.

அதைத் தொடர்ந்தே சமூகம், அரசியல், பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பிளேக் நோய்க்குப் பிறகு மதங்களின் மீதான நம்பிக்கை தளர்வுற்றதைப்போல, அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு அரசமைப்பிலிருந்து மதம் நீக்கப்பட்டதைப்போல, இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து, நாடுகளின் எல்லைகள் புதிய வரையறைகளுக்கு உள்ளானதைப்போல, தற்போது உலகம் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய வரலாற்றுக் காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல!


நடந்து செல்லும் நாடுCorona virusCoronaஇந்திய யதார்த்தம்வெளிமாநிலத் தொழிலாளர்கள்தொழிலாளர்களின் நிலைபிறநாடுகள்கையாண்ட விதம்இந்தியா கையாண்ட விதம்இந்தியாவின் பிழைவரலாற்றுத் தருணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author