

எனது நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கு அவரது பங்காளிகள் சிலர் அவர்களது குலக்கோவிலின் குடமுழுக்கிற்குப் பணம் திரட்ட வந்திருந்தனர். நண்பர் சாதாரண வேலையிலிருப்பவர். மாதம் ரூ.30,000 சம்பளம். வாழ்ந்து கெட்ட குடும்பம். வந்தவர்கள் அண்ணே நீங்கள் நல்லா செய்யவேண்டும் என்றனர். இதுவரை யார் யார் என்ன கொடுத்துள்ளார்கள் என்று கேட்டதற்கு ஒருவர் 50,000 என்றும் மற்றவர்கள் 5,000 முதல் 25,000 வரையென்றும் கூறினார்கள். அப்ப ரூ.50,001 ஆக எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அவர்கள் சென்றபின் தற்போதுள்ள நிலைமையில் நீங்கள் குறைத்து எழுதி இருக்கலாமே என்று கேட்டேன். அட போப்பா, எங்கள் பரம்பரை என்ன தெரியாதா? புதுப்பணக்காரன் எல்லாம் ஆட்டம் போடுகிறான். விட்டுக் கொடுக்க முடியுமா, கடன் வாங்கியாவது நான் கொடுப்பேன் என்றார்.
நாம் கொடுக்கும் தர்மத்தை எது முடிவு செய்கிறது என எண்ணிப் பார்த்தால் பலமுறை வேடிக்கையாகவும் சில முறை வேதனையாகவும் இருக்கிறது.
ஒருவர் தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்றும் அதுவே பொருளைப் போற்றிக் கொண்டாடும் நெறியாகும் என்கிறார் வள்ளுவர். குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரோ வருமானத்தில் 25% தர்மம் என்கிறார். வருமான வரியிலேயே 10% முதல் 30% போய்விடும் இக்காலத்தில் எல்லோருக்கும் இது சாத்தியப்படாதுதான்.
அளவறியாமல் அதிகம் கொடுப்பவர்களால் அல்ல இன்றைய பிரச்சினை. பணமிருந்தும் அதில் கொஞ்சத்தையாவது மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாமே என்று எண்ணி உதவகின்ற உள்ளங்கள் இல்லாததுதான் தற்போதைய பிரச்சினை. சற்றே எண்ணிப்பாருங்கள் யாரும் இந்த உலகிற்கு எதையும் கொண்டுவருதில்லை. இங்கிருந்து எடுத்துப் போகவும் முடியாது. ஒருவனிடம் பணம் அதிகம் சேருகிறது என்றால் அது சமூகத்திலிருந்து கிடைப்பது தானே. அதைத் திருப்பிக்கொடுப்பது தானே முறை?
உலகெங்கும் தற்பொழுது வர்த்தக நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்வு (CSR) எனும் அணுகுமுறை வந்துள்ளது. இந்தியாவில் கம்பெனி சட்டத்தின்படி குறிப்பிட்ட அளவு நிதிநிலை உள்ள நிறுவனங்கள் தங்களின் முந்தைய மூன்றாண்டுகளின் சராசரி லாபத்தின் இரண்டு சதவீதமாவது இதற்குச் செலவிடவேண்டும்.
பெரிய தர்மம் செய்வதற்கு நல்ல வருமானம் வேண்டும். ஆனால் சின்னச்சின்ன உதவிகள் செய்ய நல்ல மனம் இருந்தால் போதுமே! கண்தானம் எல்லோராலும் முடிந்ததுதானே. நாம் இறந்தபின் உடலை எரிக்கவோ புதைக்கவோ போகிறார்கள். கண்தானத்தால் ஒருவருக்குக் கண்பார்வை கிடைக்கட்டுமே.
ரத்ததானம் உயிரையே காப்பாற்றும். என்னைக் கேட்டால் ரயிலில் கீழ் பர்த்தை கூட கேட்காமல் விட்டுக்கொடுப்பதும் காரில் லிஃப்ட் கொடுப்பதும் யாரும் எளிதில் செய்யக்கூடிய தர்மம் என்பேன். எது எது முடியுமோ அதையெல்லாம் கொடுத்து விடுவோம்! மகிழ்ச்சி பெறுவோம்!
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி -குறள் 477
somaiah.veerappan@gmail.com