

நம்மில் பலருக்கும் விமானப் பயணம் என்பதே சொகுசுதான். அந்த நிலைமையில்தான் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். அதனாலேயே எகானமி வகுப்பு மட்டுமே கொண்டிருக்கும் விமான நிறுவனங்கள் பல உள்ளன. எகானமி வகுப்பில் இருந்து பிஸினஸ் வகுப்பு செல்வதற்கே நம்மிடைய பணமும் மனமும் இல்லாதால் `பிரீமியம் எகானமி’ என்று புதிய பிரிவினை சமீபத்தில் டாடா குழு நிறுவனமான விஸ்தாரா நிறுவனம் அறிவித்தது.
நிலைமை இப்படி இருக்க, அபுதாபியில் இருந்து நியூயார்க் செல்வதற்கு 32,000 டாலர் (ரூ 20.50 லட்சம்) கட்டணத்துடன் எதியாட் விமான நிறுவனம் புதிய சேவையை வழங்க இருக்கிறது. இதற்கு எதியாட் ரெஸிடென்ஸ் பெயரில் இந்த சேவை வழங்கப்படுகிறது. சாதாரணமாக இந்த வழித்தடத்தில் செல்வதற்கு ஆகும் விமானக் கட்டணத்தை விட 26 மடங்கு கட்டணம் அதிகம்.
இந்த போக்குவரத்து வரும் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே அபுதாபி லண்டன் இடையே இந்த சேவை இருந்து வருகிறது. இப்போது இது இப்பகுதிக்கு விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.
என்ன இருக்கிறது?
அப்படி என்ன இருக்கிறது என்பதுதான் அனைவருக்கும் உள்ளான கேள்வியே. இரண்டு பேர் பயணம் செய்வதற்கு ஏற்ப லிவிங் ரூம், குளியல் அறை மற்றும் படுக்கை அறை என மூன்று அறைகள் உள்ளன. 125 சதுர அடிக்கு இந்த அறை உள்ளது. இவர்களுக்கு சேவை செய்ய ஒருவர், உணவு தயாரிக்க ஒரு செப் என பயணிகளுக்கு வசதிகள் செய்துகொடுக்க தனித்தனி ஆட்கள் இருக்கிறார்கள்.
இவ்வளவு காசு கொடுத்து யார் முன்பதிவு செய்வார்கள் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆனால் இதற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் முதலாவது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு சிறப்பாக இருப்பதாகவும் எதியாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் தெரிவித்திருக்கிறார்.
இந்த சேவைக்கான 10 ஏர்பஸ் விமானங்களை எதியாட் வாங்கி இருக்கிறது. ஆறு வருட ஆராய்ச்சிக்கு பிறகு இதுபோன்ற விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் நியூயார்க் தவிர மற்ற நகரங்களுக்கு இந்த சேவை கிடையாது என்று அறிவித்துவிட்டாலும் உலகின் மற்ற நகரங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கிறது எதியாட்.
இங்கு நிம்மதியாக வாழ்வதே சாதனையாக இருக்கும் போது இதையெல்லாம் பார்க்கத்தான் முடியும் போல...?