Published : 23 Mar 2020 09:20 am

Updated : 23 Mar 2020 09:20 am

 

Published : 23 Mar 2020 09:20 AM
Last Updated : 23 Mar 2020 09:20 AM

இது முதலீடு செய்யும் தருணமா?

investing-moment

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

ஓர் அணு அளவு வைரஸ் இன்று உலகையே உலுக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இதைத் தன் பிரதான எதிரியாக்கி அதிலிருந்து விடுபடும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. சமூக வலைதளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களின் பிரதான செய்தியாக வலம் வருவது வைரஸ்தான்.


சீனாவில் ஆரம்பித்து இத்தாலி, ஜெர்மனி, கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தலைதூக்கி வெளிநாடு சென்று திரும்பி வந்தவர்களால் இந்தியாவிலும் புகுந்தது. மத்திய, மாநில அரசுகள் துரித கதியில் இயங்கி அதிகம் பரவாமல் தடுப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் உயிர்ச்சேதம் அதிகமில்லை என்றாலும், வைரஸ் பரவலும், தாக்குதலின் பீதியும் அதிகரித்திருப்பதால், நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் சற்றே முடங்கத் தொடங்கியிருக்கிறது.

இது நீடிக்கும்பட்சத்தில் பொருளாதார சேதம் பெரிய அளவில் நீண்ட காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி-இறக்குமதி, சிறு தொழில் அமைப்புகள், அமைப்பு சாரா தொழில்கள், சுற்றுலா, பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள் போன்றவை பெரும் பாதிப்புக்கு உட்படுகின்றன. இதில் பணிபுரியும் தொழிலாளர்களும் இதன் சுழல் விளைவில் வருமானம் இழந்துள்ளனர்.

ஏறக்குறைய அடுத்த 18 மாதங்கள் சற்று கடினமான காலமாகவே இருக்கும். மேலும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துகொண்டிருக்கிறது. வங்கித் துறைகளின் நிலை மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில் சேமிப்பு மற்றும் முதலீடுகளை நாம் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பது முக்கியம். காரணம், நெருக்கடி காலங்களில் சிக்கல்களும் வாய்ப்புகளும் கலந்தே வரும்.

உடற்பயிற்சியில் செய்யும் முதலீடு ஆரோக்கியத்தையும், தொழிலில் போடும் உழைப்பு வெற்றிகளையும் கொடுப்பதுபோல, நம்மிடமுள்ள பணத்தை சிறந்த முறையில் முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தையும், பொருளாதார சுதந்திரம் என்ற இலக்கையும் அடைய முடியும். இன்று சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எந்த முதலீட்டுத் திட்டம் சிறந்தது? நமக்காக நம் பணம் எப்போது வேலை செய்யும்?

தங்கம்

தங்கம், இன்றும் என்றும் ஒரு சாமானியனின் கடைசி காப்பரணாக விளங்குகிறது. நிதி நெருக்கடி ஏற்படும் காலகட்டங்களில் எளிதில் ரொக்கமாக மாற்றலாம் என்பதே இதற்கு காரணம். இதனால் தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. மட்டுமல்லாமல், இந்தியாவில் “தாலிக்குத் தங்கம்”, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆபரணங்கள் அன்பளிப்பு, பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குதல் என்று நம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையோடு தங்கம் ஒன்றியே காணப்படுகிறது. இதனால் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

ஒரு ஆண்டுக்குள் சுமார் 26% விலை உயர்ந்த தங்கம் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் ரொக்கத்திலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்கிற வாய்ப்பும் இருக்கிறது. தற்போது தங்கத்தை நிஃப்டி கோல்டு என்ற பாண்டு பத்திரங்களாக (NIFTY GOLD BOND) வாங்கலாம்.

பங்குச்சந்தையில், தங்கத்தைப் பத்திரங்களாக வாங்குவதால், தங்கத்தின் விலை ஏறும்போது, அந்த முதலீடு அதிக லாபம் பெற்றுத்தரும். எட்டு வருடங்கள் முதிர்வுகொண்ட இந்த பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவருகின்றன. அதன் முடிவில், அன்றைய விலையைக் கொடுத்து, அரசு தங்கப் பத்திரங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும். வட்டிக்கு எந்த வரிப்பிடித்தமும் இல்லை. அரசே செயல்படுத்தும் திட்டம் என்பதால், நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் உறுதி.

பங்குச்சந்தை

சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை இருப்பதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை சரிந்திருக்கிறது. சில பங்குகள் ஓராண்டு குறைவுக்கும் சில பங்குகள் வரலாற்று குறைவுக்கும் சரிந்துள்ளன. இவற்றில் புளூ சிப் என்று சொல்லப்படும் முன்னணி பங்குகளை வாங்கும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இருப்பினும், பங்குகளை வாங்கிய பிறகு, பொருளாதாரத்தில், அந்தக் குறிப்பிட்ட துறையில் மற்றும் அந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நஷ்டம் ஆகிவிடக்கூடும். முதலீடு செய்வதற்கான நல்ல பங்குகளை அடையாளம் காண்பது மிகக் கடினம். எதிர்காலத்தில் நன்கு வளர்ச்சியடையும் பங்குகளை உங்களால் அடையாளம் காணமுடிந்தால் நீங்கள் பங்குசந்தையில் முதலீடு செய்யலாம். எனக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. இந்த நிலையில் என்ன செய்வது? என்பவர்களுக்கான முதலீடுதான் மியூச்சவல் ஃபண்ட்.

மியூச்சவல் ஃபண்ட்

மியூச்சவல் ஃபண்டும் பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து பெறும் லாப நஷ்டம் மாறுபடும். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தொகையை மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ என்று சொல்லப்படும் ஒரு நிலையான தவணைத்தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வருவது பெரும்பாலானவர்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. தற்போது பங்குகளுடன் இணைந்த வரி சேமிப்பு திட்டமான ELSS முறையும் சந்தையில் உள்ளது. ஒருவிதமான மியூட்சுவல் பண்ட் திட்டமான இதன் மூலம் வரியை சேமிப்பதுடன் அதிக வருமானமும் பெறலாம்.

ஸ்டார்ட்-அப்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது சற்று ரிஸ்க்தான் என்றாலும் லாபகரமானதும் கூட. பொதுவாக 10 ஸ்டார்ட்அப்பில் 6 தோல்வியைச் சந்திக்கிறது. உண்மைதான். பிளிப்கார்ட் நிறுவனம் துவங்கும் போது பங்குகள் பெற்ற அதன் ஊழியர்கள் தற்போது கோடிஸ்வரர்களாக இருக்கின்றனர். பிரபலமான முதலீட்டாளர்களான ரத்தன் டாடா மற்றும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போன்றோர் ஸ்டார்ட்அப்தான் அதிக லாபம் தரும் முதலீடு என நம்பினர். ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு என்பது ஆபத்தானது என்பதால், அதிகப் பணமும், ஆபத்தை எதிர்கொள்ளும் திறனும் இருப்பவர்கள் துணிந்து முதலீடு செய்யலாம்.

அசையா சொத்து

‘மண்ணுலயும் பொன்னுலயும் போடுற பணம் வீண்போகாது’ என்பது பழமொழி. தங்கத்தைப் போலவே லாபம் தரக்கூடிய முதலீடுகளில் ஒன்று நிலம். காலி மனை, வீடு போன்றவை காலம் காலமாக முதலீடு செய்யப்பட்டு பல மடங்கு விலை உயர்ந்து காட்டியவை. ஆனால் அசையாச் சொத்துக்களை நினைத்தபோது நல்ல விலைக்கு பணமாக்க முடியாது. மேலும், பட்டா, மனை அங்கீகாரம், பாதுகாத்தல் எனச் சில சிக்கல்களும் உள்ளன.

சமீபத்தில் நவீன ரியல் எஸ்டேட் முறையும் (Real Estate Investment Trust – REITS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறைந்த பட்சம் 200 சதுர அடி நிலம் வாங்க வேண்டும். அதனை பொறுத்து விலை உயரும் மற்றும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாடகையும் கிடைக்கும். மேலும் இதனை எளிதில் விற்று ரொக்கமாக மாற்ற முடியும். இந்தச் சொத்தை பங்குச் சந்தையில் வாங்கும்போது குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும்.

வெளிநாட்டு வங்கி/பங்குச்சந்தை முதலீடு:

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைப் போல, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்கள் சிலருக்கு, வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும். உயர்ந்து வரும் டாலர் மதிப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வெளிநாட்டு வங்கிகளின் குறைந்த கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

அங்கீகாரம் பெற்றுள்ள வெளிநாட்டு பங்குச்சந்தைகளில், பட்டியலிடப்பட்ட வெளி நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது அவசியம். ஒவ்வொரு நிதியாண்டும் இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் எடுத்துச் செல்ல ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது

மெய்நிகர் நாணயம் (கிரிப்டோ கரன்சி)

தொழில்நுட்பத்தில் விஸ்வரூப வளா்ச்சி என்றால் அது கிரிப்டோ கரன்சிதான். மின்னணு பரிவர்த்தனையின் உச்சமே இது. மின்னணுப் பணப் பரிவா்த்தனையாக இருந்தாலும், அத்தகைய பரிவா்த்தனைகளைப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும் மெய்நிகா் நாணயங்கள் வங்கிகளை நம்பியிருப்பதில்லை. அதற்குப் பதிலாக, தனி நபா்களுக்கு இடையிலான நேரடி தொடா்பிணைப்புகள் மூலம் மெய்நிகா் நாணயங்களை எங்கும், எவருக்கும், எந்த நேரத்திலும் பணம் அனுப்ப முடியும்.

பொதுவான இணையதள கணக்குப் பதிவேட்டில் உங்கள் கணக்கு பதிவு செய்யப்படுகிறது. உங்களது மெய்நிகா் நாணயம், மின்னணுத் தகவல்களாக உங்களது பிரத்யேக இணையதள பணப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது ஒரு புதுவிதமான கரன்சி என்பதால் இதன்மீது நம்பிக்கை ஏற்பட சற்று காலம் பிடிக்கும். எனவே கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்வதில் கவனம் தேவை.

வங்கி டெபாசிட்

எந்தவிதமான அபாயமும் அச்சுறுத்தலும் இல்லாமல் காலம் காலமாக நம்பப்பட்டு வருவது வங்கி டெபாசிட். இருப்பினும் சமீபகாலமாக எஸ் வங்கி உட்பட பல்வெறு வங்கிகள் பிர்ச்னைகளுக்கு ஆளாவதால் வங்கிகளின் மீது நம்பிக்கை மக்களுக்கு வெகுவாகக் குறைந்துள்ளது.

இருப்பினும் கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் வங்கியில் போடப்படும் டெபாசிட்டிற்கான காப்பீடு ரூ. ஒரு லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தியதைப் பொதுமக்கள் நல்ல முறையில் உபயோகப்படுத்தலாம். உங்களது டெப்பாசிட்டுகளை ஒரே வங்கியில் போடாமல் 20 வங்கியில் பிரித்து போடும் பட்சத்தில் ஒரு கோடி ரூபாய் வரை உங்களுக்கு அரசு காப்பீடு உள்ளது. எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வங்கி டெபாசிட் இருக்கும்.

எதிர்பாராத இடா்களை எதிர்கொள்ளும் பண வலிமையும், மன வலிமையும் உங்களுக்கு இருந்தால் தாராளமாக எந்தத் திட்டத்திலும் துணிந்து முதலீடு செய்யலாம். உங்களது வருமானம், ரிஸ்க் எடுக்கும் திறன், வயது, பின்னணி, உங்களுடைய இலக்கு ஆகியவற்றை வைத்து உங்களது முதலீடுகளைத் தீர்மானிக்க வேண்டும். “ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்காமல்” பிரித்து வைத்தால் பலனை எதிர்பார்க்கலாம். நெருக்கடி காலங்களில் நிதானமும், பொறுமையும் இருந்தால் பின்னால் வருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது.


வைரஸ்சீனாஇத்தாலிஜெர்மனிகொரியாஅமெரிக்காதங்கம்பங்குச்சந்தைமியூச்சவல் ஃபண்ட்அசையா சொத்துசொத்துவங்கி டெபாசிட்டெபாசிட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author