Published : 23 Mar 2020 09:10 AM
Last Updated : 23 Mar 2020 09:10 AM

நவீனத்தின் நாயகன் 19: மூன்றாம் ஸ்டார்ட்-அப்

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஜீரோவை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட்டிங் என்னும் அண்ணாச்சி டெக்னிக், பிசினஸ் தொடங்குவோரும், பிசினஸ் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோரும் அறிய வேண்டிய மேனேஜ்மென்ட் கொள்கை. பெயரைப் பார்த்தால் மிரட்டலாம். பயப்படாதீர்கள். எளிமையாக விளக்குகிறேன். கேட்டபின், ``ஜூஜூபி, இத்தனைதானா?” என்பீர்கள்.

நீங்கள் மளிகைக்கடை தொடங்க நினைக்கிறீர்கள். மொத்தப் பணம் கையில் இல்லை. வங்கியிடம் கடன் கேட்கிறீர்கள். வங்கி மேனேஜர் கேட்கும் முதல் கேள்வி, ``உங்கள் பிராஜெக்ட் ரிப்போர்ட் கொண்டுவாருங்கள்.” அதில் என்னென்ன இருக்க வேண்டும்? வரவு, செலவு விவரங்கள், லாபம், தேவையான முதலீடு. அடுத்த 5 அல்லது பத்து வருடங்களுக்கு இவை எப்படி வளரும் என்னும் மதிப்பீடு. உங்கள் ஆடிட்டரிடம் போகிறீர்கள்.

உங்கள் ஏரியாவில் இருக்கும் பல மளிகைக்கடைகள் பற்றிய விவரங்கள் அவர் விரல் நுனியில். இந்த அடிப்படையில், கடை வாடகை, தேவைப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம், மின்சாரச் செலவு, மளிகைப்பொருட்கள் வாங்கும் விலை, பிற உதிரிச்செலவுகள் ஆகியவற்றைக் கணிக்கிறார்.

ஒவ்வொரு பொருளுக்கும் என்ன விலை வைத்தால் வியாபாரம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறார். உத்தேச விற்பனையும், லாபமும் கிடைக்கின்றன. வங்கி மேனேஜர் கையில் ரிப்போர்ட். அவரோடு பல சந்திப்புகள். கடன் கையில். மங்கல நாதஸ்வரம் இசைக்க, உங்கள் மனைவி குத்து விளக்கேற்றுகிறார். உங்கள் ஸ்கூல்டீச்சரின் ராசிக்கைகளால் போணி. சரவணனைச் சந்திக்கும்வரை முனைவர்கள் எல்லோரும் இப்படித்தான் பிசினஸ் பட்ஜெட் என்னும் வரவு –செலவு கணக்குப் போடுவார்கள் என்று நினைத்தேன்.

சரவணன் நெல்லை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். அவர் கிராமத்துக்காரர் நடத்திய `முருகன் ஸ்டோர்ஸில்' 20 வருட அனுபவம். சொந்தக் கடை தொடங்கும் ஆசை. என் நண்பர் ஆடிட்டர் ரெங்கராஜனிடம் வந்தார்.

பத்தே நாட்களில் ரெங்கராஜன் ரிப்போர்ட் தயார் செய்து கொடுத்தார். சரவணன் கேட்டவை பல நூறு கேள்விகள். உதாரணமாக, “கடை வாடகை ரொம்ப அதிகமா இருக்குதே? மெயின் ரோடில் மட்டுமே அத்தனை வாடகை. பின்புற ரோட்டில் கடை திறந்தால் வாடகை கணிசமாகக் குறையும்.”

“எதுக்கு சார் நாலு பசங்க? மூணு பேர் போதும். நான் கூடமாட ஹெல்ப் பண்ணுவேன்.”``ஒவ்வொரு பையனுக்கும் மாசம் 4,000 ரூபாய் சம்பளமா எடுத்திருக்கீங்க. நான் எங்க கிராமத்திலிருந்து பசங்க ளைக் கூட்டியாறேன். அங்கே சும்மாதான் இருக்காங்க. 2,000 ரூபாய் சம்பளம், தங்கும் வசதி, சாப்பாடு கொடுத்தாப் போதும். தலைக்கு 3,000 ரூபாயைத் தாண்டாது.” சரவணன் சொன்னபடி ரெங்கராஜன் ரிப்போர்ட் எழுதினார். போட்டிக் கடைகளைவிட மலிவு விலை; அதிக வியாபாரம்; அதிக லாபம். இதுதான் சரவணன் போன்ற அண்ணாச்சிகளின் அணுகுமுறை.

பீட்டர் ஃபிர் (Peter Pyrrh) என்பவர் அமெரிக்காவில் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் (Texas Instruments) கம்பெனியில் அக்கவுன்ட்டிங் மேனேஜராக இருந்தார். 1969–ம் ஆண்டு `ஜீரோவை அடிப்படையாகக்கொண்ட பட்ஜெட்டிங்' (Zero-based Budgeting) கொள்கையை உருவாக்கினார். வரவு செலவு கணக்குகள் போடும்போது, பிறருடைய விவரங்களை எடுத்தால், அவர்களின் திறமைகள், திறமையின்மைகள் அவற்றில் பிரதிபலிக்கும். மாறாக, உலகில் யாருமே இதுவரை இந்த பிசினஸ் செய்ததில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டும். அப்போது, ஒவ்வொரு வரவு செலவையும் கேள்வி கேட்டுத்தான் ஏற்றுக்கொள்வோம். பிசினஸில் நம் தனித்துவம் தெரியும். இதைத்தான் சரவணன் அண்ணாச்சி செய்தார்.

ஈலான் இதையேதான் செய்தார். கேள்விகள், கேள்விகள், கேள்விகள். தேடல், தேடல், தேடல். ரஷ்யா விற்கும் விலையைவிடத் தன் உற்பத்திச் செலவு குறைவு என்று அவர் திருப்திப்படவில்லை. நாசா விஞ்ஞானிகள், விமானத் தயாரிப்புக் கம்பெனிகளின் ஊழியர்கள் அல்லது விண்வெளி ஆராய்ச்சி ஆர்வலர்கள் யாராவது ராக்கெட் தயாரிக்கும் வல்லமை கொண்டவர்களாக இருக்கிறார்களா என்று தேடினார்.

கிடைத்தார் ஒருவர் – டாம் மியூலர் (Tom Mueller). பல விமானத் தொழிற்சாலைகளில் உற்பத்தி அனுபவம். சனி, ஞாயிறுகளில், சிறிய ராக்கெட்கள் தயாரித்து வானில் விடும் பொழுதுபோக்கு. அனைத்துக்கும் மேலாக, அரசாங்கமும், விமான கம்பெனிகளும் வீண் செலவுகள் செய்து காசைக் கரியாக்குகிறார்கள் என்னும் எண்ணம்.

ஈலானும், மியூலரும் ஒரே சிந்தனை அலைவரிசையில். அடிக்கடி சந்திப்புகள், கருத்துப் பரிமாற்றங்கள், பரிசோதனைகள். தன் 30 மில்லியன் பட்ஜெட்டில் சில ராக்கெட்கள் விடலாம் என்னும் நம்பிக்கை வந்தது. இதைத் தகர்க்கவே வந்தார்கள் பலர். நிஜமாகவே நல்ல எண்ணமோ, அல்லது இவன் ஜெயித்துவிடக்கூடாதே என்னும் பொறாமையோ? புள்ளிவிவரங்களை எடுத்துவைத்தார்கள். 1957 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா செலுத்திய ராக்கெட்கள் 400. இவற்றுள் 100 பாதிவழியிலேயே எரிந்து சாம்பலாயின. நவீனத் தொழில்நுட்பமும், அதித் திறமைசாலி வல்லுநர்களும் கொண்ட நாசாவுக்கே இந்த நிலை. ஈலான் விண்வெளித் துறையில் கத்துக்குட்டி.

ஆகவே, ராக்கெட்கள் எரிந்துபோகும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். இந்த வீடியோக்களை காட்டி அவரைப் பயமுறுத்தினார்கள். ஈலான் இந்த சலசலப்புகளுக் கெல்லாம் அஞ்சாத பனங்காட்டு நரி. திட்டமிட்டுத்தான் அடியெடுத்து வைப்பார். அதே சமயம், களத்தில் குதித்துவிட்டால், பின்வாங்குவதை நினைத்துக் கூடப் பார்க்கமாட்டார்.

ஜூன் 2002. `ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜீஸ்' (Space Exploration Technologies) கம்பெனி தொடங்கினார். சுருக்கமாக `ஸ்பேஸ் எக்ஸ்'. விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள் என்று அர்த்தம். 1995–ல் `குளோபல் லின்க் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க்', 1999–ல் `எக்ஸ்டாட்காம்' (X.com). இப்போது மூன்றாவது ஸ்டார்ட் அப்.

எளிமையான ஆரம்பம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில், 75,000 சதுரஅடி கொண்ட ஒரு பழைய சரக்குக் கிடங்கு கிடைத்தது. ஈலானின் தொற்றும் உற்சாகம் பலருக்குள் தூங்கிக்கிடந்த கனவுகளைத் தட்டி எழுப்பியது. அமெரிக்க ராணுவம் பல ஆண்டுகளாகக் குறைந்தவிலை ராக்கெட்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நாசா செவி சாய்க்கவேயில்லை. இதனால், ராணுவ உயர் அதிகாரிகள் `ஸ்பேஸ் X'-க்குத் தார்மீக ஆதரவு தந்தார்கள். விஞ்ஞானிகளும், எஞ்சினீயர்
களும் கம்பெனியில் வந்து சேரத் தொடங்கினார்கள்.

ஈலானுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். ஃபாக்டரி சுவர்கள் வெள்ளை. கான்க்ரீட் தரையின் மேல் வெள்ளை பிளாஸ்டிக் பெயின்ட். அவருக்குச் செய்யும் தொழிலே தெய்வம். எந்திரங்கள் சப்ளை வரும்போது, லாரியிலிருந்து கீழே இறக்க அவரே கை கொடுப்பார். கம்பெனியின் வருங்காலப்பாதை பற்றி ஈலான் தெளிவாக இருந்தார். `ஸ்பேஸ் X' என்ஜின் மட்டுமே தயாரிக்கும்; பிற பாகங்கள் அத்தனையும் வெளியாரிடமிருந்து. முதல் ராக்கெட்டின் பெயர் `ஃபால்கன் 1' (Falcon 1). ஸ்டார்வார்ஸ் சினிமாவில் வரும் விண் ஊர்தியின் பெயர் ஃபால்கன். இதுதான் பெயர்க் காரணம். 15 மாதங்களில் அதாவது நவம்பர் 2003–ல்
தயாராகும்.

உற்பத்திச் செலவு 6.9 மில்லியன் டாலர்கள். இது பகல் கனவு என்று எல்லோரும் நினைத்தார்கள். ஏன் தெரியுமா? அன்றைய காலகட்டத்தில், அனுபவசாலிகளான நாசா போன்றவர்களின் உற்பத்திச் செலவு 30 மில்லியன். புது ராக்கெட்டை வடிவமைத்துத் தயாரிக்க எடுத்த நேரம் 10 வருடங்கள்! ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னார், “வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புள்ளி. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் இந்தப் புள்ளிகளுக்குள் இருக்கும் தொடர்பு புரியும். இந்தப் புள்ளிகள் எப்படியாவது சந்திக்கும் என்று நாம் நம்ப வேண்டும். இதற்குக் காரணம் உள்ளுணர்வு, விதி, வாழ்க்கை, கர்மா என்று பல காரணங்களைச் சொல்லலாம்''. இந்தக் காலகட்டத்தில் ஈலான் வாழ்க்கையிலும் கர்மா புதிய புள்ளிகள் போடத் தொடங்கியிருந்தது.

ஜூன் 2001. தீல் கம்பெனியின் பெயரை `X.com' என்பதிலிருந்து `பே பால்' (PayPal) என்று மாற்றினார். பணம் அனுப்புவதற்கான நண்பன் என்று அர்த்தம். பழைய பெயர், நடத்தும் பிசினஸைப் பிரதிபலிக்கவில்லை என்னும் காரணமோ, ராசியில்லை என்பதாலோ, அல்லது ஈலான் வைத்த பெயரை மாற்றும் காழ்ப்புணர்ச்சியோ, தெரியவில்லை. இப்போது தொழில் நுட்பக் கம்பெனிகளுக்குச் சோதனைக்காலம் வந்தது. `டாட்காம்' என்று அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இன்டர்நெட் கம்பெனிகள் திவாலாயின. துணிச்சல் முதலீட்டாளர்கள் காணாமல் போனார்கள். இதே சமயம், `X.com'–க்குப் பணம் தேவைப்பட்டது.

தருவார் யாருமில்லை. ஈலான் ரிஸ்க் எடுத்தார். தன் சேமிப்பிலிலிருந்து தொடர்ந்து முதலீடு செய்துகொண்டேயிருந்தார். பெரும்பான்மைப் பங்குகள் அவர் வசம். அவர் நினைத்திருந்தால், இயக்குநர் குழுவைக் கைப்பற்றி, தீலை நீக்கம் செய்து அங்கே அமர்ந்திருக்கலாம். செய்யவில்லை. காரணம்? அவருக்கு முக்கியம் தன் பதவியல்ல, தான் தொடங்கிய கம்பெனியின் வருங்காலம். அவர் கையிருப்பு கரைந்துகொண்டே வந்தது. டாட்காம் பிரச்சினையால் வெளி முதலீட்டாளர்களும் இல்லை. X.com- ஐத் தொடர்ந்து நடத்தமுடியாத நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் ஈலான், தீல், லெவிச்சின் ஆகியோர் மனம் முழுக்க?

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x