Published : 23 Mar 2020 08:03 AM
Last Updated : 23 Mar 2020 08:03 AM

எம்ஜி மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜியின் வரவு என்பது பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். அதன் மாடல்கள் அந்த அளவுக்கு வித்தியாசமாக இருப்பதே அதற்கு காரணம். இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற வகையில் எம்ஜி ஹெக்டர் களம் இறக்கப்பட்டு ஒட்டுமொத்த கார் பிரியர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. தொழில்நுட்பம், வசதி, டிசைன் என அனைத்திலுமே தனித்து நின்றது. தற்போது தனது இரண்டாவது மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் உள்ளது. எலெக்ட்ரிக் மாடல் என்றாலும் தோற்றத்தில் கம்பீரமாகவே இருக்கிறது. ஒமேகா வடிவ எல்இடி டிஆர்எல் விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப் ஆகியவை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது தேம்ஸ் நதி ஓரத்தில் இருக்கும் ‘லண்டன் ஐ’ எனப்படும் பிரம்மாண்ட சக்கரத்தின் தோற்றத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகி வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவித் துள்ளது. ஹெட்லேம்ப்களுக்கிடையே குரோம் வேலைப்பாடுகளுடன் கூடியகிரில் அமைப்பு அதில் எம்ஜி லோகோ ஆகியவை காரின் முன்பக்க தோற்றத்துக்கு அழகு சேர்க்கின்றன. கிரில்லை சுற்றி வரும் குரோம் லைனிங் ஹெட்லைட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது காருக்கு பிரீமியம் தோற்றத்தைத் தருகிறது.

பக்கவாட்டு சோல்டர் லைன் முன்புற ஹெட்லேம்ப்களில் தொடங்கி பின்பக்க டெயில் லைட்களுடன் இணைந்து தோற்றத்தை வலுப்படுத்துகிறது. இதன் 17 அங்குல அலாய் வீல்கள் பழைய டச்சு கால காற்றாலை காத்தாடிகளின் டிசைனில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரிக் மாடல் என்பதற்கான அர்த்தத்தைக் கொடுப்பதற்காக இந்த முயற்சிகளை எம்ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது எனலாம். பின்பக்கத்தில் எம்ஜி லோகோவுக்கு கீழே ‘Internet Inside' ‘ZS EV' ஆகிய பேட்ஜ்கள் உள்ளன.

இன்டீரியரைப் பொறுத்தவரை டேஷ்போர்ட் பிளாக் தீம் மற்றும் சில்வர் நிற ஹைலைட்களுடன் கவர்ச்சிகரமாக உள்ளது.

எலெக்ட்ரிக் என்றாலும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் தரப்பட்டுள்ளது. இதில் தேவையான கன்ட்ரோல்கள் அனைத்தும் ஓட்டுபவருக்கு வசதியாகப் பொருத்தப் பட்டுள்ளது.

ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன்8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் எம்ஜியின் ஐ-ஸ்மார்ட் 2.0 கனெக்டெட் டெக்னாலஜி வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுஹெக்டரில் உள்ள ஸ்மார்ட் கனெக்டிவிட்டியைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகும்.

டிரைவர் இருக்கை பவர் அட்ஜெஸ்டட் வசதியுடன் உள்ளது. மேலும் இருக்கைகள் மிக சொகுசான பயண அனுபவத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லா இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள் உள்ளன. டிரைவரும் முன்பக்க பயணியும் வசதியாக இருக்கும் வகையில் நடுவில் ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. அதன்கீழே ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

பின்பக்க இருக்கைகளில் இருப்பவரும் வசதியாக இருக்கும் வகையில் லெக்ரூம், ஹெட்ரூம் ஆகியவை வசதியுடன் உள்ளன. மேலும் பெரிய பானரோமிக் சன் ரூஃப், பெரிய விண்டோக்கள் வழங்கப்பட்டிருப்பது பயணத்தை மேலும் ரம்யமாக்குகின்றன.

48 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. மேலும் பின்னிருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடித்துக்கொள்ளலாம். இதன்மூலம் பூட் ஸ்பேஸை அதிகரித்துக்கொள்ள முடியும். எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என 2 வேரியன்ட்களில் iது கிடைக்கிறது. இதில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை உள்ளன. மேலும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.

இதில் 44.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மோட்டார் 141 பிஹெச்பி பவரையும், 353 என்எம் டார்க்கையும் தருகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.3 வினாடிகளில் அடைகிறது. பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ வரை பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x