வங்கிகளின் நம்பகத்தன்மை?

வங்கிகளின் நம்பகத்தன்மை?
Updated on
4 min read

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வங்கித் துறை சார்ந்து இரு பெரும் மோசடிகள். முதலில் ‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டறவு வங்கி’ (பிஎம்சி) ஊழல் காரணமாக ஆறு மாதங்களுக்கு அதன் செயல்பாட்டை முடக்கியது ரிசர்வ் வங்கி. அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மறுதினம் பிஎம்சி கிளைகளை மக்கள் சூழ்ந்தனர். அங்கு முதலீடு செய்திருந்தவர்கள் பெரும்பாலும் சிறு, குறு வியாபாரிகள், அடித்தட்டு மக்கள். 3

தங்கள் பணத்தை எடுக்க முடியாது என்ற செய்தியை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியில் ஐந்து பேர் உயிர் இழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அந்த நிகழ்வு முடிந்து சில மாதங்கள்கூட ஆகவில்லை, மீண்டும் அதேபோன்றொரு நிகழ்வு சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. ஆனால், இம்முறை பெரும் தொழில் அதிபர்களுக்கான ஒரு தனியார் வங்கியில்.

தனியார் வங்கிகளில் முதன்மையான 5 வங்கிகளில் ஒன்றாக திகழ்ந்த யெஸ் வங்கி, நிர்வாகப் பொறுப்பின்மையின் காரணமாக தற்போது திவால் நிலைக்கு ஆளாகி உள்ளது. இந்நிலையில் அவ்வங்கியை சீரமைக்கும் முயற்சியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது ரிசர்வ் வங்கி. அதன்படி மார்ச் 5 முதல் ஏப்ரல் 3 வரை அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத் தொகையிலிருந்து ரூ.50,000-க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தவிர, இவ்வங்கி புதிதாக யாருக்கும் கடன் வழங்கவும் கூடாது. யெஸ் வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு ரிசர்வ் வங்கி தனது பிரதிநிதியை நியமித்துள்ளது. தற்போதைய நிலையில் யெஸ் வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை. இந்தச் சூழலில் யெஸ் வங்கியை வாங்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்வந்துள்ளது. அதன்படி, யெஸ் வங்கியின் 49 சதவீதப் பங்குகளை எஸ்பிஐ வாங்க உள்ளது. அசுர வேகத்தில் வளர்ந்து வந்த ஒரு வங்கி எவ்வாறு இத்தகைய பாதாளத்துக்குச் சென்றது?

ஆரம்பம்

ராணா கபூர், அசோக் கபூர் ஆகிய இருவரால் யெஸ் வங்கி 2004-ம் ஆண்டு தொடங்கப்படுகிறது. அசோக் கபூரின் மனைவியின் சகோதரியைத்தான் ராணா கபூர் திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில் இருவரும் உறவினர். வங்கியின் தலைவராக அசோக் கபூரும், தலைமை நிர்வாக அதிகாரியாக ராணா கபூரும் பொறுப்பைப் பிரித்துக்கொண்டனர். குறுகிய காலத்திலேயே வங்கி பெரும் வளர்ச்சியை எட்டுகிறது. இந்தச் சூழலில் வங்கியின் போக்கையே மாற்றியமைக்கும் வகையிலான சம்பவம் ஒன்று 2008-ல் நடந்தது. மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் அசோக் கபூர் கொல்லப்படுகிறார். அதன் பிறகு வங்கியின் முழுக்கட்டுப்பாடும் ராணா கபூரின் கீழ் வருகிறது.

சூதாட்டக்களம்

தான் நினைத்ததை முடிக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் ராணா கபூர் என்று சொல்கிறார்கள். திவால் நிலையில் இருக்கும் நிறுவனங்கள், எந்த வங்கிகளும் கடன் அளிக்க முன்வராத நிறுவனங்கள் போன்றவற்றுக்குக் கடன் அளிப்பதே யெஸ் வங்கியின் தனிச் சிறப்பாக அடையாளப்படுத்தப்படுவது உண்டு. கடனுக்குப் பெறப்படும் முன்தவணைத் தொகை,
வட்டி இவற்றின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது ராணா கபூரின் கணக்கு.

கடனை வரைமுறையின்றி வாரி இறைக்கிறார் என்றால், அதற்கேற்றாற்போல் அதைத் திருப்பி வசூலிப்பதிலும் கடுமை காட்டுபவர். திவாலான ‘கிங்ஃபிஷர்’, ‘டெக்கன் கிரானிக்கிள்' போன்ற நிறுவனங்களிடமிருந்து மற்ற வங்கிகள் தங்கள் கடனை வசூலிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில், ராணா கபூர் அவரது வங்கி அளித்த கடனை வசூல் செய்துகாட்டினார். அது அவரை வங்கித் துறையில் தனித்த நபராக அடையாளம் காட்டியது.

ஆனால் இவை எதையும் அவருடைய திறமையாக, உத்தியாக கருதுவதற்கில்லை. ஏனென்றால் ஒவ்வொரு துறைக்கும் அதன் இயல்பு சார்ந்து சில நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால், ராணா கபூருக்கு அவை எதுவும் பொருட்டல்ல. அவருடைய செயல்பாடுகளைத் தொகுத்துப் பார்க்கையில் அவர் வங்கியை ஒரு சூதாட்டக்களமாகவே அணுகியிருக்கிறார் என்றே தெரிகிறது.

வீழ்ச்சி

திவால் நிலைக்கு உள்ளாகக்கூடிய சூழலில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே யெஸ் வங்கி ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கி இருக்கிறது. ஆனால், தங்கள் வாரா கடன் அளவு 1 சதவீதத்துக்கும் குறைவு என்றே அது கூறிவந்தது. இந்நிலையில், 2016-ல் வங்கிகள் தங்கள் கடன் அறிக்கையைச் சமர்ப்பிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வங்கிகள் அளிக்கும் தகவல்களை ரிசர்வ் வங்கி மறுமதிப்பீடு செய்யும். அப்போது யெஸ் வங்கி அதன் வாராக் கடன் ரூ.750 கோடி என்று தெரிவித்தது. ஆனால் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ததில் யெஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ.4,925 கோடி என்று கண்டறியப்பட்டது. இதன் பிறகுதான் யெஸ் வங்கியின் மீதான சந்தேகம் வலுப்பெற்றது.

நிலைமை மோசமடையவும், 2018-செப்டம் பரில், தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ராணா கபூர் விலக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ராணா கபூரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரவ்னீத் கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்கிறார். வங்கியின் நிதி நிலையை உயர்த்தும் பொருட்டு பல்வேறு கட்ட முயற்சிகள் அதன்பிறகு மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவில் முதலீடுகள் வராததன் காரணமாக நெருக்கடிநிலை தொடர்ந்தது. இந்தச் சூழலில்தான் யெஸ் வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

கண்துடைப்பு நடவடிக்கை

தற்போது ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். திவால் ஆகிவிட்ட திவான் ஹவுஸிங் பைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) என்ற வீட்டு வசதி கடன் நிறுவனத்துக்கு சுய லாபநோக்கு அடிப்படையில் முறைகேடாக கடன் வழங்கினார் என்ற காரணத்துக்காக. ஆனால், இந்த விவகாரம் எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே நடைபெற்றவை. தற்போது யெஸ் வங்கியின் நிதிநிலை பெரும் சரிவைச் சந்தித்த நிலையிலேயே டிஹெச்எஃப்எல் விவகாரம் கையில் எடுக்கப்படுகிறது. மோசடி நடைபெற்ற காலங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முற்படாமல், தற்போது நிதிநெருக்கடி தீவிரமடைந்த நிலையில் அந்த மோசடி வழக்கில் ராணா கபூரை கைது செய்வது கண்துடைப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை.

தாமதிக்கும் ரிசர்வ் வங்கி

இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ரிசர்வ் வங்கி பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் உள்ளது. தற்போதைய நடவடிக்கை மிகத் தாமதமான ஒன்று. 2014-ம் ஆண்டிலேயே யெஸ் வங்கி நெருக்கடிக்கு உள்ளாகத் தொடங்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் அதன் மொத்தக் கடன் ரூ.55,000 கோடியாக இருந்தது.

2019-ல் அது ரூ.2.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வெறும் ஐந்தே ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி கூடுதலாகக் கடன் கொடுத்துள்ளது. யெஸ் வங்கிக்கு நிதி அளவை உயர்த்துவதற்கு கால அவகாசம் வழங்கி தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், ஆனால் அதன் நிர்வாகம் உரிய தீர்வை எட்டாததால் தற்போது ரிசர்வ் வங்கி தலையிட வேண்டியுள்ளது என்றும் அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் கூறியுள்ள காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு முறை வங்கித் துறையில் நிகழும் இதுபோன்ற மோசடிகள் அவற்றின் இறுதிகட்டத்திலேய கண்டறியப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ‘பஞ்சாப்நேஷனல் வங்கி', ‘ஐஎல் அண்ட் எஃப்எஸ்’ என பெரிய அளவில் மோசடிகள் அரங்கேறியிருக்கின்றன. பெரும்பாலும் அவற்றின் உயர்மட்ட அதிகாரிகளே மோசடிக்கு காரணமாகவும் இருந்துள்ளனர்.

இந்நிறுவனங்களைத் தணிக்கை செய்யும் நிறுவனங்களும், தவறான மதிப்பீடு களையே வழங்கிவந்திருக்கின்றன.
இந்தச் சூழலிலும் ரிசர்வ் வங்கி சமாளிப்புக் காரணங்களை கூறிக்கொண்டிருக்கிறது. முன்பு இல்லாத அளவில் வங்கிகளின் மீதான அதன் கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதை உணர வேண்டியத் தருணத்தில் ரிசர்வ் வங்கி இருக்கிறது.

தவிரவும், அரசு மூலதனத்தை ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்வது எந்த அளவில் சரியான நடவடிக்கை? அரசு நிதிப் பற்றாக்குறை காரணமாக பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்று வருகிறது. இந்தச் சூழலில் திவாலான வங்கியில் பெருமளவில் முதலீடு செய்வது பெரும் முரண்பாடாக உள்ளது. தற்போதையை சூழலில் இது தீர்வு நடவடிக்கையாக அமைந்தாலும்கூட, நீண்டகால அடிப்படையில் ஒவ்வொரு முறையும் பொதுத் துறை வங்கிகள், திவாலாகும் தனியார் வங்கிகளைப் பெரும் முதலீடு செய்து வாங்கிக்கொண்டிருக்க முடியுமா? யெஸ் வங்கி தொடர்பில் எஸ்பிஐ சந்திக்கும் ஒவ்வொரு இழப்பும் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டே ஈடுகட்டப்படும் அல்லவா?

யெஸ் வங்கி மட்டுமல்ல...

தற்போது யெஸ் வங்கி மட்டுமல்ல, இந்திய வங்கித் துறையே கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் வாரி இறைத்த கடன்கள் திரும்பி வராமல் உள்ளன. மொத்த அளவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவிலான கடன் திரும்பி வருவதற்கான சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. தற்போது யெஸ் வங்கி விவகாரம் டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இதே நிறுவனத்துக்கு எஸ்பிஐ வழங்கியுள்ள கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.8,800 கோடி. இது யெஸ் வங்கி வழங்கிய கடனைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். அதேபோல் பேங்க்ஆஃப் பரோடா ரூ.5,580 கோடி கடன் வழங்கியுள்ளது. இன்னும் வெளிவராத கடன்கள், இன்னும் எத்தனை எத்தனை திவாலாகும் நிறுவனங்களுக்கு வங்கிகள் கொடுத்துள்ளனவோ... அவற்றுக்குப் பின்னால் என்னென்ன மோசடிகள்... என்பதெல்லாம் ஒவ்வொன்றும் வெடிக்கும் போதுதான் தெரியவரும்.

உங்களுக்கு கடன் கிடையாது

ஒருபுறம் வங்கிகள் இவ்வாறு திவால் நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு கடன்களை வாரி இறைக்கின்றன. மறுபுறம் சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்க மறுக்கின்றன. தற்சமயம் இந்தியா எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை கடன் வளர்ச்சி குறைந்து இருப்பது. நாடு முழுவதும் 5 கோடி சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்திய வங்கிகள் அதன் மொத்த கடன் வழங்கலில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே சிறு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.

அதுவும் பொதுத் துறை வங்கிகள் குறிப்பிட்ட அளவில் சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று இலக்கு உள்ளது. அதன் பொருட்டே இந்த அளவிலாவது வழங்கப்படுகிறது. ஆனால், பிற நாடுகளில், சிறு குறு நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்தே கடன் பெறுகின்றன. இங்குதான் வங்கி
கள் கடன் வழங்கத் தயங்குகின்றன. இதனால், சிறு தொழில் முனைவோர்கள் பலர் வெளியே அதிக வட்டிக்கு கடன் பெற்று தங்கள் தொழிலை நடத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அரசுக்கு எவ்விதக் கவலையும் இல்லை.

நாங்கள் இருக்கிறோம்

மோசடியில் ஈடுபடும் வங்கிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் இறுதியில் பாதிக்கப்படுவது மக்களாகவே இருக்கின்றனர். ஒரு மாதத்துக்கு பணம் எடுக்கத் தடை என்று ரிசர்வ் வங்கி மிக எளிதாகக் கூறிவிடுகிறது. இது பொருளாதாரரீதியாக மட்டும் அல்ல... உளவியல்ரீதியாகவும் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, குடிமக்களின் தார்மீக உரிமையைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாமல், தான் நினைக்கும் எதையும் செய்யலாம் என்ற அதிகார மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய நம்பிக்கையை அளிக்காமல் தன்போக்குக்கு எடுக்கும் நடவடிக்கைகள் ஆபத்தானவை. இதன் விளைவாக, ஒட்டுமொத்த வங்கி அமைப்பின் மீதே மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்படலாம். அரசும் ஒவ்வொரு வங்கி மோசடியின் போதும், ‘மக்களே அச்சம் கொள்ளாதீர்! உங்கள் பணம் பத்திரமாக உள்ளது. நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இருப்பீர்கள் என்பது தெரியும். மக்களுடைய பணம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in