

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com
இரண்டாம் உலகப் போர் 1939–ல் தொடங்கி 1945–ல் முடிந்தது. இந்த மகாயுத்தத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் “நேச நாடுகள்” (Allies) என்னும் அணி; ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி, ஜப்பான் ஆகியோர் ``அச்சு நாடுகள்” (Axis Countries). போரில் நேச நாடுகள் வென்றன. யுத்தம் முடிந்ததும், சோவியத் யூனியன் தன் கட்டுப்பாட்டுக்குக் கிடைத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்களை அரியணையில் அமர்த்தியது.
அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே நீ பெரியவனா, நான் பெரியவனா என்னும் வல்லரசுப் போட்டி ஆரம்பம். குண்டுகள் வெடிக்காமல், ஒருசொட்டு ரத்தமும் சிந்தாமல் நடந்த இந்த அரசியல் போட்டிக்கு உலகம் வைத்த பெயர் “பனிப்போர்” (Cold War). அடுத்துவரும் யுத்தங்களின் வெற்றியை அணுசக்தியும், ராக்கெட்களும் தீர்மானிக்கும் என்று இருவரும் உணர்ந்தார்கள். இதன் ஒரு அங்கமான விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார்கள். 1953–ல் சோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலின் மறைவுக்குப் பின், உறவில் முன்னேற்றம். ஆனாலும், போட்டி தொடர்ந்தது.
ஜூலை 29, 1955. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஐஸன்ஹோவர் (Eisenhower) அறிவித்தார், ``ஜூலை 1957 முதல் டிசம்பர் 1958 வரை உலகளாவிய சர்வதேசப் புவிப்பெளதிக ஆண்டு (International Geophysical Year). இதன் கொண்டாட்டமாக, இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும்.” நான்கே நாட்கள். ஆகஸ்ட் 2. சோவியத் பதிலடி, “நாங்கள் விரைவில் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவோம்.” சபாஷ் சரியான போட்டி என்று உலகம் கை தட்டியது.
சோவியத் யூனியன் தங்கள் காலவரையறையைக் குறிப்பிடாததால், அவர்கள் சாத்தியக்கூறு பற்றி அனைவருக்கும் சந்தேகம். ஆனால், நடந்ததோ, பழைய கதை. ஆமை ஜெயித்தது. முயல் தோற்றது. அக்டோபர் 4, 1957. ஸ்புட்னிக் 1 (Sputnik 1)* என்னும் செயற்கைக் கோளை சோவியத் யூனியன் வானுக்கு அனுப்பியது. பேட்டரிகள் செயலிழக்கும்வரை, மூன்று வாரங்கள் பூமியைச் சுற்றிய ஸ்புட்னிக் 1 இரண்டு மாதங்களுக்குப் பின் பூமியில் விழுந்தது. உலகின் வெற்றிகரமான முதல் செயற்கைக் கோள் என்னும் மகுடம் சோவியத் விஞ்ஞானிகளுக்கு. அமெரிக்காவுக்குப் பெரிய தலைகுனிவு. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன், இன்னும் ஒரு நாக் அவுட். ``ஸ்புட்னிக்'' என்பது ரஷ்ய மொழி வார்த்தை. பயணி என்று அர்த்தம்.
நவம்பர் 3, 1957 – சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 2 செயற்கைக் கோளை வெற்றிகரமாகச் செலுத்தினார்கள். அதில் ஒரு பயணி. ``லைக்கா” என்னும் நாய். ஒரு உயிர்ப் பிராணியைச் சுமந்து சென்ற முதல் வெற்றிகரச் செயற்கைக் கோள். ஸ்புட்னிக் 1–ன் சாதனையைச் சமனாக்க அமெரிக்காவுக்கு நான்கு மாதங்கள் பிடித்தன. 1958 ஜனவரி 31 அன்று ``எக்ஸ்ப்ளோரர் 1“ (Explorer 1) செயற்கைக் கோள் இதைச் சாதித்தது.
சோவியத் யூனியனுக்குப் பின்தங்கி நின்றது அமெரிக்காவுக்கு மானப் பிரச்சினை. அவர்களை எப்படியாவது முறியடிக்கவேண்டும். நாடு முழுக்கக் கூக்குரல்கள். அதிபர் ஐஸன்ஹோவர் உடனடி நடவடிக்கை எடுத்தார். தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அல்லது நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) என்னும் அமைப்பை உருவாக்கினார். அடுத்த ஒரு வருடத்தில் மூன்று செயற்கைக்கோள்கள்.
சோவியத் யூனியனும் தொடர் ராஜபாட்டையில். 1959 –ம் ஆண்டு அக்டோபர் 4 அன்று சந்திரனைச் சுற்றிவர லூனா 3 (Luna 3) அனுப்பினார்கள். ஆகஸ்ட் 1960. இரண்டு நாய்கள் சுமந்த சாட்டெலைட் விண்வெளிக்குப் போய்ப் பத்திரமாகத் திரும்பியது. அடுத்த மூன்று மாதங்கள். அமெரிக்கா ஹாம் (Ham) என்னும் குரங்கை அனுப்பித் திருப்பிக் கொண்டுவந்தார்கள்.
ஏப்ரல் 12, 1961. மனித வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நாள். சோவியத்தின் மாபெரும் சாதனை. யூரி காகரின் (Yuri Gagarin) செயற்கைக் கோளில் பூமியைச் சுற்றி வந்தார். 108 நிமிடங்கள் விண்வெளியில் செலவிட்டபின் பத்திரமாக ரஷ்யா வந்து சேர்ந்தார்.
ஏற்றுக்கொள்ள முடியுமா அமெரிக்காவால்? 1961 -ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் கென்னடி, 1969–க்குள் அமெரிக்கா, மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பித் திருப்பிக்கொண்டுவரும் என்று அறிவித்தார். 1963–ல் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், அவர் கனவை நாசா நிறைவேற்றியது. ஜூலை 16, 1969 அன்று, அப்பல்லோ 11 விண்கலம் மூன்று மனிதர்களைத் தாங்கி, விண்ணில் பாய்ந்தது. சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) காலெடுத்து வைத்தார்.
சந்திரனில் நடந்த முதல் மனிதர்; அவருக்கு அடுத்தபடியாக, எட்வின் ஆல்ட்ரின் (Edwin Aldrin) கால்கள் சந்திரபூமியைத் தொட்டன; மூன்றாமவர், மைக்கேல் காலின்ஸ் (Michael Collins), நிலவின் மேல்சுற்றுப் பாதையிலேயே இருந்தார். ஜுலை 24 அன்று விண்கலம் மூவருடன் பத்திரமாகத் திரும்பியது. ஆம்ஸ்ட்ராங் சொன்னார், ``இது மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்.” (That's one small step for a man, one giant leap for mankind.)
1975 முதல் இரு நாடுகளும் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டுறவைத் தொடங்கின. 1985–ல் மிக்கைல் கொர்பச்சேவ் (Mikhail Gorbachev) சோவியத் அதிபரானார். அமெரிக்காவுக்கு நட்புக்கரம் நீட்டினார். கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்புப் பிடியைத் தளர்த்தி, நாட்டை ஜனநாயகப் பாதைக்கு அழைத்துப்போகும் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார். தீவிர இடதுசாரிகள் புரட்சிக்கொடி தூக்கினார்கள். கொர்பச்சேவ் பதவி துறக்கும் கட்டாயம். சோவியத் யூனியன் ஒரு கூட்டமைப்பு. மத்திய அரசின் பிடி தளரத் தொடங்கியதும், இந்த நாடுகள் சுயாட்சி கோரின. டிசம்பர் 25, 1991. ரஷ்யா மற்றும் 14 நாடுகளாக யூனியன் சிதறியது.
எல்லா நாடுகளுக்கும் பொருளாதாரப் பிரச்சினை. வசதியாக வாழ்ந்த குடும்பங்கள் நொடிந்துபோகும்போது என்ன செய்வார்கள்? பாரம்பரியச் சொத்துகளை விற்றுக் காசாக்குவார்கள். ரஷ்யாவிடம் செயற்கைக்கோள்கள் செலுத்தும் ராக்கெட்கள் இருந்தன. அவை மலிவுவிலைக்குக் கிடைக்கலாம் என்று ஈலான் கணக்குப் போட்டார்.
நினைத்ததை உடனே முடிப்பது நம் ஹீரோ ஸ்டைல். ஏறினார் விமானம். அவருடன், ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநர் ஜிம் கான்ட்ரெல் (Jim Cantrell), மற்றும் இன்னொரு நண்பர். ரஷ்ய அதிகாரிகளுடன் சந்திப்பு. விரிவான பேச்சுவார்த்தைகள். மூன்று ராக்கெட்கள் 24 மில்லியனுக்குத் தருவதாகச் சொன்னார்கள். மலிவுவிலைதான். ஆனால், ஈலான் பட்ஜெட்டுக்கு ஒத்துவராது. ஆகவே சொன்னார், ``எனக்கு இரண்டு ராக்கெட்கள் போதும். மொத்தமாக 8 மில்லியன் தருகிறேன்.”
அதிகாரிகள் ஈலானையே பார்த்தார்கள். ``சின்னப் பையா. எங்கள் பதில் இல்லை.” ஈலான் முகத்தில் ஏமாற்றம் தாண்டவமாடும் என்று எதிர்பார்த்தார்கள். ஏமாந்தது அவர்கள். மாபெரும் ராணுவத் தலைவர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு வெற்றி ரகசியம் உண்டு. எதிரியோடு மோதும்முன் விலா வாரியான வியூகம் வகுப்பார்கள்.
அதே சமயம், வகுக்கும் வியூகம் ஏதாவது காரணத்தால் ஜெயிக்காவிட்டால் இன்னோர் ரகசியத் திட்டமும் அவர்கள் மூளையில் ரெடி. ஈலானும் இப்படித்தான். வந்த வேலை முடிந்துவிட்டது. இன்னும் ஏன் ரஷ்யாவில் நேரத்தை வீணாக்க வேண்டும்? அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார்கள். ஈலான் தனியாக உட்கார்ந்தார். கம்ப்யூட்டரில் எதையோ தட்டிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் ஓடியது. கம்ப்யூட்டரைக் கான்ட்ரெலிடம் கொடுத்தார். ``ஹை, நாம் யாரிடமும் ராக்கெட் வாங்க வேண்டாம். நாமே தயாரிக்கலாம்.”கம்ப்யூட்டரில் விவரமான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகள். படித்தார். கான்ட்ரெல் பிரமித்தார். ஈலான் காட்டியிருந்த ராக்கெட் மொத்த உற்பத்திச் செலவு, ரஷ்யாவிடம் அவர் பேரம் பேசிய அதே அடிமாட்டு விலை – 4 மில்லியன் டாலர்கள்.
கணக்கில் ஈலான் தப்புப் பண்ணியிருப்பாரோ என்று கான்ட்ரெல் மறுபடியும் கூர்மையாகப் படித்தார். கணக்கு முழுக்க முழுக்க கரெக்ட். ஈலான் என்ன மேஜிக் செய்திருந்தார்? “ஜீரோவை அடிப்படையாகக்கொண்ட பட் ஜெட்டிங்” (Zero-based Budgeting) என்னும் அக்கவுன்ட்டிங் முறை. நம் ஊர் பிசினஸ் பாஷையில் சொன்னால், அண்ணாச்சி டெக்னிக்!
(புதியதோர் உலகம் செய்வோம்!)