

இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே சென்னை சாலைகளில் பார்த்தவர்கள் இனி எலெக்ட்ரிக் பைக்குகளையும் பார்க்கலாம். அதுவும் அட்டகாசமான ஸ்டைல், செயல்திறனுடன் அதிநவீன தொழில்நுட்பமும் கலந்த எலெக்ட்ரிக் பைக் சென்னைக்கு வந்துவிட்டது. ரிவோல்ட் நிறுவனம் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை அடுத்து சென்னையில் தனது விற்பனையைத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் பைக் என்று அழைக்கப்படும் இந்த ரிவோல்ட் RV400, RV300 என இரண்டு மாடல்களில் வருகிறது. எலெக்ட்ரிக் பைக் என்றாலும் தோற்றத்தில் எந்த வகையிலும் மற்ற வாகனங்களுக்குக் குறைவில்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
எல்இடி லைட்ஸ், 17 அங்குல சக்கரம், கீலெஸ் ஸ்டார்ட், எக்கோ/சிட்டி/ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகள் எனப் பல அம்சங்கள் உள்ளன. இதில் 3 கிலோ வாட் மோட்டார் உள்ளது. முன்பக்கம் பின்பக்கம் இரண்டுமே டிஸ்க் பிரேக். 3.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி இதில் பயன்படுத்தப்படுகிறது. இதை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 156 கிமீ வரை பயணிக்கலாம். இதன் எடை 109 கிலோ மட்டுமே. மேலும் இது 4ஜி இணைய வசதி கொண்ட இன்டர்நெட் பைக் ஆகும். இதற்கென தனி செயலியும் உண்டு. அதனுடன் இணைத்துக்கொண்டால் பைக்கின் மொத்த கன்ட்ரோலும் விரல் நுனியில்.
எலெக்ட்ரிக் பைக் என்றாலே அனைவருக்கும் சார்ஜிங், பேட்டரி குறித்து கேள்வி எழும். ஆனால், ரிவோல்ட் அன்லிமிடெட் வாரண்டியும் வழங்குகிறது. மேலும் பேட்டரி ஸ்வாப் செய்யும் வசதியும் வழங்குகிறது. வாரண்டியில் உள்ளவரை பேட்டரி வழியில் தீர்ந்துவிட்டாலோ, பழுதடைந்தாலோ புதிய பேட்டரி ஆர்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம். பேட்டரியைத் தனியே நாமே கழற்றி சார்ஜிங் செய்யவும் முடியும்.
மேலும் இதில் செயினுக்குப் பதிலாக பெல்ட் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களும் எளிதில் இயக்கும் வகையில் இந்த பைக் உள்ளது. பைக் ஓட்ட விரும்பும் பெண்களுக்கு நிச்சயம் ரிவோல்ட் ஒரு நல்ல ஆப்ஷன். சென்னை சாலைகளுக்குப் பொருத்தமான பைக் இது என்றே சொல்லலாம்.
RV300 விற்பனையக விலை ரூ.84,999 மற்றும் RV400 விற்பனையக விலை ரூ.1,03,999. ரிவோல்ட் தனது விற்பனையில் My revolt plan என்ற வசதியை வழங்குகிறது. இதன் மூலம் RV400 மாடலை ரூ.3,999-ம் RV300 மாடலை ரூ.2,999-ம் செலுத்தி அன்றே நம் பெயரில் வாகனத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம். 38 மாதங்களுக்கு தவணை முறையில் மீதித் தொகையைச் செலுத்திக்கொள்ளலாம்.