Published : 02 Mar 2020 09:49 AM
Last Updated : 02 Mar 2020 09:49 AM

அலசல்: வந்தார், விற்றார், சென்றார்!

கடந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய வருகைதான் பிரதான பேசு பொருளாக இருந்தது. கடந்த 8 மாதங்களில் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். முந்தைய நான்கு சந்திப்புகளும் சர்வதேச மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்தபோது நிகழ்ந்தவை.

அதிபராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் ட்ரம்ப் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலாவது சுற்றுப் பயணம் இதுவேயாகும். இந்தியாவுக்கு வருமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக அழைப்பு விடுக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் திட்டவட்டமான பதில் ஏதும் வரவில்லை.

இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் அப்போது அதிபராக இருந்த பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதலாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையும் அவரை சென்றடைந்தது. ஆனால் அவரது பதவிக் காலத்தின் கடைசி ஆண்டில் அவர் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்றார். இந்த ஆண்டு அதிபர் ட்ரம்ப்புக்கு கடைசி ஆண்டு. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டே அவர் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அகமதாபாத்தில் அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்பட்ட ``நமஸ்தே ட்ரம்ப்’’ வரவேற்பு நிகழ்ச்சியானது, இதுவரையில் வேறெந்த நாட்டிலும் கிடைத்திராத வரவேற்பு என்பது மட்டும் நிச்சயம். 22 கி.மீ. தூரத்துக்கு வழி நெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின்போது இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு குறித்த திட்டவட்டமான அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதிபரின் பயணத்தின் முடிவில் கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்களில் தாராள வர்த்தக ஒப்பந்தம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒப்பந்தம் எனில் 300 கோடி டாலருக்கு ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதாகும். இதுதவிர இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ஐஓசி-எக்ஸான் மொபில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மற்றபடி குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.

அமெரிக்க அதிபரின் வரவேற்புக்கு ரூ.100 கோடி செலவாகியிருப்பதாக தெரிகிறது. இது வீண் விரயம் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகின்றன. ஆனால், அரசியல் நிபுணர்கள் இந்தப் பயணத்தை நீண்ட கால அடிப்படையில் பயன் தரும் உத்திசார்ந்த நடவடிக்கையாகப் பார்க்கின்றனர். சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உள்ள ஒரே வழி அமெரிக்காவுடன் நட்பாக இருப்பதுதான். அந்த வகையில் ட்ரம்ப் வருகை இந்தியாவுக்கு வலு சேர்க்கும் என்கிறார்கள்.

அதேசமயம் ட்ரம்ப் மிகச் சிறந்த வியாபாரி என்பதையும் நிரூபித்துவிட்டார். இந்தியாவுக்குப் பயன்தரக்கூடிய எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாமல் தங்களுடைய ஆயுதத்தை மட்டும் விற்றுவிட்டு சென்றுவிட்டார் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்தது. அதிபரின் பயணமும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியும் அமெரிக்காவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கும் உதவும் வகையில் இருந்தது. ஆனால் இந்தியர்களுக்கு…?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x