Published : 02 Mar 2020 08:20 AM
Last Updated : 02 Mar 2020 08:20 AM

பிஎஸ் 6 தரத்தில் ஹீரோ மோட்டார்ஸின் பிரபல மாடல்கள்

ஏப்ரல் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஏப்ரல் முதல் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் பிஎஸ் 6 விதிகளின்படி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் பெரும்பாலான வாகன நிறுவனங்கள் அதன் பிரபல மாடல்களை பிஎஸ்6-கீழ் விதிகளின்கீழ் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்து வருகின்றன.

அவ்வாறான அறிமுகங்களைச் சமீபத்தில் நிகழ்த்தி இருக்கிறது ஹீரோ மோட்டார்ஸ். ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 சிசி, ஹீரோ பேஷன் ப்ரோ, ஹீரோ கிளாமர், ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகிய ஐந்து மாடல்கள் பிஎஸ் 6 மாடலாக வருகின்றன. இதில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 சிசி மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் இரண்டும் தற்போது அறிமுகம் மட்டும் செய்யப்பட்டுள்ளன. மற்ற மூன்று மாடல்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 சிசி

ஸ்போர்ட்டிவ் மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 சிசி. இதன் இன்ஜின் 15 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யும். எல்இடி ஹெட் லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், எல்இடி இண்டிகேட்டர், டிஜிட்டல் டிஸ்பிளே ஆகிய அம்சங்களை இது கொண்டுள்ளது. டைமண்ட் பிரேமை கொண்டிருக்கும் எக்ஸ்ட்ரீம் 160 சிசி, முன்புற மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளை கொண்டுள்ளது. இந்த பைக் 60 கிலோ மீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டும்.

ஹீரோ பேஷன் ப்ரோ

110 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 9.02 ஹார்ஸ் பவரை 9.79 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யக்கூடியது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் அனலாக் கிளஸ்டர், டிரிபிள் டோன் கிராபிக்ஸ், ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் ஆகிய அம்சங்களை இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் கொண்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரெட், டெக்னோ ப்ளூ, மூன் எல்லோ, கிளாஸ் பிளாக் ஆகிய வண்ணங்களில் வெளிவருகிறது. முன்புறம் டிஸ்க் பிரேக் வசதியை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. டிஸ்க் பிரேக் மாடலின் விலை ரூ.67,190 எனவும், டிரம் பிரேக் மாடலின் விலை ரூ.64,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர்

ஹீரோவின் மிகப் பிரபலமான மாடலான ஸ்பிளெண்டர் பிஎஸ் 6 மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் 100 சிசி இன்ஜின் 8 பிஎஸ் பவரை 8.05 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும். இதன் விலை ரூ.59,600 முதல் ஆரம்பமாகிறது. விலையைக் கருத்தில் கொண்டு பிஎஸ் 4 மாடலில் இல்லாத புதிய அம்சங்கள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை.

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்

ஹீரோ மோட்டார்ஸின் முன்ணனி மாடலான சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 மாடலாக அறிமுகம் கண்டுள்ளது. ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம் மற்றும் டிஸ்க் இரண்டு வேரியன்டுகளில் வெளிவருகிறது. 125 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின், 10.84 பிஎஸ் பவரை 10.6 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸைக் கொண்டிருக்கும். இது ஹோண்டா சிபி ஷைன் மற்றும் யமஹா சலூட்டோ ஆகியவற்றுக்குப் போட்டியாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ கிளாமர்

125 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 10.73 ஹார்ஸ் பவரை 10.6 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும். இதன் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பேஷன் ப்ரோ போலவே இதிலும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. ஸ்போர்ட் ரெட், டெக்னோ ப்ளூ, டொர்னடோ கிரே, கேண்டி ரெட் பெயின்ட் ஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது. டிஸ்க் பிரேக் மாடலின் விலை ரூ.72,400 -ஆகவும், டிரம் பிரேக் விலை ரூ.68,900- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x