

டொயோடா நிறுவனத்திடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெல்ஃபயர் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரிய அளவிலான சொகுசு எம்பிவி செக்மென்ட்டில் நுழையும் இந்த வெல்ஃபயர், கியா கார்னிவல், பென்ஸ் வி கிளாஸ் உள்ளிட்டவற்றுக்குப் போட்டியாகக் கருதப்படுகிறது. 4,935 மிமீ நீளம், 1,850மிமீ அகலம், 1,895 மிமீ உயரம் என இதன் அளவுகள் உள்ளன.
இதன் வீல்பேஸ் 3,000 மிமீ. மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டது இது 117 ஹெச்பி திறனை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இதனுடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளன. பர்னிங் ஒயிட், பேர்ல் ஒயிட், கிராஃபைட் மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது.
வெளிப்புற டிசைனைப் பொருத்தவரை முகப்பில் வெர்டிகள் நோஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. அதனுடன் குரோம் இன்சர்ட், ஸ்பிளீட் ஹெட்லேம்ப் உள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில்லேம்ப் தரப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், பின்புற இருக்கையில் இருப்பவர்களுக்கு 13 அங்குல திரையும் உள்ளது.
ஹைபிரிட் தொழில்நுட்பமும் உள்ள இந்த வெல்ஃபயரின் அறிமுக விலை ரூ.79.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.