

கார் வைத்திருப்பது கவுரவத்தின் அடையாளமாக இருந்தது ஒரு காலம். இப்போது குறைந்தபட்சம் 500 ரூபாய் இருந்தால்கூட காரில் பயணிக்கலாம். கால் டாக்ஸி எனும் வாடகைக் கார் செயல்பாடு அனைவரது கார் பயணத்தையும் எளிதாக்கிவிட்டது.
இருந்தாலும் லட்சக் கணக்கில் செலவு செய்து கார் வாங்கி பயணிக்கும் உரிமையாளருக்கு, அதே மாடல் கார் டாக்ஸியாக உலா வரும் போது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கும். பெருநகரங்களில் இது அவ்வளவாக கவனிக்கப்படாத விஷயம். ஆனால் மக்கள் தொகை குறைந்த சிறிய நகரங்களில் கொஞ்சம் வசதி படைத்த கார் உரிமையாளருக்கு நெருடலான விஷயம்தான். இதைப் போக்கும் வகையில் சொந்த உபயோகத்துக்கென புதிய மாடல் இனோவா காரை அறிமுகப்படுத்த உள்ளது டொயோடா.
டொயோடாவின் இனோவா கார்கள் இப்பொழுது பெருமளவில் சுற்றுலா பயண மேம்பாட்டாளர்கள், வாடகை கார் ஓட்டுநர்களால் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக வெளி வர உள்ள மாடல் கார்கள் தனி நபர் உபயோகத்துக்கு மட்டுமே என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போது உள்ள இனோவா மாடல் கார்கள், வாடகைக் கார் உபயோகிப்பாளர்களுக்கும், சுற்றுலா மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் அளிக் கப்படும். புதிய மாடல் இனோவா காரின் பெயரை மாற்றவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டொயோடா நிறுவனம் இந்தியாவில் காலடி வைத்தவுடன் முதல் தயாரிப்பாக குவாலிஸை அறிமுகம் செய்தது.
டாடா சுமோவுக்குப் போட்டியாக இது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு கட்டத்தில் இந்த காரை காவல் துறை வாங்க ஆரம்பித்தது. பின்னர் இந்த கார் உற்பத்தியை டொயோடா நிறுத்தியது. இதற்கு மாற்றாக 2005-ம் ஆண்டில் இனோவா காரை அறிமுகப்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட மாடல்களில் இனோவா கார்கள் வந்துள் ளன. இவற்றின் விலை ரூ. 11 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை உள்ளது.
புதிதாக தனி நபர் உபயோகத்துக்கு வரும் மாடல் இப்போது உள்ள மாடல்களின் விலையைக் காட்டிலும் ரூ. 1 லட்சம் வரை கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. இந்நிறுவனத்தின் பிற தயாரிப்பான இடியோஸ் மற்றும் லிவா கார்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பிரத்யேகமானது என்றாலே அதற்கு எப்போதுமே வரவேற்பு நிச்சயம் இருக்கும். சொந்த உபயோகத்துக்கென தனியாக மாடல் கார்கள் வரும்போது அது வரவேற்பைப் பெறாமலா போய்விடும்.!