Published : 24 Feb 2020 12:10 PM
Last Updated : 24 Feb 2020 12:10 PM

நவீனத்தின் நாயகன் 15: கல்யாணமும் ஒரு கான்ட்ராக்ட்!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

கபாலியின் “என்னாடா கஸ்மாலம், லுக் வுட்றே? நெஞ்சில மாஞ்சா இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வா. இல்லாட்டி ஜூட் வுட்டுட்டுப் போ”, வெறும் சினிமா டயலாக் அல்ல. உலகப் புகழ்பெற்றஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகள் உடற்கூறுத் துறை பேராசிரியர் வால்டர்கானன் (WalterCannon) 1927-ஆம் ஆண்டில் எடுத்துரைத்த ``போராடு அல்லது ஓடு” (Fight or Flight) என்னும் கொள்கையின் மையக்கருத்து இதுவேதான். இதை எப்படி விளக்கலாம்? உலகின் தொடக்க நாட்கள். முதல் மனிதன் ஆதாம் ராத்திரி தனியாக உட்கார்ந்திருக்கிறான். சாப்பிட்டு முடித்துவிட்டான்.

மனம் நிம்மதியாக இருக்கிறது. அவனுடைய இதயத் துடிப்பும், மூச்சுக் காற்று வேகமும் சீராக. சாப்பிட்ட உணவைச் செரிக்கத் தேவையான ரத்த ஓட்டம் அவனுடைய ஜீரண உறுப்புகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. வருடிப் போகும் சில்லென்ற காற்றால் வியர்வையும் இல்லை. லேசாய், லேசாய், அவன் மனமும் பறக்கிறது. திடீரென அவன் பின்னால் இருக்கும் இலைச் சருகுகளில் “சர சர”வென்ற சப்தம். திரும்பிப் பார்க்கிறான்.

பிரம்மாண்டமாய் ஒரு கரடி! மூளையிலும் முதுகுத் தண்டிலும், நரம்புகளிலும், நியூரான்கள் எனப்படும் நரம்பு உயிரணுக்கள் உள்ளன. இந்த நியூரான்கள் மணிக்கு 200 மைல் வேகத்தில் மின் வேதியல் சமிக்ஞைகளை, மூளையிலிருந்து உடல் பாகங்களுக்கும், உடல் பாகங்களிலிருந்து மூளைக்கும் தெரிவிக்கின்றன. அதாவது, கரடியைப் பார்த்த 1/50 விநாடிகளுக்குள் அந்தச் சேதி ஆதாமின் மூளைக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

மூளையில் ஹைப்போதாலமஸ் (Hypothalamus) தானியக்க நரம்பு மண்டலத்தின் இயக்கங்களின் கட்டுப்பாட்டு மையத்தைக்கொண்ட பகுதி. நம் உடலில் பல சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் திரவத்துக்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன்களின் உற்பத்தியை, 24 மணி நேரமும் உடலின் தேவைகளுக்கேற்ப ஹைப் போதாலமஸ் கட்டுப்படுத்துகிறது. அட்ரீனல் (Adrenal) என்பது சுரப்பிகளில் ஒன்று. எல்லோருக்கும் இரண்டு உண்டு. ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புறத்தில் ஒன்று வீதம் வலது, இடமாக இருபுறமும் அமைந்திருக்கும். இவை, தசைகளைத் தூண்டும் ``அட்ரீனலின்”, ``ஸ்டீராய்ட்ஸ்” என்னும் ஹார்மோன்களைச் சுரக்கின்றன.

ஆதாமின் உடலில் இப்போது அதிகமான அட்ரீனலின், ஸ்டீராய்ட்ஸ். இதய லப் டப் அசுர கதியாகி, ரத்த ஓட்ட வேகம் அதிகமாகிறது, உடல் முழுக்கப் புது சக்தி பாய்கிறது. நுரையீரல் வேகமாக இயங்கி, அதிகப் பிராணவாயுவை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்புகிறது. ஜீரண உறுப்புகளுக்குக் குறைவான ரத்தம் போகிறது. செரிக்கும் சக்தி குறைகிறது. கண், காது, மூக்கு ஆகிய புலன்களின் சக்தி ஒரு முகமாகிறது. உடலின் எல்லா அங்கங்களும் தங்கள் வலிமையின் சிகரத்தில். இதை வைத்து ஆதாம் கரடியோடு போராடலாம் அல்லது தப்பி ஓடலாம். அபாயக் கரடிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கை தந்திருக்கும் மகத்தான சக்தி இது.

ஆதாமுக்குக் கரடி என்றால் நமக்கு அன்றாடப் பிரச்சினைகள். X.com-ல் வந்த கரடியை ஒண்டிக்கு ஒண்டியாக மோத ஈலான் தீர்மானித்தார். கம்பெனியை மூடிவிடலாம் என்று பலர் ஆலோசனை. நாலுபேர் பேச்சைக் கேட்பவன் போய்ச் சேருவது இலக்கு அல்ல, நடுத்தெரு தான். மும்முரமாக சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களைத் தேடினார்.

வங்கித் துறை அனுபவம் கொண்டவர்களும், திறமைசாலி சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களும், வங்கிகள் மீது இருந்த அரசுக் கட்டுப்பாடுகள் காரணமாக, X.com செயல்படவே முடியாது என்று நினைத்து விலகி நின்றார்கள். ஈலானுக்குக் கிடைத்தவர்கள் அனுபவமே இல்லாத கத்துக்குட்டிகள். இந்த பல வீனத்தை ஈலான் மாபெரும் பலமாக நினைத்தார். ``முன் அனுபவம் என்பது ஒரு சுமை. X.com அணியினருக்கு இந்தச் சுமை கிடையாது. ஆகவே, வானமே எல்லை என்று சிந்திப்பார்கள். வங்கிகளால் செய்ய முடியாத வசதிகளைக் கஸ்டமர்களுக்குத் தருவார்கள்.”

“நூறு சிங்கங்கள் கொண்ட படைக்கு ஒரு நாயைத் தலைவனாக்கினால், எந்தச் சண்டையிலும், நூறு சிங்கங்களும் பரிதாபமாகச் சாகும். ஆனால், நூறு நாய்கள் கொண்ட படைக்கு ஒரு சிங்கம் தலைமை வகித்தால், ஒவ்வொரு நாயும், சிங்கத்தின் வீரத்தோடு போராடும்.” இது மாவீரர் நெப்போலியனின் வைரமொழி.

தான் சிங்கம் என்பதை ஈலான் நிரூபித்தார். ஒருசில மாதங்களில், அவருடைய கத்துக்குட்டிகள் படை யாருமே நம்ப முடியாத உயரங்களைத் தொட்டது. கிளைகளே இல்லாமல், இன்டர்நெட் மூலமாக மட்டுமே இயங்கும் உலகின் முதல் எலெக்ட்ரானிக் வங்கியை உருவாக்கிவிட்டார்கள். அமெரிக்க அரசு வங்கிகளுக்காக வரையறுத்திருந்த அத்தனை கடுமையான சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாக அது இருந்தது இன்னொரு ஆச்சரியம்.

நவம்பர் 25, 1999. அமெரிக்காவில், “நன்றி தெரிவித்தல் நாள்” (Thanksgiving Day). தைப்பொங்கல் போன்ற அறுவடைத் திருநாள். அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், 1863- ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அந்த ஆண்டு நவம்பர் 26 - ஆம் நாள் வியாழக்கிழமை, நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அன்று முதல், ஒவ்வொரு வருடமும், நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் போன்று இதுவும் நீண்ட விடுமுறை கொண்ட விழா.

நாட்டின் பல பகுதிகளில் வாழ்கின்றவர்களும் தம் ஊர்களுக்குச் சென்று, பெற்றோர் பிள்ளைகள், தாத்தா, பாட்டி, பேரப்பிள்ளைகள் என்று அனைவரும் கூடுவார்கள். “ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்” (A family that eats together, stays together) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

இதற்கு ஏற்ப, அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவார்கள். விருந்தின்போதும், அதன் பின்பும், குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அந்த ஆண்டின் போது தாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளையும் நினைவுகூர்ந்து ஆண்டவனுக்கு நன்றி சொல்வார்கள்.

இந்த நன்றி தெரிவிக்கும் நவம்பர் 25, 1999 அன்று, தன் இன்டர்நெட் வங்கிக்குத் திறப்பு விழா நடத்த ஈலான் முடிவெடுத்தார். நாள் நெருங்க, நெருங்க, ஈலானின் ரத்த அழுத்தம் எகிறியது. நவம்பர் 23 முதல், 48 மணிநேரம் அவர் தூங்கவேயில்லை. போர்முனைத் தளபதியாக, தன் அணியினரை அதட்டலும், மிரட்டலுமாக வழிநடத்திக்கொண்டேயிருந்தார். பொழுது விடிந்தது. இன்டர்நெட் வங்கி வெற்றிகரமாகப் பிறந்தது. காலம் காலமாக வங்கிகளுக்கு இருந்த இலக்கணத்தை உடைத்த மாபெரும் புரட்சி! இதுவரை எந்த வங்கியும் செய்யாத ஒரு புதுமையும் இருந்தது. தனிமனிதர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதியை யாரும் தரவில்லை. ஈலான் தந்தார்.

ஆரம்பத்தை அறிவிக்க அட்டகாசமான சலுகைகள். கஸ்டமர்களாகப் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் 20 டாலர்கள் பரிசு; நண்பர்கள், உறவுகளைச் சேர்த்துக்கொடுத்தால், தலைக்கு 10 டாலர்கள் அன்பளிப்பு. ஈலானே எதிர்பாராத மாபெரும் வரவேற்பு. இரண்டே மாதங்களில் சேர்ந்த கஸ்டமர்கள் 2 லட்சம் பேர்! ஈலான் வெற்றிக் களிப்பில். இப்போது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக முக்கிய
முடிவெடுத்தார். காதலி ஜெஸ்ட்டினுடன் திருமணம். ஜனவரி 2000. கணவன் மனைவியானார்கள். ஈலான் ஆணாதிக்கக்காரர் என்று ஜெஸ்ட்டினுக்குத் தெரிந்தேதான் திருமணத்துக்குச் சம்மதித்தார். ஆனால், கணவரானவுடன், காதலரிடம் பல மாற்றங்கள். அன்று மாலையே, முகமூடிகள் கிழியத் தொடங்கின. திருமண வரவேற்பு. தம்பதிகள் விருந்தினரோடு சேர்ந்து நடனமாடுவது வழக்கம். அப்போது ஈலான் சொன்னார், ``நம் குடும்பத்தில் நான் தான் ஆல்ஃபா*.”

ஸ்ரீமனோதத்துவ மேதைகள் மனித ஆளுமைகளை மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள்- ஆல்ஃபா (Alpha), பீட்டா (Beta), ஒமேகா (Omega). ஆல்ஃபா என்றால், எப்போதும் பிறரைக் கட்டுப்படுத்த விரும்புவார்கள். விவரங்களுக்கு அத்தியாயம் 3 – ஐப் பார்க்கவும். ஆறு வாரங்கள் ஓடின. ஈலான் தன் வழக்கறிஞர் தயாரித்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார். அதில் ஒரு முக்கிய ஷரத்து – இருவர் சொத்துக் களையும் தனித்தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு சட்டம் இருந்தது. விவாகரத்தின்போது தம்பதியர் இருவரும் தங்கள் சொத்துக்களைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு முன்னாலோ, பின்னாலோ இந்த ஒப்பந்தம் போட்டால், பகிர வேண்டாம். ஈலானின் வற்புறுத்தலில் ஜெஸ்ட்டின் கையெழுத்துப் போட்டார். அவர் மனதில் சந்தேகம் – ஏன் கல்யாணத்துக்குப் பின் அவர் ஒப்பந்தத்தைக் கொண்டுவர வேண்டும்? முன்னால் கேட்டிருந்தால், தான் சம்மதிக்கமாட்டேன் என்பதாலா? கணவர் ஆணாதிக்கச் சுயநலக்காரர் என்பது மட்டுமல்ல, ஏமாற்று ஆசாமியோ என்று ஜெஸ்ட்டினுக்கு பயம். குடும்பக் கப்பலின் பயணம் சந்தேகப் புயலில் ஆரம்பம். கப்பல் ஊர் போய்ச் சேருமா அல்லது பிரிவுப் பாறையில் மோதிச் சிதறுமா? காலம் பதில் சொல்லும்.

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x