குறைந்த கார் பயணத்துக்கு குறைவான பிரீமியம்

குறைந்த கார் பயணத்துக்கு குறைவான பிரீமியம்
Updated on
3 min read

ராஜலட்சுமி நிர்மல்
rajalakshmi.nirmal@thehindu.co.in

கார் வைத்திருப்பவர்களின் பெரும் பிரச்சினையே அதன் பராமரிப்பு செலவு தான். மாதாந்திர சம்பளதாரர்களுக்கு கார் அவசியமானதாக இருந்தாலும் அவர்களது உபயோகம் மிகக் குறைவான கிலோ மீட்டரே. இருந்தாலும் ஆண்டுதோறும் செலுத்த வேண்டி சாலை வரி அதற்கும் மேலாக காப்பீடு போன்றவை கொஞ்சம் கலங்கடிக்கச் செய்யும்.

அதிலும் காப்பீடு என்பது ஆண்டுக்கு 5 ஆயிரம் கி.மீ. தூரம் கூட ஓடாத காருக்கும் ஒரே அளவுதான். ஒரு லட்சம் கிலோ மீட்டரைத் தாண்டும் கார்களுக்கும் ஒரே பிரீமியம்தான். இப்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தாகிவிட்டது. இனிமேல் குறைவான கிலோமீட்டர் தூரம் காரில் பயணிப்பவர்கள் குறைவான பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

இப்போது வாகன காப்பீடுகளுக்கான வழிகாட்டுமுறைகளில் இது தொடர்பான பரிந்துரைகள் உள்ளன. காரை உபயோகப்படுத்தும் அளவுக்கு காப்பீடு பிரீமியம் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (ஐஆர்டிஏ) வந்துள்ளன. சில நிறுவனங்கள் சோதனை அடிப்படையில் இத்தகைய முன்னோடியான தொழில்நுட்ப அடிப்படையிலான காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.

காரில் பயணிக்கும் தூரத்துக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தும் காப்பீட்டை லிபர்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதேபோல ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனம் மோட்டார் வாகனங்களுக்கு புளோட்டர் அடிப்படையிலான காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது செயலி அடிப்படையில் இயங்கும். இதனால் ஒரே நிறுவனம் பல வாகனங்களுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ள முடியும். இதேபோல புளோட்டர் அடிப்படையிலான காப்பீட்டு திட்டத்தை எடெல்வைஸ் ஜெனரல் நிறுவனமும் வழங்குகிறது.

லிபர்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய காப்பீட்டுத் திட்டத்தை ஆன்லைன் மூலம் வாங்க முடியும். ஐசிஐசிஐ லொம்பார்டு மற்றும் எடெல்வைஸ் நிறுவனங்கள் சோதனை ரீதியில் இதை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன.

ஐஆர்டிஏவுக்கு வந்த ஆலோசனைகள் என்ன?

ஐஆர்டிஏ உருவாக்கும் புதிய திட்டங்களுக்கான வழிகாட்டுதல் ஏற்கெனவே பிரபலமாக உள்ள காப்பீட்டு திட்டங்கள், அவை அளிக்கும் பலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாகும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பெருமளவிலானவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஐஆர்டிஏ தவிர்த்து செபி, ஆர்பிஐ உள்ளிட்டவையும் இதுபோன்ற ஆலோசனைகளை பெற்று அதை செயல்படுத்தத் தொடங்கி உள்ளன. நிறுவனங்களும் புதிய வழி காட்டுதலை செயல்படுத்தும் முன்பாக அதை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பார்த்து பிறகு விதிமுறைகளை வகுக்க ஐஆர்டிஏவுக்கு ஆலோசனை கூறுகின்றன.

பொதுவாக ஒரு காப்பீட்டுத் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்திப் பார்க்கும்போது பயனாளிகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் ரகசியமாக வைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது எவ்விதம் செயல்படுகிறது, ரகசியதன்மை எந்த அளவுக்கு காக்கப்படுகிறது என்பதையும் ஐஆர்டிஏ கண்காணிக்கிறது. அதேபோல பயனாளிகள் தரப்பிலிருந்து ஒரு அறிக்கையையும் அவர்களது கருத்துகளை பதிவு செய்து அனுப்புமாறு ஐஆர்டிஏ கேட்கிறது.

சோதனை அடிப்படையிலான இத்திட்டம் முடிவில் நிறுவனம் அளித்த தகவல்கள் மற்றும் பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை, அது எவ்வளவு பேருக்கு பலனளிக்கும் என்பனவற்றை ஆராய்ந்து அது திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அத்தகைய காப்பீட்டுத் திட்டத்துக்கு ஐஆர்டிஏ அனுமதி அளிக்கிறது. சோதனை அடிப்படையிலான முடிவுகள் ஐஆர்டிஏவு-க்கு திருப்திகரமாக இல்லாது போனால் அந்தக் காப்பீட்டு திட்டத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்பப் பெற்றாக வேண்டும் என்பதுதான் விதிமுறையாகும்.

லிபர்டி ஜெனரல் காப்பீட்டு திட்டம் இந்நிறுவனத்தின் காப்பீட்டு திட்டமானது, கார் உரிமையாளர்கள் மிகக் குறைவான தூரத்துக்கு மட்டுமே காரை பயன்படுத்துபவர்களுக்காக வரையறுக்கப்பட்டது. அவர்கள் பயணிக்கும் தூரத்துக்கு மட்டுமே காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இதன்படி 3,000 கி.மீ., 5,000 கி.மீ., 7,000 கி.மீ., மற்றும் 8,000 கி.மீ. என தாங்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையைக் கணக்கிட்டு காப்பீட்டு திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த காப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளும்போது காரின் ஓடோ மீட்டர் குறித்துக்கொள்ளப்படும். ஓராண்டுக்குப் பிறகு கார் ஓடிய தூரம் அல்லது ஓராண்டுக்கு முன்பாகவே தாங்கள் எடுத்த தூர அளவை எட்டிவிட்டால் மீண்டும் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இதை டாப்-அப் என்கின்றனர். இதில் 1,000 கி.மீ. அடிப்படையில் டாப்-அப் செய்ய முடியும். இவ்விதம் டாப்-அப் செய்யும்போது அதைவிட குறைவாக கார் ஓடியிருந்தால் பிரீமியம் திரும்ப அளிக்கப்படாது.

இந்த காப்பீட்டு திட்டத்தின் சில சாதக அம்சங்களாவன: சாலை பயணத்தில் பாதி வழியில் வாகனம் நின்று போனால், சாலையோர உதவி திட்டத்தை பயன்படுத்தலாம். அதற்கான தொகையை நிறுவனம் செலுத்தும். பழுதில்லா பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது. மரத்தின் கீழ் கார் நிறுத்தப்பட்டிருக்கும்போது மரத்திலிருந்து காய் விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தால் அதற்கு இதில் இழப்பீடு கோர முடியாது. வேறு எந்த வகையில் காருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு கிடைக்காது. இருப்பினும் நீங்கள் கிளைம் செய்தாலும் உங்களுக்கு நோ கிளெயம் போனஸ் புள்ளிகள் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும்போது வழங்கப்படும்.

பொதுவாக மோட்டார் வாகன காப்பீடு இரு வகைப்படும். அதில் மூன்றாம் தரப்பு காப்பீடு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி வாகனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படும். அடுத்தது ஓடி காப்பீடு. இது விருப்ப தேர்வாகும். ஓடி என்பது (own damage) சுயமாக ஏற்படும் சேதமாகும். குறிப்பிட்ட தூரம் மட்டுமே காரை பயன்படுத்துபவர்கள் லிபர்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யலாம். இது நீங்கள் செலுத்தும் பிரீமியம் அளவைக் கணிசமாக குறைக்க உதவும்.

உதாரணத்துக்கு உங்களிடம் ஹூண்டாய் ஐ20 கார் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் காப்பீடு மதிப்பு ரூ. 5 லட்சமாகும். நீங்கள் ஆண்டுக்கு 3 ஆயிரம் கி.மீ. தூரத்தை தேர்வு செய்வதாக இருந்தால் நீங்கள் செலுத்தும் பிரீமியம் சுமார் ரூ. 7 ஆயிரம் மட்டுமே. இதில் சாலையோர உதவிவசதி, மூன்றாம் தரப்பு காப்பீடு உள்ளிட்டவை அடங்கும். மற்ற காப்பீட்டு திட்டங்களில் நீங்கள் வழக்கமாக செலுத்தும் தொகை ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை இருக்கும்.

லிபர்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 4,500 கார் பணிமனைகளுடன் இணைத்துள்ளது. இதன் மூலம் பணமில்லா சேவையைப் பெறமுடியும். மேலும் சாலையோர உதவி வசதி கூடுதல் சிறப்பாகும். ஆனால் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. சோதனை அடிப்படையிலான திட்டம் உங்களுக்கு சரியாக பொருந்தாவிடில் நீங்கள் வழக்கமான காப்பீட்டு திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in