Published : 24 Feb 2020 08:11 AM
Last Updated : 24 Feb 2020 08:11 AM

ஹுண்டாய் டக்சன்

ஹுண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முந்தைய வெர்சனை காட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் டேஷ்போர்டு முற்றிலும் புதியது. ஃப்ரீ ஸ்டேண்டிங் டிஸ்பிளே, பானரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், முன்பக்க இருக்கைகள் இரண்டுக்கும் பவர் அட்ஜஸ்டட் ஆப்ஷன் ஆகியவை இதன் சிறப்புகளாக உள்ளன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் இரண்டு இன்ஜின்களுமே பிஎஸ் 6 தரத்தில் உள்ளன.

ஆனால் இதில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் மட்டும்தான். மேனுவல் ஆப்ஷன் இல்லை. பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனையும், டீசல் இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனையும் கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் இது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகன்

சீனாவிலும் லத்தின் அமெரிக்காவிலும் விற்பனையாகும் டி-கிராஸ் மாடல் இந்தியாவில் டைகன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் பின்புற இருக்கையில் இடவசதி அதிகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீல்பேஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4.2 மீ நீளமும், 2,651மிமீ வீல்பேஸும் கொண்டதாக இருக்கிறது. இது புதிய எம்க்யூபி ஏ0 இன் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யுவி செக்மென்டில் டைகன் போட்டியிட உள்ளது. மற்ற பிராண்டுகளைக் காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் சற்று பிரீமியம் தயாரிப்பாகவே இருக்கும் என்பதால் விலையும் அதற்கேற்பவே இருக்கும்.

எம்ஜி குளோஸ்டர்

எம்ஜி ஹெக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க மேலும் சில மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்ட மிட்டுள்ளது. ஆட்டோ கண்காட்சியில் எம்ஜி குளோஸ்டர் நீளமான எஸ்யுவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது டொயோட்டாவின் லேண்ட் குரூயிசர் எல்சி200ஐ காட்டிலும் நீளம் அதிகமானது. இது டொயோட்டா ஃபார்ச்சுனர், ஃபோர்டு எண்டேவருக்கு போட்டியாகக் களம் இறக்கப்படுகிறது. இன்டீரியர் விவரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. மூன்று வரிசை இருக்கைகள், சொகுசான பயணத்துக்கான அம்சங்கள் இதில் நிச்சயம் இருக்கும் எனக் கூறலாம்.

மாருதி பிரெஸ்ஸா

மாருதியின் காம்பேக்ட் எஸ்யுவியான பிரெஸ்ஸா சில மாற்றங்களுடன் ஆல் நியூ பிரெஸ்ஸாவாக வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இதன் இன்ஜின். முந்தைய மாடலில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் இருந்தது. தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகமாகியுள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸும் அதுவும் கொஞ்சம் ஹைபிரிட் தொழில்நுட்பமும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏழு வேரியன்ட்களில் பிரெஸ்ஸா வரவுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்பிளே 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

டாடா கிராவிடாஸ்

டாடாவின் சமீபத்திய ஹிட் அறிமுகமான ஹாரியரின் 7 இருக்கை வெர்சன்தான் இந்த கிராவிடாஸ். மூன்றாம் வரிசை இருக்கையைச் சேர்ப்பதற்கான வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கிராவிடாஸ் 170 ஹெச்பி திறனை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வர உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் விழாக்காலத்தை ஒட்டி இது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

மஹிந்திரா இ-எக்ஸ்யுவி 300

மஹிந்திராவின் காம்பேக்ட் எஸ்யுவியான எக்ஸ்யுவி 300 முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வெர்சனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனம் என்பதற்காக இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோனாவில் இருப்பதுபோல கன்சீல்ட் கிரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி இ-ட்ரானில் இருப்பதுபோன்ற கேமராவுடனான மிரர் இதில் உள்ளது. மற்றபடி இதன் பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இரண்டு வெர்சன்கள் இதில் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. போட்டி மாடல்களுக்கு ஏற்ப இந்த இரண்டு வெர்சன்களின் செயல்திறனும், பேட்டரி திறனும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x