தமிழகத்தில் தயாராகிறது யமஹா

தமிழகத்தில் தயாராகிறது யமஹா
Updated on
2 min read

யமஹா

இந்தப் பெயர் இளைஞர் களைக் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியமில்லை. ஜப்பானின் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தபோது அறிமுகமான யமஹா 100 சிசி மோட்டார் சைக்கிள் மீது இன்றளவும் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ஒரு சொடுக்கில் சீறிப் பாயும் யமஹா மோட்டார் சைக்கிள், இந்தியாவில் தயாராகிவருவது அனை வருக்கும் தெரியும். விரைவிலேயே தமிழகத்திலும் தனது உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது யமஹா நிறுவனம்.

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் சூராஜ்பூரில் ஒரு ஆலையும் ஹரியாணா மாநிலம் பரீதாபாத்தில் இரண்டாவது ஆலையும் யமஹா நிறுவனத்துக்கு உண்டு. அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு மூன்றாவது ஆலையை அமைக்க இந்நிறுவனம் திட்ட மிட்டு இதற்கான இடங்களில் ஒன்றாக தமிழகத்தைத் தேர்வு செய்தது.

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகல் எனுமிடத்தில் மூன்றாவது ஆலையைத் தொடங்க முடிவு செய்து இதற்காக 2012-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. ஏறக்குறைய மூன்ற ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள், இயந்திரங்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் பூர்த்தியாகிவிட்டன. சோதனை ரீதியில் இங்கு வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் (செப்டம்பரில்) புதிய ஆலையை செயல்படுத்த யமஹா தயாராகிவிட்டது. 180 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலைக்காக ரூ. 1,500 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஆலை செயல்படத் தொடங்கும்போது இதன் ஆண்டு உற்பத்தி 4.5 லட்சம் மோட்டார் சைக்கிள்களாக இருக்கும். இந்த ஆலை மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயமே. இந்த ஆலையுடன் இணைந்த பகுதியாக மோட்டார் சைக்கிள்களுக்குத் தேவையான உதிரிபாக சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கான வெண்டர் பார்க் அமைந்துள்ளது. இந்த உதிரிபாக சப்ளை நிறுவனங்கள் ஏறக்குறைய ரூ. 1,000 கோடியை முதலீடு செய்துள்ளன. இந்த உதிரிபாக நிறுவனங்கள் மூலம் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

யமஹா நிறுவனம் புதிய ஆலையில் சிறிதளவும் சக்தியை வீணடிக்க விரும்பாத வகையிலான தொழில்நுட்பத்தை பின்பற்றியுள்ளது. இந்த ஆலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாத வகையில் மறு சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் பின்பற்றியுள்ளது.

இதேபோல சூரிய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சூரிய மின்னுற்பத்தி பலகைகள் இங்குள்ளன. இதனால் இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்களுக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றலிலிருந்து பெறப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய ஆலையில் மோட்டார் சைக்கிள் உற்பத்தி 18 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள இரண்டு ஆலை களின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. புதிய ஆலையானது இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளில் மிகவும் பெரியதாகும்.

யமஹா நிறுவனம் நானோ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள மோட்டார் சைக்கிளை விட இது நிச்சயம் விலை குறைவாக இருக்கும்.

அதேசமயம் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய நானோ காரைப் போல குறைந்த விலை கார் என்ற முத்திரையில் அகப்படவும் இந் நிறுவனம் தயாராக இல்லை. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் புதிய தயாரிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் அதை சந்தைப்படுத்துவதில் தெளிவாக உள்ளது யமஹா நிறுவனம்.

புதிய மோட்டார் சைக்கிள் விலை ரூ. 30 ஆயிரமாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க சந்தையையும் கருத்தில் கொண்டு புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது யமஹா. பெரும்பாலும் புதிய ஆலையில் இந்த மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்படலாம் என்றாலும் அதை இன்னமும் ரகசியமாகவே வைத்திருக்கிறது இந்நிறுவனம்.

புதிய ஆலையில் 60 ஏக்கர் நிலம் பிற உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜப்பா னிய நிறுவனங்கள் ஆலையை அமைத் துள்ளன. இதில் சஸ்பென்ஷன் தயாரிக்கும் கேஒய்பி (கயாபா), சகுரா நிறுவனங்களும் அடங்கும். இந்த ஆலையில் தயாராகும் வாகனங்களில் பாதிக்கும் மேலானவற்றை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது யமஹா.

தமிழகத்தில் யமஹாவின் தயாரிப்பு களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. கட்டுபடியாகும் விலையில் யமஹா நிறுவன மோட்டார் சைக்கிள்கள் சந்தைக்கு வந்தால் அதற்கு வரவேற்பு இல்லாமலா போய்விடும்.

ramesh.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in