Published : 10 Feb 2020 14:00 pm

Updated : 10 Feb 2020 14:00 pm

 

Published : 10 Feb 2020 02:00 PM
Last Updated : 10 Feb 2020 02:00 PM

பட்ஜெட் 2020: ஏற்றமா? ஏமாற்றமா?

budget-2020

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ள சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது 2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட். பட்ஜெட்டில் விவசாயம், மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற முக்கியத் துறைகளுக்கு இயன்ற அளவு நிதி ஒதுக்கீடு செய்ததுடன் பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

ஆனால், இந்த பட்ஜெட் பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது. சம்பளதாரர்களுக்கும் சரி, துறைகளுக்கும் சரி... இந்த பட்ஜெட் உண்மையிலேயே பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து ஏற்றத்துக்குக் கொண்டுசெல்லுமா அல்லது எல்லோரும் நினைப்பதுபோல் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டா என்பதைப் பார்க்கலாம்.

தனிநபர் வருமான வரிவிதிப்பு

தற்போது நடைமுறையில் 5%, 20% மற்றும் 30% ஆக இருக்கும் மூன்று அடுக்கு தனிநபர் வருமான வரி விதிப்போடு புதிய வரிமுறையாக ஐந்து அடுக்கு வரிவிதிப்பு 10%, 15%, 20%, 25%, 30% அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய வரி விதிப்பு முறையில் பயன்பெற வேண்டுமென்றால், எந்த விதமான வருமான வரிவிலக்கும் வரிக்கழித்தலும் பெற முடியாது. அதேசமயம் இந்த இரண்டு வரிவிதிப்புகளில் சாதகமான ஒன்றை தேர்வு செய்யும் அதிகாரமும் வரிதாரருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

புதிய வரிமுறையில் வரிச்சேமிப்பு அதிகரிக்கும். ஆனால், அந்தப் பணம் என்னவாகும் என்பதுதான் கேள்வி. தற்போது இருக்கும் வரிவிலக்குச் சலுகைகளில் 70 வரிச்சலுகைகள் இந்த பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் மற்ற சலுகைகளும் நீக்கப்படும் என்கிற செய்திதான் நம் நாட்டு மக்களை சேமிக்கும் பழக்கத்திலிருந்து செலவு செய்யும் பழக்கமுள்ள நாடாக மாற்றும் என்கிற கவலையை ஏற்படுத்துகிறது.

புதிய வரிவிதிப்பு முறையில் வீட்டுக்கடனுக்கான வட்டிக்கழிவு, 80C பிரிவிலுள்ள முதலீட்டுக்கான வரிச்சலுகைகள், மெடிகிளைம், கல்வி செலவுக்கான கழிவு போன்றவை வரிச்சலுகையை பெற முடியாததால் மக்கள் சேமிக்கும் பழக்கத்தை கைவிட நேரிடும். பலர் வரி சேமிப்புக்காகத்தான் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் காப்பீடு திட்டங்களை எடுப்பது, சேமிப்புகளை மேற்கொள்வது வரும் காலங்களில் குறையலாம்.

பொதுவாக அதிக அளவில் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆசிய மக்கள், அதிலும் குறிப்பாக இந்தியர்கள். நுகர்வு அதிகரிக்க செய்யும் நோக்கத்தில் செலவு செய்ய தூண்டும் விதமாக இந்த புதிய வரிவிதிப்பு உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டின் சேமிப்பும் கணிசமாக இருப்பதால்தான் பொருளாதாரம் சமநிலையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. முழுக்க நுகரும் பொருளாதாரமாகவே மாறினால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

அறக்கட்டளை

கல்வி நிறுவனங்கள் உட்பட்ட அறக்கட்டளைகளுக்கான பதிவு முறைகளில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய முறையில், ​​பிரிவு 12AA-ன் கீழ் பதிவு மற்றும் ஒப்புதல் பிரிவு 10(23C), 80G எந்தவொரு காலாவதி காலமும் இல்லாமல் வழங்கப்படுகின்றன (குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ரத்து செய்யப்படலாம்). தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின்படி, ​​புதிய விதிகளின் கீழ் இவை 5 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட காலத்துக்கு மட்டுமே வழங்க முடியும்.

அதற்குப் பிறகு மீண்டும் விண்ணப்பித்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வருமான வரி இலாகா, அறக்கட்டளைகளைக் கண்காணித்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபதிவு கொடுக்கும் அதிகாரத்தை கொடுக்கிறது.முறையாக நடத்தப்படாத அறக்கட்டளைகளின் அங்கீகாரத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யும் அதிகாரம் வருமான வரி இலாகாவுக்கு இருக்கும்போது, புதிய சட்டம் நடைமுறை சிரமங்களை அதிகரிக்கும்.

நடவடிக்கைகளை தொடங்காத புதிய தொண்டு நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்கொடை கொடுப்பவர்கள் விலக்கு கோருவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, நன்கொடை தகவல்களை முன்கூட்டியே ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். இது வரி செலுத்துவோர் அளிக்கும் நன்கொடைக்கு தொந்தரவு இல்
லாத விலக்கு பெற வழிவகுக்கும் என்றாலும், சிறிய அறக்கட்டளைகளுக்கு மின்னணு பதிவு முறையில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலோ அல்லது தகவல்கள் சரிவர நிரப்பப்படாவிட்டாலோ நன்கொடை விலக்கு கிடைக்காது.

என்.ஆர்.ஐ-களுக்கான அறிவிப்பு

பட்ஜெட்டின் இன்னொரு முக்கிய அம்சம், ‘இந்தியாவின் வரி குடிமகன்’ என்ற விதியில் திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 182 நாட்கள் என்பது திருத்தப்பட்டு 120 நாட்களாக மாற்றப்பட்டுவிட்டது. உதாரணமாக, அமெரிக் காவில் வசிப்பவர், ஒரு நிதியாண்டில், இந்தியாவில் 182 நாள் வரை தங்கினாலும் இதுவரை வெளிநாட்டுவாழ் இந்தியராக (என்.ஆர்.ஐ.) கருதப்பட்டார். இது இந்த பட்ஜெட்டில் 120 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்த பட்ஜெட்டில் வெளிநாடுவாழ் இந்தியப் பிரஜை (NRI) வேறு எந்த நாட்டிற்கும் வரி கட்டாமல் இருந்தால் உலக வருமானத்துக்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளதால், துபாய் போன்ற வரியில்லா வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் பதட்டம் ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு, பட்ஜெட்டுக்கு அடுத்த நாள் அவசர அவசரமாக ஒருவிளக்கம் வெளியிட்டது. அதில், துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் பணியாற்றும் / தொழில் செய்பவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

அவர்கள் இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை என்று விளக்கம் வெளியிட்டது. முதல் அறிவிப்பிலேயே தெளிவாக அறிவிக்காததால் இந்தக் குழப்பமும், பதட்டமும் ஏற்பட்டு பிறகு தணிந்தது. பட்ஜெட்டுக்கு அடுத்த நாளே விளக்கம் கொடுப்பது புதுமையான ஒன்று. பார்லிமென்டில் பட்ஜெட் ஒப்புதல் பெறுவதற்குள் இது சரிசெய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என நம்பலாம்.

புதிய மாற்றங்கள்

* வருமானவரி பிரிவு 271 AADயின்படி பொய்யான இன்வாய்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதன் மதிப்பில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
* கட்டாய தணிக்கை வரம்பாக இருந்த ஆண்டு விற்பனை ஒரு கோடி ரூபாய் என்பது தற்போது 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் சில நிபந்தனைகள் உள்ளன. உதாரணமாக, விற்பனையில் 5 சதவீதத்துக்கு மேல் ரொக்கமாக இருக்கக் கூடாது. மேலும் செலவுகளும் கொள்முதலிலும் 5 சதவீதத்துக்கு மேல் ரொக்கமாக இருக்கக் கூடாது. இதன் மூலம் ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை, விற்பனை செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள், ஆடிட்டரின் உதவியின்றி, தங்களது வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்யலாம் என, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வரி தாக்கல் செய்யும் தேதி 31 அக்டோபர் என மாற்றப்பட்டுள்ளது.
* சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் இன்சூரன்ஸ் திட்டம் மூலம், வாராக்கடனில் 90 சதவீதம் வரை இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும்.
* படிவம் 26AS-இல் இதுவரை வரிப்பிடித்தம் மற்றும் அதற்குட்பட்ட வருமானம் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. தற்போது முதலீடு, செலவினங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வரிதாரரின் முக்கிய தகவல்கள் உள்ள ரகசியத் தன்மை இழந்தது போல உள்ளது.
* ஈவுத்தொகை விநியோக வரி (Dividend Distribution Tax) முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. முன்பு கம்பெனிகள் செலுத்தி வந்த 15% ஈவுத்தொகை விநியோக வரியை தற்போது ஈவுத்தொகையைப் பெறுபவர் செலுத்த வேண்டும். இதனால் அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு உபரிவரியோடு சேர்த்து 42% வரியாக செலுத்தும் நிலை உள்ளது. உயர் வருமானம் உள்ளவர்களுக்கு கருதப்படும்போது தற்போதைய 15%-க்கு பதிலாக 42% வரி என்பது சற்று கூடுதல் தான்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

“வேலை தேடுபவராக இருப்பதைவிட வேலை கொடுப்பவராக மாறு” என்பதை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் திறமைவாய்ந்த ஊழியர்களை தக்கவைக்க, கம்பெனி பங்குகளை தள்ளுபடியில் வழங்கும் முறை உள்ளது. இதற்கு செலுத்த வேண்டிய வரியை 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆண்டு விற்பனை வரி விலக்கு வரம்பு தற்போது இருக்கும் ரூ.25 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வணிகம் எளிமைப்படுத்துதல்

இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் முறைக்கு (Liberalised Remittance Scheme), TCS பிடித்தல், ஆண்டு விற்பனை ரூ.10 கோடி உள்ளவர்களிடம் 50 லட்சத்துக்கு மேல் வாங்குபவர்களுக்கு TCS பிடித்தல் போன்ற நிபந்தனைகள் வணிகத்தை எளிமைப்படுத்துதல் (Ease of doing Business) என்கிற அரசின் நோக்கத்துக்குப் பொருந்தாமல் போகிறது. வளர்ந்த நாடுகளில் தொழில் முனைவோர்களை கொண்டாடும் விதமாக முக்கிய முடிவெடுக்கும் கூட்டங்களில் பங்கு பெற அனுமதிப்பார்கள். இந்தியாவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, வரி செலுத்தி வரும் தொழில் அதிபர்களை குற்றம் புரிபவர்கள் போல பார்க்காமல் பட்ஜெட் போன்ற முக்கிய முடிவுகளில் அவர்களது கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கும் ஆட்டோமொபைல் துறையினர் தங்கள் துறையை மேம்படுத்த இந்த பட்ஜெட்டின் பால் எழுச்சி நடவடிக்கைகளை எதிர்பார்த்தனர். ஆனால் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாததது ஏமாற்றமே. வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையை உடனடியாக ஏற்படுத்தக்கூடிய அளவில் அறிவிப்புகள், திட்டங்கள் இல்லாதது குறிப்பிட வேண்டிய குறையாகவே உள்ளது.

இருந்தபோதிலும் தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அறிவித்தபடி செயல்படுத்தப்பட்டால், பொருளாதார மந்தநிலை நீங்கி வேலைவாய்ப்பு உருவாகி பொருளாதாரம் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. அப்படி மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே.


பட்ஜெட் 20202020நாட்டின் பொருளாதாரம்வருமான வரிவிதிப்புஅறக்கட்டளைபுதிய மாற்றங்கள்ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்வணிகம்Budget 2020Budget

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author