Published : 10 Feb 2020 01:43 PM
Last Updated : 10 Feb 2020 01:43 PM

நவீனத்தின் நாயகன் 13: பட்டத்து யானை போட்ட மாலை

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

‘‘ஜிப் 2” கம்பெனி ஈலானை முக்கிய தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Technical Officer) நியமித்தார்கள். MDW –இன் பிரதிநிதி சி.இ.ஓ. தொழில்நுட்ப சமாச்சாரங்களில் ஈலானுக்கு முழு சுதந்திரம். மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், வருங்காலத் திட்டம் ஆகியவற்றில் MDW – பங்கேற்கும். இந்தக் கூட்டணி கம்பெனியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. முதலில் அலுவலகத்தை விசாலமான இடத்துக்கு மாற்றினார்கள்.

இதுவரை கம்பெனி, சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்த நிறுவனங்களின் விவரங்களை மட்டுமே வெளியிட்டது. இந்த முயற்சியை அமெரிக்கா முழுவதும் இருக்கும் கம்பெனிகளின் விவரங்களைப் பதிவு செய்யும் முயற்சியாக விரிவுபடுத்தத் தொடங்கினார்கள். இதற்கான ஆள்பலம் வேண்டுமே? ஏராளமான எஞ்சினீயர்களைப் பணியில் அமர்த்தினார்கள்.

மேனேஜ்மென்ட் மேதைகள் சொல்லும், பெரும்பாலான கம்பெனிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கும் ஹெச்.ஆர். கொள்கை என்ன தெரியுமா? ``உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரிபவர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது, அவர்களிடம் கனிவோடு நடக்க வேண்டும், அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தவறுகள் செய்தால், புரிதலோடு சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான், அவர்கள் அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள், முழுத்திறமையையும் காட்டுவார்கள்.”

என் நண்பர் அம்ரீஷ், பல பிரபல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகர். நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டவர். அவர் சொல்லுவார், ``இது நடைமுறைக்கு ஒத்துவராத கொள்கை. நாம் எல்லோரும் மனதளவில் அடிமைகள். பெற்றோர், சமுதாயம் ஆகியவற்றுக்கு அஞ்சுபவர்கள்.

இதனால், எல்லா மனிதர்களையும் உந்தவைக்கும் சக்தி பயம்தான். ஒவ்வொரு மனிதனும், மனதில் தன் திறமைகளுக்கு வரம்பு வைத்திருக்கிறான். மேலதிகாரி ஈவு இரக்கம் இல்லாதவராக, அவன் உணர்வுகளை உதாசீனம் செய்பவராக இருக்கும்போது மட்டுமே அவன் இந்த வரம்புகளை விரிவுபடுத்தி முழுத் திறமைகளையும் காட்டுகிறான். வேலையில் உன்னத உந்துசக்தி தலைக்கு மேல் தொங்கும் கத்தி மட்டுமே.”

ஈலானும், அம்ரீஷ் கட்சி. அவர் தனிமையில் இனிமை காண்பவர். தன்முனைப்பும், தலைக்கனமும் அதிகம். வேலை பார்க்கும்போது தம்பி கிம்பலுடனேயே அடிதடிச் சண்டை போடுவார். தன்னிடம் கை நீட்டிச் சம்பளம் வாங்குபவர்களை விடுவாரா? தொழில்நுட்ப அறிவில் பல எஞ்சினீயர்கள் அவரைவிட மேலானவர்கள். இதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அவர்களுடன் அடிக்கடி தகராறு செய்தார். பத்து மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் முடிக்கச் சொல்லிக் கெடு வைத்தார். முடிக்காவிட்டால், கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை. சரியான நேரத்தில் செய்து முடித்தால் என்ன கிடைக்கும்? பாராட்டா? எதற்கு? சம்பளம்தான் தருகிறோமே?*

*ஸ்டீவ் ஜாப்ஸூம் இப்படித்தான். சாத்தியமேயில்லாத கெடு வைத்தல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல் ஆகிய ஈலானின் அணுகுமுறையும் இதுவே. ஆச்சரியம் என்னவென்றால், இருவர் கீழும் பணி புரிந்தவர்கள் அனைவருமே இந்த அக்னிப் பரீட்சை தங்களைச் சாதனையாளர்களாக்கியது என்று ஜாப்ஸுக்கும், ஈலானுக்கும் நன்றி சொல்கிறார்கள்.

மேனேஜ்மென்ட் உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால், ஈலானின் கொள்கை பலன் தந்தது. இதுவரை உலகம் அறிந்தேயிராத தரத்தில் விவரங்கள், வழி காட்டும் வரைபடங்கள் தயார். ஆனால், மார்க்கெட்டிங்கில் வந்தது பிரச்சினை. பணம் தண்ணீராகச் செலவழிந்தது.

``கடை விரித்தோம், கொள்வாரில்லை” என்னும் கதை. எத்தனைதான் கிம்பலும், அவர் அணியினரும் தலைகீழாக நின்றபோதும், கடைகளுக்கு இந்தப் புதிய ஊடகத்தின் மதிப்பு தெரியவில்லை. விளம்பரங்கள் வரத்து மிகக் குறைவு. எப்படியாவது வருமானத்தை அதிகமாக்க வேண்டும். என்ன செய்யலாம்? ஈலான், கிம்பல், சி.இ.ஓ. மூவரும் மூளையின் நியூரான்களுக்கு ஓவர்டைம் கொடுத்தார்கள். சூ மந்திரக் காளி! கிடைத்தது ஒரு ஐடியா.

சின்ன மீன்கள் பின்னால் ஏன் அலைய வேண்டும், திமிங்கிலங்களுக்கு வலை வீசலாம் என்று மூவரில் யாருக்கோ தோன்றியது. சூப்பர் ஐடியா. நாளிதழ்கள் சிறிய, மத்திமக் கடைகளின் வரி விளம்பரங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஜிப் 2 தரும் விவரங்கள் தங்கச் சுரங்கம். ஆகவே, கம்பெனியின் மார்க்கெட்டிங் யுக்தி மாறியது. இனிமேல், இலக்குகள் தனிக் கடைகளல்ல, நாளிதழ்கள், பத்திரிகைகள்.

இன்டர்நெட்டின் அசுர வளர்ச்சி கண்டு ஊடகங்கள் பிரமிப்பால் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த காலம். இன்டர்நெட் செய்தித்துறையில் நுழைந்தால், ஊடகங்களின் வாழ்நாள் எண்ணப்படும் என்று சிலர் கணித்துக்கொண்டிருந்தார்கள். இந்த வேளையில், அதே தொழில்நுட்பம் தங்கள் வருமானத்தைப் பெருக்க உதவும் என்று ஜிப் 2 சொன்னபோது நாளிதழ்கள் நம்ப மறுத்தார்கள். டெமோ பார்த்தார்கள்.

மாறியது மனம். நியூயார்க் டைம்ஸ், 32 நாளிதழ்கள் வெளியிட்ட நைட் ரிடர் கம்பெனி (Knight Ridder), நாளிதழ்கள், வானொலி நிலையங்கள், புத்தக வெளியீடு எனப் பல துறைகளில் கொடிகட்டிப் பறந்த ஹெர்ஸ்ட் கார்ப்பரேஷன் (Hearst Corporation) ஆகிய பல ஊடக ஜாம்பவான்கள் ஜிப் 2 – வுக்குச் சந்தாதாரர்கள் ஆனார்கள். இது மட்டுமல்ல, கம்பெனியில் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு. இதைப் பார்த்து ஏராளமான சிறிய, மத்திம நாளிதழ்களும், பத்திரிகைகளும் சந்தா கொடுக்க முன்வந்தன. முதலீடு பெருகியது.

பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள் கதைதான். ஈலானும், கிம்பலும் தங்கள் ஓல்டு மாடல் காரைக் கடாசினார்கள். கிம்பல் பி.எம்.டபிள்யூ என்னும் ஆடம்பரக் கார் வாங்கினார்; ஈலான் பந்தா மன்னர். எங்கே போனாலும், வெளிச்சம் தன் மேல் விழ வேண்டும் என்னும் ஆசை. எங்கும், எதிலும், வேகம், வேகம். ஜாகுவார் (Jaguar) என்னும் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கினார்.

பணம் மனிதனை மாற்றும் ஊக்கமருந்து. தென்னாப்பிரிக்காவில் ஈலானோடு சேர்ந்து படித்த சில பள்ளி மாணவர்கள் இப்போது தற்செயலாக ஈலானைச் சந்தித்தார்கள். பிரமித்தார்கள் – பள்ளி நாட்களில் எல்லோராலும் கேலி செய்யப்பட்டு, அடி, உதைகளை வாங்கிக்கொண்டு வாய்மூடி இருந்தவனா இன்று இப்படி? ஈலான் மாறாமல் இருந்த ஒரே விஷயம், கல்லூரிக் காதல்.

ஜெஸ்ட்டின் வில்சன் என்னும் பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்தாரே? பிசினஸில் காலூன்றுவதுவரை காதலைப் புறம் தள்ளி வைத்திருந்தார். இப்போது மறுபடியும் அரும்பியது. ஜெஸ்ட்டின் கனடாவில் பிரபல எழுத்தாளராக இருந்தார். ஈலானின் அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்தார். அடிக்கடி சந்திப்புகள், மெழுகுவர்த்தி வெளிச்ச டின்னர்கள். உறவு நெருக்கமானது.

ஈலான் மேல் யார் கண் பட்டதோ? பிசினஸில் வெடித்தது பூகம்பப் பிரச்சினை. ``சிட்டிஸெர்ச்” (CitySearch) என்னும் கம்பெனி இருந்தது. இவர்களும் ஜிப் 2 போலவே இன்டர்நெட் டைரக்டரி தயாரித்தார்கள். நாடு முழுக்க இருக்கும் கடைகளின் விவரங்கள், பல ஊர்களில் விற்பனைப் பிரதிநிதிகள். இருவரும் இணைந்தால் மாபெரும் சக்தியாக முடியும் என்று ஜிப் 2 சி.இ.ஓ. நினைத்தார். பேச்சு வார்த்தைகள் நடந்தன. புதிய கம்பெனி பெயர் ``சிட்டிஸெர்ச்” என்றும் முடிவு செய்யப்பட்டது. சேர்மென் ஈலான். நம் ஹீரோவும் சம்மதித்தார். சி.இ.ஓ. பத்திரிகைகளுக்கு இணைப்புச் சேதியை அறிவித்தார்.

என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென ஈலான் பல்டி அடித்தார். இணைப்பு வேண்டாம், இதற்கு வித்திட்ட சி.இ.ஓ. பதவி விலக வேண்டும் என்று இயக்குநர் குழுவில் தீர்மானம் கொண்டுவந்தார். அவர்கள் சி.இ.ஓ – வை மாற்றிப் புதியவரை நியமித்தார்கள். அதே சமயம், ஈலானையும் சேர்மென் பதவியிலிருந்து தூக்கினார்கள். இயக்குநர் குழுவில் அடிதடி நடக்காத குறைதான். ஜிப் 2 பெயரும் கெட்டது. இத்தனைக்கும் வில்லன் ஈலான் மட்டுமே என்று ஊடகங்களில் விமர்சனங்கள். பிசினஸில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது ஆயிரம் காலத்துப் பயிர்.

அதில் ஒரு கறை விழுந்தால், சீட்டுக்கட்டு மாளிகையாகப் பிசினஸ் சரிந்துவிடும். பல நாளிதழ்கள் ஜிப் 2 – வுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை. ஆரம்ப நாட்கள் போல், வரவு எட்டணா, செலவு பத்தணா. காகித ஓடம் கடலலை மேல் தள்ளாடியது. கம்பெனியின் நாட்கள் எண்ணப்பட்டன. இவை அத்தனைக்கும் தான்தான் காரணம் என்று ஈலான் ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஏன், உணரவேயில்லை. ஆமாம், தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் அவரிடம் கிடையவே கிடையாது.

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா.திடீர் மரணம். வாரிசு இல்லை. அடுத்த ராஜாவை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்? ராஜகுருவழி சொன்னார். பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து வீதியில் நடத்திப்போக வேண்டும். யானை யாருக்கு மாலை போடுகிறதோ, அவருக்குத்தான் சிம்மாசனம். ஒரு அநாதை இளைஞன். ஏழை. தெருவோரம் துங்கிக்கொண்டிருந்தான். யானை அவனுக்கு மாலை போட்டது.

சாப்பாட்டுக்கே திண்டாடியவன் ராஜாவானான். ஈலானுக்கும் இப்படி அடித்தது லாட்டரி. கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்த “காம்பாக் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்” (Compaq Computer Corporation) தாமாகவே வந்து தொடர்பு கொண்டார்கள். ஜிப் 2 – வை விலைக்குக் கேட்டார்கள். தந்த விலை 307 மில்லியன் டாலர்கள். ஈலானுக்குக் கிடைத்த பங்கு 22 மில்லியன்.

நம் ஊரில், ``கோடீஸ்வரர்” என்று சொல்வது போல், அமெரிக்காவில் “மில்லியனர்.” பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் சொத்து வைத்திருப்பவர் என்று அர்த்தம். அம்மா – அப்பாவுக்குத் திருமண முறிவு ஏற்பட்ட 9 வயதிலிருந்து வறுமையில் வாடிய ஈலான், 29-ம் வயதில் மில்லியனர்.

(புதிய தோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x