Published : 10 Feb 2020 01:33 PM
Last Updated : 10 Feb 2020 01:33 PM

வேலையிழப்பு அச்சத்தை எதிர்கொள்வது எப்படி?

ஸ்ரீகுமரன் நெடாத்

வேலையிழப்பு என்றாலே பலருக்கும் அச்சம் ஏற்பட காரணம், தங்களின் திறமை மீது நம்பிக்கை குறைவதால் அல்ல. மாறாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிதி பிரச்சினைகளை சமாளிக்க முடியுமா என்கிற சிக்கல்தான் பெரும் பாலானோரை கவலைக்குள்ளாக்குகிறது. தாராளமய சூழலில் தனியார் துறைதான் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.

அதேபோல வேலைக்கான உத்திரவாதம் இல்லாத சூழலும் அனைத்து துறைகளிலும் உள்ளது. பொருளாதார நெருக்கடி நிகழும்போது பணியாளர் குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்கின்றன.

பணி நீக்கம், லே-ஆஃப், பிங்க் ஸ்லிப் என இதற்குப் பல பெயர்கள் இருந்தாலும், பார்த்துவந்த வேலை இல்லை என்பதையே பல்வேறு வார்த்தைகளில் கூறுகின்றனர். திடீரென ஏற்படும் வேலையிழப்புகளை எதிர்கொள்வதற்கு நிதி திட்டமிடல் மிகவும் அவசியம். அதை முன்கூட்டியே திட்டமிட்டால் திடீரென ஏற்படும் வேலையிழப்பை தைரியமாக எதிர்கொள்ளலாம்.

அவசர கால நிதி

வேலையிழப்பு என்பது நிரந்தரமான தல்ல. இந்த நிலை வெகு விரைவிலேயே மாறலாம். அடுத்த வேலையைத் தேடி மாறுவதற்கான கால கட்டத்தை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி முன்னதாகவே கைவசம் இருந்தால் பிரச்சினை இருக்காது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப, பணியில் இருக்கும்போதே சேமிக்கும் பழக்கத்தை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.

சேமிப்பை முறையாகவும் புத்திசாலித்தனமாகவும் திட்டமிடுவது தான் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றது. எந்தச் சூழலிலும் அவசர கால தேவையைப் பூர்த்தி செய்ய குறிப்பிட்ட நிதியை உருவாக்கி வைப்பது அவசியம்.

இதுபோன்று அவசர கால நிதியை உருவாக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தர சேமிப்பு திட்டத்திலோ அல்லது பரஸ்பர நிதி திட்டத்திலோ (ஓபன் என்டட்) சேமிக்கலாம். உங்களது சேமிப்பானது பல வழிகளைக் கொண்டதாக இருக்கலாம். தொடர் வைப்பு நிதி திட்டமானது ஒரு சிறந்த சேமிப்பாகும். அதேபோல பரஸ்பர நிதி திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பதும் சிறந்த வழியாகும்.

இந்த அவசர கால நிதியானது உங்களது மாதாந்திர சம்பள தொகையில் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக் கானதாக இருத்தல் அவசியம். அதாவது வேலையிழப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து அடுத்த வேலை தேடுவதற்கு அதிக பட்சம் 6 மாதம் தேவைப்படலாம் என்ற கணக்கீட்டில் இந்த சேமிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் உங்களது மாதாந்திர சுலப தவணை தொகைகளை எவ்வித சிரமமும் இன்றி செலுத்த முடியும்.

நிதி நெருக்கடி இல்லாத சூழலில் உங்களால் தெளிவாகவும், துல்லியமாகவும் செயலாற்ற முடியும். புதிய வேலையை தேர்வு செய்வதில் எவ்வித மனக் குழப்பமும் இல்லாமல் உங்களால் செயலாற்ற முடியும். செலவைக் குறைப்பதும் மிக முக்கிய மானதாகும். அதேபோல மாதாந்திர செலவினங்களை கட்டுக்குள் வைப்பதும் அவசியம். இதன் மூலம் உங்களது முன்னுரிமை தவணைகளை செலுத்த முடியும். குறிப்பாக வீட்டுக் கடன் தவணையில் சில சலுகைக் காலம் உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் கடன் அட்டை உள்ளிட்ட தவணைகளை கட்டாயம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வட்டி அதிகரித்து பெரும் நிதி சிக்கலில் மாட்டிவிடும். சில பல சமயங்களில் இத்தகைய கடன் சுமைதான் திவாலாகும் சூழலுக்கு இட்டுச் செல்லும். ஆகையால் இத்தகைய கடனுக்கான திரும்ப செலுத்தும் தவணையை கட்டாயம் முன்னுரிமை அடிப்படையில் செலுத்துவது அவசியமாகும்.

முதலீடுகளை தொடருங்கள்

சில முக்கியமான சேமிப்புகளான பிபிஎப், எஸ்ஐபி போன்ற சேமிப்புகளை எந்த சூழலிலும் நிறுத்திவிடக் கூடாது. சிறிது காலத்துக்கு நிறுத்தலாம் என்றாலும் அது நீண்டகால அடிப்படையில் உங்களது சேமிப்புக்கு கிடைக்கும் அதிகபட்ச பலனைக் கிடைக்காமல் செய்துவிடும்.

சில சேமிப்புகளை மீண்டும் தொடர்வதற்கு சில கட்டணங்களை செலுத்த வேண்டிய சூழலும் உருவாகலாம். எஸ்ஐபி போன்ற தொடர் சேமிப்பு திட்டங்களை தற்காலிமாக நிறுத்துவது சரியான அணுகுமுறையல்ல. அதற்குப் பதிலாக செலவுகளைக் குறைப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

நிதியைக் கையாள்வது, நிதி நிர்வாகம் என்பது துணியை நனைப்பது, சோப் போடுவது, பிறகு துவைத்து அலசுவது, காயவைத்து அயர்ன் செய்வதைப் போன்றது. இதை கடைசியிலிருந்து முதலாக மேற்கொள்ள முடியாது. அதைப்போலத்தான் சேமிப்பை நிறுத்துவதும் பாதிப்பாக அமையும். அதேபோல அத்தியாவசிய திட்டங்களான காப்பீடு உள்ளிட்டவற்றையும் நிறுத்தக் கூடாது. மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தாமலிருந்தால், நோய் வரும்போது அதற்கு அதிகபட்ச செலவை மேற்கொள்வது பெரும் சுமையை ஏற்படுத்திவிடும்.

வரிச் சுமை

வேலையிழப்பால் சிரமம் ஏற்பட்டாலும், உங்களுக்கான வரிச் சுமை குறையாது. ஏனெனில் வேலையிழப்பு காலத்துக்கு உங்களுக்கு நிறுவனம் அளிக்கும் சில சலுகை ஊதியத்துக்கு வரி செலுத்தித்தான் ஆக வேண்டும். சிலருக்கு பணிக் கொடை உள்ளிட்ட பெரும் தொகை கூட கிடைக்கலாம். அவர்கள் தனிநபருக்கான வருமான வரம்பில் செலுத்த வேண்டிய வரியை செலுத்தித்தான் ஆக வேண்டும். வருமான வரி சட்டம் 89-ன் கீழ் (பிரிவு 21 ஏ) சில சலுகைகளை ஊழியர்கள் பெற முடியும். ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதில் சில காரணங்களுக்கு வரி விலக்கு சலுகை உண்டு.

இது தவிர தாமாக முன்வந்து ஓய்வு பெறுவோர், அதற்காக பெறும் பணிக் கொடை ஆகியவற்றுக்கு வரி விலக்கு பிரிவு 10 (10சி) உண்டு. இது வரி பிரிவு 2 பிஏ விதிமுறைகளைப் பூர்த்தி செய்வதாக இருத்தல் அவசியம். அதிலும் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்துக்கு மிகாமலிருத்தல் வேண்டும். அதேபோல விடுப்புடன் கூடிய சுற்றுலா தொகை உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு உண்டு. வேலையிழந்த ஊழியருக்கு நிறுவனத்தில் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அவருக்கான பங்குகளை அவர் விற்கலாம். இதற்கு வரி விலக்கு உண்டு.

திட்டமிடல் அவசியம்

வேலை இழப்புக்கான குறிப்பிட்ட காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வது உங்களுக்கு பலனளிக்காது. இதில் இழப்பீடானது நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றினால் மட்டுமே பொருந்தும். கட்டாயத்தின் பேரில் ராஜினாமாவை பெற்று ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றும் அத்தகைய நடைமுறைக்கு இழப்பீடு கிடைக்காது.

சுருக்கமாக கூற வேண்டுமாயின் நிதி நிர்வாகம் குறித்து சரிவர திட்டமிடுவதே சிறந்தது. போதிய அளவுக்கு நிதியை வைத்திருப்பதே சிறந்தது. அப்படி திட்டமிட்டு வாழ்ந்தால் ``பிங்க் ஸ்லிப்’’ கண்டு கலங்க வேண்டியிருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x