Published : 10 Feb 2020 01:18 PM
Last Updated : 10 Feb 2020 01:18 PM

தனியாரைத் தத்தெடுக்கும் அரசு!

ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பின் போதும் மத்திய அரசு அதன் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட முடியாமல் சிரமப்படுவதை காணமுடிகிறது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்று நிதி திரட்டுகிறது. இவ்வாறாக, தன்னுடைய செலவீனங்களுக்கே நிதியில்லாமல் தன் பங்குகளை தனியாருக்கு விற்று வரும் அரசு, தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகிக்க ஆர்வம் காட்டுவதை எவ்வாறாகப் புரிந்துகொள்வது?

கட்டுமான நிறுவனமான யுனிடெக் திவாலாகியுள்ள நிலையில், அதை அரசு தன் பொறுப்பில் எடுத்த நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது தான் சமீபத்திய விவகாரம். யுனிடெக் நிறுவனம் 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 29,800 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.14,270 கோடி அளவிலும், ஆறு நிதி நிறுவனங்களிடமிருந்தும் ரூ.1,805 கோடி அளவிலும் பணம் பெற்றது. ஆனால், மொத்தத் தொகையில் ரூ.5,800 கோடியை உறுதியளித்த திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது.

யுனிடெக்கின் முறையற்ற நிர்வாகத்தினால் கடும் நிதிச் சிக்கல் ஏற்பட்டது. விளைவாகவாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வீடுகள் கட்டித்தருவதில் பிரச்சினையை எதிர்கொண்டது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) யுனிடெக் நிறுவனத்தின் இயக்குநர்களை நீக்கிவிட்டு, அந்நிறுவனத்தை அரசு நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்கியது. ஆனால் என்சிஎல்டி-யின் உத்தரவு சரியல்ல என்று கூறி அதன் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இரண்டு வருடம் கழித்து தற்போது அதே உச்ச நீதிமன்றம் யுனிடெக்கை நிர்வகிக்க அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, யுனிடெக் கைவிட்ட கட்டுமானத்திட்டங்களை அரசு தன் பொறுப்பில் கட்டித் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிடெக் நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்து நிற்கும் 12,000 வாடிக்கையாளர்களுக்கு அரசின் இந்தத் திட்டம் மீட்சியளிக்கும் என்று பொது விவாதமாக முன்வைக்கப்படுகிறது.

தனியார் நிறுவனம் திவாலாகும்போது, அதனால் மக்கள் பாதிப்பை சந்திக்கும் சமயத்தில் அரசு அவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு நடவடிக்கை எடுப்பது மிக அவசியம். ஆனால், அதன் பொருட்டு தனியார் நிறுவனத்தை தத்தெடுத்துக் கொள்வது சரியான வழிமுறை அல்ல. ஏற்கெனவே நிதிச் சிக்கலில் இருக்கும் அரசுக்கு இது கூடுதல் சுமையாகவே அமையும். மாறாக, யுனிடெக்கை வேறேதும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்.

2009-ம் ஆண்டு சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் பெரும் ஊழலில் மாட்டி நெருக்கடியை எதிர்கொண்டபோது, அரசு சத்தியம் நிறுவனத்தை தன் பொறுப்பில் எடுத்தது. ஆனால் அதை சில மாதங்களிலேயே மஹிந்திரா நிறுவனத்துக்கு விற்றது. அதேபோல், ஐஎல் அண்ட்எஃப்எஸ் திவாலான நிலையில் அதையும் அரசு தன் பொறுப்பில் கொண்டுவந்தது. ஆனால் அந்நிறுவனங்களின் பிரச்சினைகள் வேறு. யுனிடெக் நிறுவனத்தின் பிரச்சினை வேறு. ஐஎல் அண்ட் எஃப்எஸ் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்டது அல்ல.

அது நாட்டு நிதிநிலை தொடர்புடையது. அரசு அதில் கூடுதல் கவனம் எடுப்பது அவசியம் மட்டுமல்ல, கடமையும்கூட. ஆனால் யுனிடெக் விவகாரம் அவ்வாறானது அல்ல. யுனிடெக் லாபத்தை ஒற்றை நோக்காக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். தற்போது கட்டுமானத் துறை சரிவைக் கண்டுள்ள நிலையில் யுனிடெக் போல பல நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. அந்த நிறுவனங்கள் அனைத்தும் அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள முடியுமா?

யுனிடெக் நிறுவனத்தை அரசு ஏற்று நடத்தும்போது அரசுக்கு லாபம் கிடைக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் தொழில் செய்வது அரசின் வேலையல்ல என்று கூறிதான் மத்திய அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது. எனில், தற்போது தனியார் நிறுவனம் ஒன்றை தன் பொறுப்பில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x