Published : 10 Feb 2020 12:38 PM
Last Updated : 10 Feb 2020 12:38 PM

கண்கவர்ந்த கான்செப்ட் கார்கள்

ஒவ்வொரு ஆட்டோ கண்காட்சியிலும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் கார்களைக் காட்டிலும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ள தொழில்நுட்பத்தில் சில பத்தாண்டுகள் மேம்பட்ட கண்களைக் கவரும் கான்செப்ட் கார்களைப் பார்ப்பதற்காகவே கூட்டம் கூட்டமாகக் குவிவார்கள். அந்த வகையில் இந்த ஆட்டோ கண்காட்சியிலும் அட்டகாசமான கான்செப்ட் கார்களைப் பார்க்க முடிந்தது.

மஹிந்திரா ஃபன்ஸ்டர் இவி

பட்டாம்பூச்சி சிறகு போன்று திறக்கும் கதவுகளுடன் இந்த ஃபன்ஸ்டர் எலெக்ட்ரிக் கார் மனதைக் கவர்ந்தது. முன்பக்கத்தில் இலுமினேட்டட் கிரில், எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றுடன் ஸ்போர்ட் கார் போலவே இருந்தது. வடிவமைப்பு, தோற்றம், நிறம், தொழில்நுட்பம் என அனைத்துமே நம்மை சில ஆண்டுகள் முன்னே இட்டுச் சென்றுவிடுகின்றன. இதுபற்றிய விவரங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் பார்வையை விட்டு அகற்ற முடியாத அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

மாருதி ஃபுச்சுரோ-இ

மாருதி ஃபுச்சுரோ-இ

பட்ஜெட் கார்களைத் தயாரிப்பதில் மிகவும் திறமை வாய்ந்த நிறுவனமான மாருதி இந்த ஆட்டோ கண்காட்சியில் ஃபுச்சுரோ-இ என்ற அட்டகாசமான கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி அசத்தியது. கூபே வடிவிலான இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி தற்போது டிசைன் நிலையில் உள்ளது. உட்புறம் முழுவதும் நீலம் மற்றும் ஐவரி தீமில் உள்ளது. டேஷ்போர்ட் முழுவதுமாக தொடுதிரை உள்ளது.

ஸ்டியரிங் உட்பட சில அம்சங்களைத் தவிர வழக்கமாக கேபினில் உள்ள அம்சங்கள் பெருமளவில் இதில் காணப்படவில்லை. டிஜிட்டல் மயமாக்கப் பட்ட ஒன்றாக இது இருக்கலாம். ஃப்யூச்சர்-எஸ் கான்செப்டாக வந்து தற்போது சந்தையில் எஸ்-பிரஸ்ஸோவாக அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த ஃப்யூச்சுரோ-இ கான்செப்டும் விரைவில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுண்டாய் லே ஃபில் ரோஜ்

ஹுண்டாய் லே ஃபில் ரோஜ்

கடந்த வருடம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஹுண்டாயின் லே ஃபில் ரோஜ் கான்செப்ட் மாடல் முதன் முறையாக இந்தியாவில் இந்த ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் டிசைன் ஹுண்டாயின் எதிர்கால டிசைன் மொழியாகும். இதன் ஸ்போர்ட்டி டிசைன் ஹுண்டாயின் சமீபத்திய மாடல்களான கோனா எலெக்ட்ரிக், நெக்சோ, சான்டா-ஃபீ ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த லே ஃபில் ரோஜ் முன்புறத்தை மிகப்பெரிய பிளாக் ஃபினிஷ் கிரில் ஆக்கிரமித்திருக்கிறது.

ஹெட்லைட் சமாச்சாரங்கள் அனைத்தும் கிரில்லுடனேயே இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளன.காரின் பில்லர்கள் அனைத்தும் கூபே வடிவிலான தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் மிகவும் மினிமிலிஸ்ட் செய்யப்பட்ட அம்சங்களே உள்ளன. டேஷ்போர்டில் டிஜிட்டல் அம்சங்கள் அதிகமாக உள்ளன. இதன் பெரும்பாலான அம்சங்கள் எட்டாம் தலைமுறை சொனாட்டாவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

டாடா சியாரா இவி

டாடா சியாரா இவி

டாடா மோட்டார்ஸ் இந்த ஆட்டோ கண்காட்சியில் தனது எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் மாடல் சியாராவை அறிமுகப்படுத்தியது. இது ஆல்ஃபா ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்யுவிக்கான அனைத்து அம்சங்களும் இதன் தோற்றத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் பார்ப்பதற்கு லேண்ட் ரோவர் டிஃபண்டர் போலவே இதன் தோற்றம் இருக்கிறது. சியாரா எஸ்யுவியில் இருப்பதுபோலவே பின்புறம் முழுவதுமாக கிளாஸ் வடிவமைப்பு தரப்பட்டுள்ளது.

பின்புறத்தில் சிங்கிள் எல்இடி டெயில்லைட் எஸ்யுவிக்கு ஸ்லீக் தோற்றத்தைத் தருகிறது. இதன் எலெக்ட்ரிக் பவர் ட்ரெயின் அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்பட்சத்தில் விரைவில் இது சந்தைக்கு வந்து கலக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x