Published : 03 Feb 2020 01:30 PM
Last Updated : 03 Feb 2020 01:30 PM

ஏற்றம் தரும் மாற்றம்!

சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.,
prakala@gmail.com

நாட்டின் பொருளாதாரம் இன்றுள்ள சூழலில் தொழில்கள் எல்லாம் கடும் போட்டிக்கு ஆளாகி, நலிவடைந்துவருகின்றன. பல லட்சம் தொழில்முனைவோர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தினசரிகளிலும், டி.வியிலும் பொருளாதார சரிவைப் பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. ஆனால்,எந்த ஒரு நெருக்கடியிலும் எல்லோருமேபாதிக்கப்படுவதில்லை. நெருக்கடியைப் புரிந்துகொண்டவர்களும், அதைச் சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்களும் பிழைத்துக்கொள்கிறார்கள்.மற்றவர்கள் நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் புகை வண்டி நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பல ஜட்கா வண்டிகளும், மாட்டு வண்டிகளும் நிற்கும். அவைகளெல்லாம் எங்கே சென்றன? என்ன ஆயின? சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ போன்ற வாகனங்களின் அறிமுகத்தால் இவை மக்களுக்குத் தூரமாயின. பிரயாணிகள் வேகமாகவும், சவுகரியமாகவும் ஆட்டோ போன்றவற்றில் செல்ல முடிந்தது. அதனால் ஆட்டோ போன்ற வாகனங்கள் வென்றன. அதுசார்ந்த தொழில்கள் தழைத்தன!

ஒரு காலத்தில் கதர் ஆடை அணிவதுதான் நம்அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. பாலியெஸ்டர், டெரிகாட்டன், டெரிலின் போன்ற பல சிந்தட்டிக் ஆடைகள் வந்தவுடன், அதைப்பலரும் உபயோகிக்க ஆரம்பித்தனர். இன்று நீங்கள் நல்ல பருத்தி ஆடை வாங்க வேண்டுமென்றால், நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். சிந்தட்டிக் ஆடைகளின் வகைகள், வண்ணங்கள், விலை போன்ற பல சவுகரியங்களால், அவை வென்றன. அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்ட தொழில் முனைவோர்கள் வென்றார்கள்!

சினிமா வந்து, பல லட்சம் நாடகக் கலைஞர்களை ஓரங்கட்டியது. அந்த சினிமாவையும் டெலிவிஷன் வந்து உலுக்கியது. டெலிவிஷனை இன்று உலுக்கிக்கொண்டிருக்கிறது இன்டர்நெட். இன்று 5 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டிவரை ஆன்லைனில்தான்…

நான்கைந்து ஆண்டுகள் முன்புவரை டிராவல்ஸ் (கார் வாடகைக்கு விடும்) தொழில்கள் தழைத்தன. ஓலா, ஊபர் என இரு “ஆப்”-கள் வந்ததால், டிராவல்ஸ் தொழிலையே பலர் மூடும் நிலைக்கு வந்துவிட்டனர்.

இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் சிறு தொழில்களுக்கு மட்டும்தானா? பெரிய தொழில்களுக்கு பாதிப்பு வருவதில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். விரலுக்கு தகுந்த வீக்கம் போல, பிரச்சினை அனைவருக்கும்தான். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது வேகமாக பிரபலமாகி வருகிறது உலகெங்கிலும் – இந்தியா உட்பட! பல்லாயிரம் கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் போன்றவற்றின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசித்தால் புரியும்!

இன்று பெரிய அளவில் வேலை வாய்ப்பை கொடுக்கும் துறை ஆட்டோமொபைல். இதில் தற்போது வேகமாக வந்துகொண்டிருக்கும் மாற்றத்தைப் பாருங்கள்! எலக்ட்ரிக். அது ஏற்படுத்தப்போகும் மாற்றத்தை நாம் நினைத்து பார்த்தோமேயானால் பயம்தான் வரும்! வெளிநாடுகளில் ஏற்கனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கச்சாஎண்ணையையே பொருளாதாரமாகக் கொண்டிருக்கும் பல வளைகுடா நாடுகள் கதி என்னஆகும்? ஐ.சி என்ஜின்களோடு (Internal Combustion Engines) ஒப்பிடும்போது, எலக்ட்ரிக் கார்களில்உதிரிபாகங்கள் மிகமிகக் குறைவு. இன்று ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் பல்லாயிரம் தொழிற்சாலைகளையும், அதில் வேலைசெய்வோரின் நிலைமையையும், இன்னும் நாடு முழுவதிலும் தொழில் செய்துவரும் சிறுசிறு மெக்கானிக்குகளின் நிலைமையையும் சற்று யோசித்துப் பாருங்கள்!

செல்போன் வந்ததும், பி.சி.ஓ கடைகளெல்லாம் என்ன ஆயின? நாடு முழுவதும் பல லட்சம் பேர் அதைத் தொழிலாகச் செய்துவந்தார்கள். இன்று உங்களால் அது ஒரு தொழில் என்று யோசித்துப் பார்க்க முடிகிறதா? பி.எஸ்.என்.எல் என்றநிறுவனமே இன்று ஆடிப்போய் உள்ளது. இதுபோல பல உதாரணங்களை கூறிக் கொண்டேபோகலாம். இவற்றையெல்லாம் உங்களை பயமுறுத்தக் கூறவில்லை. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அதை நாம் எவ்வாறு நமக்கு லாவகமாக்கிக்கொள்கிறோம் என்பதுதான் கேள்வி.

போக்குவரத்து விஷயத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், பழைய ஜட்கா, மாட்டு வண்டிகளும், பின்னர் டிராவல்ஸ் தொழிலும் அடி வாங்கினாலும், ஓலா, உபர் வருகையினால் எத்தனை லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள், முதலாளிகள் உருவானார்கள் என்று பாருங்கள். சிந்தெட்டிக் ஆடைகள் வந்ததும், ஜவுளி வியாபாரம் எவ்வளவுபெருகியது. உடுத்த சரியான ஆடை இல்லாமல் கஷ்டப்பட்ட எத்தனை கோடி மக்களுக்கு ஆடை கிடைத்தது. சினிமா வந்ததும் நாடகக் கலைஞர்கள் பாதித்தாலும் புதிதாக கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்தது. டெக்னீஷியன்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் வேலை கிடைத்தது. சினிமா ஒரு பெரும் பொருளாதாரமாகவே மாறியது என்பதுதான் உண்மை.

எலக்ட்ரிக் கார்களினால் ஏற்படப் போகும் நன்மைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாசுபடாத சுத்தமான காற்று எனும் சூழலை சற்று கற்பனை செய்துபாருங்கள். அப்படி சூழல் மாறினால் நகரவாசிகளின் பெருவாரியான நோய்கள் காணாமல் போனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. வங்கிகளில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது நாடெங்கிலும் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்; கம்ப்யூட்டர் வந்தால் எங்களது வேலை போய்விடும் என்று! என்றுமில்லாத அளவுக்கு இன்று இந்தியாவில் வங்கி ஊழியர்கள் உள்ளனர்.

முன்பு நூற்றுக் கணக்கில் டெலிவிஷன் ஸ்டேஷன்கள் இருந்தன. இன்றோ ஆயிரக்கணக்கில் யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன. இவற்றிலெல்லாம் யார் வேலை செய்கிறார்கள் – நமது இளைஞர்கள்தான் – லட்சக்கணக்கில்! இதுபோல பற்பல துறைகள், பற்பல தொழில்கள் புதிதாக நாளுக்கு நாள் உருவாகிவருகின்றன. அந்தப் புதிய பொருளாதார தொழில்கள் நினைக்கமுடியாத அளவுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன/ உருவாக்கிக் கொண்டிருக்கின்றன/ இனியும் உருவாக்கும். எந்த ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஒரே நேர்கோட்டில் உயர்ந்துகொண்டே செல்லாது; ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். அவ்வாறு இருப்பதும் நன்மைக்கே. இல்லையென்றால் நாம் செய்கின்ற தவறுகள் நமக்கே புரிபடாமல் போய்விடும்.

அரசாங்க சட்ட திட்டங்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றை நம்மால் மாற்ற முடியாது; ஆகவே அவற்றைப் பற்றி கவலைப்படாமல் நம்மை சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தொழிலில் உள்ள நிலையற்ற தன்மையை சமாளிப்பது என்பது எளிதாகிவிடும். தொழிலை மேம்படுத்த நம்மால் இயன்றதை, முடிந்த அளவு செய்ய வேண்டும்.

நம்மில் பலரும் அமேசானைக் கண்டு பயப்படுகிறோம். ஆனால் அமேசான் போன்ற பெரும் முதலையை, நம் தொழிலின் தனித்துவத்தால் நேராக நின்று போட்டியிட முடியும். அமேசான் போன்ற நிறுவனங்களால், பெரும்பாலோனோர் நுகரும் பொருட்களைத்தான் மார்க்கெட் செய்ய முடியும். காஞ்சிபுரம் பட்டு சேலையை வாங்க நினைப்பவருக்கோ அல்லது நெகமம் காட்டன் சேலையை வாங்க நினைப்பவருக்கோ அல்லது ஸ்பெஷல் கிரீன் டீ தூளை வாங்க நினைப்பவருக்கோ அல்லது நல்ல தேக்குமர கட்டிலை வாங்க நினைப்பவருக்கோ சர்வீஸ்செய்ய முடியாது.

பொது மக்கள் நான் அமேசானில்தான் வாங்குவேன் என்று அடம்பிடிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நாணயம், நம்பிக்கை, நியாயமான விலை, துரிதமான வாடிக்கையாளர் சேவை போன்றவைதான் பிரதானம். அது உங்களிடம் கிடைத்தால், ஆன்லைனில் அமேசான் வெப்ஸைட்டிலிருந்து உங்கள் வெப்ஸைட்டுக்கு மாற எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வினாடிதான்!

தங்களது தனித்துவத்தால் வெற்றிபெற்ற இந்திய நிறுவனங்கள் பல உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை நியூ ஏஜ் பிரைவேட் செக்டார்வங்கிகள் (ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி போன்றபல) ஒரு வகை. ஹெச்டிஎஃப்சி வங்கி தனது கால்களை பதிக்கும்பொழுது, இந்தியாவின் கிட்டத்தட்ட மொத்த வங்கி சேவைகளும் பொதுத்துறை வங்கிகளில் பிடியில் இருந்தன.

இன்று நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை வங்கிகள் 19 உள்ளன. இந்த வங்கிகள் அனைத்தின் சந்தை மதிப்பு ரூ. 5,75,644 கோடியாகும் (27/01/2020 நிலவரப்படி). இந்த 19 வங்கிகளை விற்றாலும், அப்பணத்தைக் கொண்டு ஒருதனியார் வங்கியை (ஹெச்டி.எஃப்சி பேங்க்) வாங்க முடியாது. ஏனென்றால் அந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.6,64,309 கோடியாகும். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் ‘இந்த ஒரு வங்கி எப்படி தன் வசம் வசதியான கஸ்டமர்கள் அனைவரையும் ஈர்த்தது’ என!

அதேபோல் ஒரு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாகப் பாரம்பரியமாக இருந்து வந்த வங்கி சாரா நிதி நிறுவனங்களை முக்கியமில்லாமல் செய்துவிட்டது. தனது துரிதமான லோன் பிராசஸிங்கினால்! அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் கடன் கொடுக்கும் நிறுவனம் இது. எவ்வாறு கடன்கொடுக்கிறார்கள், எங்கிருந்து கடன்கொடுக்கிறார்கள். எவ்வாறு பிராசஸ் செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும் முன் உங்கள் கடன் அப்ரூவ் ஆகி வந்துவிடும்.

நாம் மேலே குறிப்பிட்ட 19 பொதுத்துறைவங்கிகளில் முன்னிலையில் உள்ள 2 வங்கிகளைத் தவிர (எஸ்பிஐ மற்றும் பேங்க்ஆஃப் பரோடா) மீதி 17 வங்கிகளை விற்றாலும், பஜாஜ் ஃபைனான்ஸை விலைக்கு வாங்க முடியாது. 17 பொதுத் துறை வங்கிகளின் சந்தை மதிப்பு ரூ. 2,50,777 கோடியாகும். பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ. 2,51,016 கோடியாகும்.

விளம்பரமும், மார்க்கெட்டிங்கும் இன்று வேறு தளத்துக்கு மாறிவிட்டது. டி.வி, பத்திரிகைபோன்றவற்றில் விளம்பரம் செய்ய பெரிய நிறுவனங்களால்தான் முடியும். ஆனால் அதைவிட வேகமாக, அதிகமாக மக்களை சென்றடையசமூக வலைதளங்கள் வழி செய்துகொடுக்கின்றன. இந்த சோஷியல் மீடியாவிற்கு முன் சிறு தொழில் செய்யும் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் சரிசமம். அந்த வாய்ப்பை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூரில் கடலை மிட்டாய் தயாரிப்பவர் டெல்லியில் இருப்பவருக்கும், அமெரிக்காவில் இருப்பவருக்கும் விற்க முடியுமா என்றால், சந்தேகமே! ஆனால் இன்று ரொம்பவே ஈஸி. அவரால் வரும் ஆர்டருக்கு சப்ளை செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி! ஆனால் உங்கள் பொருள் உண்மையானதாக, தனித்துவம் உள்ளதாக இருக்க வேண்டும். கடலை மிட்டாயில் அப்படி என்ன தனித்துவமாக செய்துவிட முடியும் என்று நீங்கள் கேட்கலாம். சமீப காலங்களில் கடலை மிட்டாயை ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்து பணக்காரர் ஆனவர்கள் பலர்.

ஆகவே நீங்கள் எந்தத்தொழிலில் இருந்தாலும், உங்கள் தொழிலை கூகுள் போன்ற வெப்ஸைட்டுகளில் லிஸ்ட் செய்துள்ளீர்களா என்று பாருங்கள். உங்களுக்கென்று ஒரு வெப்ஸைட், சமூக வலைதள பக்கம். உங்கள் தொழிலைப் பற்றிய தனித்துவத்தை வீடியோவாக அப்லோட் செய்யுங்கள். சக தொழிலில் இருப்பவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். சக தொழிலில் உள்ளவரை போட்டியாளராக நினைக்காமல், நண்பராக்கிக்கொள்ளுங்கள். உங்கள் துறை/ தொழில் குறித்த விஷயங்களைத் தொடர்ந்து கவனித்து கற்றுக்கொள்ளுங்கள்.

சிறு மற்றும் குறுந்தொழில்கள் வளைந்துகொடுக்கும் தன்மையுடையவை. அத்தன்மை பெரிய தொழில்களுக்கு மிகக் குறைவு. ஆகவே சிறுதொழில்கள் மறு அவதாரம் எடுப்பது ஈஸி. புதிய யுத்திகளை அமல்படுத்துவது எளிது. முதலீடு குறைவு. முதலீடு அதிகம் தேவைப்பட்டால், இன்று பணம் திரட்ட என்றுமே இல்லாத அளவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.

பல சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்கள் ஜிஎஸ்டி வந்ததிலிருந்து தொழில் முடங்கிவிட்டது. பணமதிப்பு நீக்கத்தினால் பெரும்பாதிப்பு ஏற்பட்டது என்கிறார்கள். உண்மைதான்.ஆனால், ஜிஎஸ்டி-யை மாற்றி அமைப்பதோ அல்லது பணமதிப்பு நீக்கத்தை கட்டுப்படுத்துவதோ நம் கையில் இல்லை.

நடந்துவிட்டதைப் பற்றி கவலை கொள்ளாமல், உங்கள் தொழிலைமுனைப்பாக செய்வதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பாருங்கள். அதே ஜிஎஸ்டி பல தொழில்களுக்கு ஊக்குவிப்பானாக அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதே பணமதிப்பு நீக்கம் பல துறைகளை மேலெழும்பி வரச் செய்துள்ளது. எந்தஒரு செயலுக்கும்/ சட்டத்துக்கும் பயனடைந்தவர்களும் இருப்பார்கள்; பாதிப்படைந்தவர்களும் இருப்பார்கள். துரதிஷ்டவசமாக சிலர் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அதற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டால் பயனடையலாம்.

அரசாங்கத்தினால் மாற்றம் ஏற்படாவிட்டால், உலகத்தில் வேறெங்கிலும் இருந்து வேறு விதமாக மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அம்மாற்றம் சொந்த நகரத்திலிருந்து வரலாம்; நமது போட்டியாளர்களிடமிருந்து வரலாம்; நமது சொந்தத்திலிருந்து வரலாம்; நமக்கு சம்பந்தம் இல்லாத இடத்திலிருந்து வரலாம்; நாம் நினைத்துப் பார்க்காத ரூபத்தில் வரலாம். ஆகவே மாற்றத்தைக் கண்டு அஞ்சாமல், அதை நேருக்குநேர் எதிர்கொள்வதுதான் சிறந்தது.

இந்த சவால்களை எதிர்கொள்ள பயப்படுவது சிறு மற்றும் குறுந்தொழில் முதலாளிகள் மட்டுமல்ல. 1990-களில் முதன்முதலாக இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபொழுது ‘பாம்பே கிளப்’ என்று கூறக் கூடிய இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள், அரசாங்கத்தைச் சந்தித்து அரசாங்கம் தங்களுக்குச் சலுகைகள் மற்றும் கால அவகாசம் தராவிட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை விழுங்கிவிடும் என்று கூறினர். அதுவரை போட்டிகள் ஏதும் பெரிதாக இல்லாமல்சவுகரியமாகத் தொழில் செய்துவந்தவர்களுக்கு, முதன்முதலாக அச்சம் உருவானது.

25/ 30 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் பொழுது இந்திய நிறுவனங்கள் பல இன்று வானளாவி நிற்கின்றன. அன்றிருந்ததைவிட இன்று உலகம் முழுதும் தொழில் செய்கின்றன. மாற்றத்தைச் சந்திக்கும் பொழுது தன்னையும் அறியாமல், மனம் சிறிது அஞ்சத்தான் செய்யும். ஆனால் ஒவ்வொரு தொழில் சார்ந்த மாற்றமும் இதுவரை நன்மையைத்தான் பொதுமக்களுக்கும், தொழில் புரிபவர்களுக்கும் கொடுத்துள்ளது.

ஆகவே, இந்தியப் பொருளாதாரம் அடுத்த கால்/ அரை நூற்றாண்டுக்கு வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதில் பல புதிய துறைகள் உருவாகும், சில துறைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதேபோல் உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகும். அதே சமயத்தில் சில நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இது காலத்தின் கட்டாயம்.

ஆகவே, சறுக்கல்களைக் கண்டு அஞ்சாமல், சிகரங்களை நோக்கிச் செல்வோமாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x