

பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதரின் சமீபத்திய அறிமுகம் ஏதர் 450 எக்ஸ். முந்தைய மாடலான 450-ன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக 450 எக்ஸ் வெளிவந்துள்ளது. இதுவரை பெங்களூரு மற்றும் சென்னையில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வந்த ஏதர், இந்தப் புதிய அறிமுகம் மூலம் டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் கால்பாதிக்கிறது.
இந்தப் புதிய மாடலின் 6 கிலோவாட் மோட்டார், 26 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 450 மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் திறன் 30 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 450 மாடலின் 5.4 கிலோவாட் மோட்டார் 20.5 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். 450 எக்ஸ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கிலோமீட்டர் வரை செல்லும்; 450 மாடல் 107 கிலோ மீட்டர் செல்லும். அதேபோல் 450 எக்ஸ் 40 கிமீ வேகத்தை 3.3 விநாடிகளில் எட்டும். 450 மாடல் அதே வேகத்தை 3.84 விநாடிகளில் எட்டும்.
450 எக்ஸின் பேட்டரி ரெகுலர் சார்ஜரில் 3 மணி 35 நிமிடங்களில் 80 சதவீதம் நிரம்பிவிடும். 100 சதவீதம் சார்ஜ் ஆக 5 மணி 45 நிமிடங்கள் ஆகும். சார்ஜிங் நிலையங்களில் இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜரில் நிமிடத்துக்கு 1.5 கிலோ மீட்டருக்குத் தேவையான சார்ஜ் நிரம்பும்.
வெள்ளை, கிரே, மின்ட் ஆகிய வண்ணங்களில் 450 எக்ஸ் கிடைக்கும். இதில் இருக்கும் 7 அங்குல தொடுதிரை, 1 ஜிபி ரேம், 8 ஜிபி சேமிப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். 4 ஜி சிம் கார்டை இதில் இணைத்துக்கொள்ளலாம். வைஃபை, புளுடூத் ஆகிய அடிப்படை வசதிகள் இதில் உள்ளன. ஈகோ, ரைடு, ஸ்போர்ட், வார்ப் ஆகிய நான்கு வகை பயணத் தேர்வுகள் இம்மாடலில் உள்ளன. மன நிலைக்கும், சூழலுக்கும் ஏற்ப அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்தப் புதிய மாடல் பிளஸ், ப்ரோ என்ற இரண்டு வேரியன்ட்களில் வெளிவருகிறது. பெங்களூரில் 450 எக்ஸ் பிளஸின் விற்பனையக விலை ரூ.1.49 லட்சம்; ப்ரோவின் விலை ரூ.1.59 லட்சம். சந்தா திட்டம் மூலமும் இவற்றை வாங்கிக்கொள்ளலாம். அத்திட்டத்தின்கீழ் இவற்றின் ஆரம்பத் தொகையாக ரூ.99,000 செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சந்தாவாகச் செலுத்த வேண்டும். 450 எக்ஸ் பிளஸுக்கு ரூ.1,699-ம், ப்ரோவுக்கு ரூ.1,999-ம் மாதம் செலுத்த வேண்டும்.