‘ஐக்யூப்’ டிவிஎஸ்-ன்முதல் பேட்டரி ஸ்கூட்டர்

‘ஐக்யூப்’ டிவிஎஸ்-ன்முதல் பேட்டரி ஸ்கூட்டர்
Updated on
1 min read

பஜாஜ் நிறுவனத்தைத் தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனமும் பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. முதல் தயாரிப்பாக ஐக்யூப் என்ற மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜ் ‘சேடக்’, ஏதர் 450 எக்ஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ளது ஐக்யூப். அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முகப்பிலும், பின்புறத்திலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது ஒயிட் ஃபினிஷில் மட்டும் வெளிவருகிறது. ஆரம்பகட்டமாக பெங்களூரில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. விலை ரூ.1.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் 1,000 ஸ்கூட்டர்களைத் தயாரிக்க டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. ரூ.5,000 செலுத்தி இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையம் வழியாகவும், பெங்களூரில் உள்ள டீலர்ஷிப் வழியாகவும் ஐக்யூப்பை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதன் எலக்ட்ரிக் மோட்டார் 4.4 கிலோவாட் திறனைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் செல்ல முடியும். அதேபோல் 4.2 விநாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டும்.

இதன் பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். முழுவதும் நிரப்பட்ட பேட்டரியைக் கொண்டு 75 கிமீ தூரம் பயணிக்க முடியும். நேவிகேஷன் அசிஸ்ட், பார்க்கிங் லொகேஷன், கால் அலர்ட்ஸ் உள்ளிட்ட வசதிகளை உள்ளிடக்கிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டரையும் ஐக்யூப் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in