Published : 10 Aug 2015 11:18 AM
Last Updated : 10 Aug 2015 11:18 AM

பாம்புகளால் பறிபோன சுரங்கத்திட்டம்: அதானிக்கு நேர்ந்த சோகம்

பரமபத விளையாட்டில் பாம்பிடம் சிக்கினால் கீழே செல்ல வேண்டியது தான். அதேபோல போல பாம்பினால் ஓர் சுரங்க திட்டத்தையே கைவிடும் சூழ்நிலை அதானிக்கு நேர்ந்திருக்கிறது.

இந்திய பிரதமர் ஆஸ்திரேலியா செல்லும் போது கூடவே சென்று பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தொழிலதிபர் கவுதம் அதானி.

ஆஸ்திரேலியாவில் இவரது தொழில் குழுமம் மேற்கொள்ளும் சுரங்க திட்டத் துக்காக எஸ்பிஐ வங்கி 100 கோடி டாலர் கடன் கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (சமீபத்தில் எஸ்பிஐ கடன் கொடுக்க முடியாது என்று கைவிரித்தது வேறு கதை) போட்டதால் பல செய்தி சேனல்களில் விவாதப் பொருளானார். இப்போது அந்த சுரங்கத் திட்டம் கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திட்டம் என்ன?

கார்மிகேல் (Carmichael) சுரங்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பிரச்சினை தான். 5 வருடங்களுக்கு முன்பு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சுரங்கம் அமைப்பது அங்கிருந்து ரயில் பாதை அமைத்து அபோட் (Abbot) துறைமுகத்துக்கு நிலக்கரியை கொண்டுவந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு நிலக்கரியை எடுத்து வருவதுதான் இத்திட்டம்.

ஆனால் இந்த திட்டம் 5 வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஆஸ்திரேலி யாவின் மிகப்பெரிய நிலக்கரி திட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அங்குள்ள வனப் பகுதியில் வாழும் பாம்பு மற்றும் அரிய வகை பல்லி இனங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஆஸ்திரேலிய நீதிமன்றம் இந்தத் திட்டத்தை ரத்து செய்தது. ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சர் தன்னுடைய துறையின் பரிந்துரையைக் கவனிக்க தவறிவிட்டார் என்று கூறியுள்ளது.

இந்த திட்டம் 2010-ம் ஆண்டு அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து ஆஸ்திரேலிய சூற்றுச்சுழல் ஆர்வலர்கள் இதற்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார்கள். மேலும் பல சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் வழங்க மறுத்திருக்கின்றன. ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து காமன்வெல்த் வங்கி, இந்த திட்டத்தின் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகி கொண்டது.

பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய இன்னும் 6 முதல் 8 வார காலம் ஆகும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக தவறு, இதனை சரி செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறது.

இது மிக முக்கியமான திட்டம். ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்கும் இந்த திட்டம் தேவை. நீதிமன்றத்தின் இந்த முடிவு உலகத்துக்கு பாதிப்பு என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்திருக்கிறார். 10,000 நபர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

இதுவரை 300 கோடி டாலர் வரை அதானி குழுமம் செலவு செய்திருக்கிறது என்று ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

நாட்கள் அதிகரிக்கும் போது அந்த திட்டத்தில் இருந்து கிடைக்கும் லாப வரம்பு குறையும். கடன் வழங்க பல நிறுவ னங்கள் மறுத்த நிலையில் அதானி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x