

திருச்சியைச் சேர்ந்தவர் பிரேம் சிவா. நகரின் மையத்தில் பல சரக்கு மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை தொழில் செய்து வருகிறார். கூடவே பல தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டிங் ஏஜென்ஸியும் எடுத்து நடத்தி வருகிறார். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் தனது உழைப்பு மட்டுமல்ல, தான் மேற்கொண்டுவரும் இன்னொரு தொழிலும் பக்க பலமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
பேன்சி ஸ்டோரிலிருந்து வரும் வருமானம் போதாதென்று இவர் தேர்ந்தெடுத்த தொழில் வீடுகளைக் கூட்டிப் பெருக்கும் ’துடைப்பம்’ உற்பத்தி செய்வது.
ஏம்பா நீ செய்யிறதுக்கு வேற நல்ல பிசினஸே கிடைக்கலியா? கல்யாணம் பண்ண பொண்ணு எப்படி கொடுப்பாங்க என பல கேள்விகளை இந்த தொழிலில் இறங்கியபோது எதிர் கொண்டிருக்கிறார். ஆனாலும் தனது தொழில் முயற்சியில் முன்னேற்றங்களைக் கண்டு வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வருகிறார். இவரது அனுபவம் இந்த வாரம் உன்னால் முடியும் பகுதியில் இடம் பெறுகிறது.
பேன்ஸி ஸ்டோர் தொழில் அப்பா நடத்தி வந்தார். அதிலிருந்து ஓரளவுதான் வருமானம் வந்து கொண்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அப்பா தவறிவிட்டார். அதனால் குடும்பத்தை நான் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுவரையில் குடும்ப சுமையை அப்பா எங்களுக்கு கொடுத்ததில்லை, என்றாலும் தொடர்ந்து கடையை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் கடை வருமானத்தை தாண்டி அடுத்த கட்டமாக வேறு தொழில் முயற்சிகளிலும் இறங்க வேண்டும் என்கிற யோசனை எழுந்தது.
பொதுவாக வீடுகளைப் பெருக்க தென்னை ஓலை குச்சிகளால் ஆன விளக்குமாறு பயன்படுத்துவார்கள். கொஞ்சம் வசதி படைத்த வீடுகளில்தான் பூந்துடைப்பம் என்கிற கோரை துடைப்பம் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் பூந்துடைப்பம் விலை அதிகமாக இருக்கும் என்று மக்கள் நினைத்ததுதான். இன்னொரு காரணம் பரவலாக எல்லா கடைகளிலும் இது கிடைக்காது. ஏனென்றால் அப்போது தமிழ்நாட்டில் இதை தொழிலாக எடுத்து செய்வதற்கு யாரும் கிடையாது. வட மாநிலங்களிலிருந்து இங்குள்ள மொத்த வியாபாரி, அவர்களிடமிருந்து சில்லரை வியாபாரி என வாங்கிக் கொண்டிருந்தார்கள். எனது கடைக்கும் அப்படித்தான் வாங்கிக் கொண்டிருந்தேன்.
எனவே இந்த தொழிலுக்கான சந்தையை நாமே உருவாக்க முடியும் என்று அதை தயாரிப்பதற்குரிய வேலைகளில் இறங்கினேன். பூந்துடைப்பம் தயாரிப்பதற்கான கோரைப் புற்கள் அசாம், மேகலயா, சிலிகுரி, நேபாளம் போன்ற இடங்களில்தான் விளைகிறது. இங்கிருந்தான் வாங்க முடியும். இது ஆண்டு தோறும் கிடைக்காது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என மூன்று மாதங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஆண்டுமுழுவதும் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப் பொருளை வாங்கி இருப்பு வைக்க வேண்டும் என பல விவரங்களை அதற்கு பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
இதற்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து இந்த தொழிலில் இறங்கியவர்கள், ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் மட்டுமே தாக்குபிடித்து நின்றிருக்கின்றனர். இதற்கான சந்தையை நாம் உருவாக்கியபிறகு தொழிலை மேற்கொள்ள முடியவில்லை என்றால் வடநாட்டிலிருந்து வரும் தயாரிப்புகள் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும். எனவே தொழில் தொடங்கிய பிறகு எக்காரணத்தைக் கொண்டும் பாதியிலேயே விட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
ஆரம்பத்தில் நானே துடைப்பம் தயாரித்து, சைக்கிளில் கட்டிக்கொண்டு திருச்சி சுற்று வட்டாரக் கடைகளுக்கு கொண்டு செல்வேன். ’இதையெல்லாம் யாருங்க கேட்டு வாங்குவாங்க” என கடைக்காரர்களே சுணக்கம் காட்டுவார்கள். துடைப்பத்தை வெறுமனே கொடுக்காமல் அதற்கு ராக்போர்ட் என பெயர் வைத்து கவரில் அடைத்து கொடுப்பது என சில வழிமுறைகளைக் கடைபிடித்தேன். மெல்ல மெல்ல விற்பனை வர ஆரம்பித்தது. தற்போது சென்னை தவிர்த்த பல ஊர்களுக்கும் சப்ளை செய்கிறேன்.
இப்போது ஆண்டுக்கு 10 லோடு வரை கோரைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொழில் வளர்ந்திருக்கிறது. இந்த தொழிலிருந்து வருமானம் எடுத்து என இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன். எனது மனைவியும் தற்போது எனது உழைப்புக்கு பக்க பலமாக இருக்கிறார். இருபது பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறேன். எனது இந்த வளர்ச்சிக்கு வங்கிக் கடனுதவிகளும் பக்க பலமாக இருந்தது என்பதையும் நன்றியோடு குறிப்பிட்டார்.
வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கு சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்த தொழில்முனைவோர்.
maheswaran.p@thehindutamil.co.in