

1960ம் ஆண்டு என நினைக்கிறேன். எனது பாட்டியும் நானும் கடலூரிலிருந்து இரவில் போட்மெயிலில் தேவக்கோட்டை செல்வதற்கு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறினோம். வண்டி கிளம்பியவுடன் எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் ஓடிவந்து முதல் வகுப்பில் ஏறிக்கொண்டார். அப்ப ஏஸி எல்லாம் கிடையாது. காலையில் நாங்கள் காரைக்குடியில் காப்பி வாங்கும் பொழுது அவர் மூன்று சோடா வாங்குவதைப் பார்த்த பாட்டி ’என்னப்பா வயிறு சரியில்லையா’ என்று கேட்டார். `அதெல்லாம் இல்லை, முகம் கழுவ சுத்தமாக இருக்குமே என்று வாங்கினேன்’ என்றார். மினரல் வாட்டர் இல்லாத காலம் அது.
நமக்குக் குடிக்கக்கூட கிடைக்காத சோடாவை இவர் இப்படி உபயோகிக்கிறாரே என எனக்கு வியப்பு. பாட்டி `அவர்கள் பெரிய பணக்காரப் பரம்பரை. பர்மா, மலேசியா, சிலோனில் கடை இருந்தது. இவனும் இவன்தம்பியும் பாட்டன் சொத்தை ஆட்டம் போட்டு அழித்து வருகிறார்கள். இவன் தம்பி குழந்தைக்கு கால் அலம்பவே சோடா வாங்குவான். வீட்டிலுள்ள 5 பேருக்கு 6 வேலையாட்கள். நெய்யில்தான் பணியாரம் சுடுவார்கள். தோசை பிய்ந்து விட்டால் சாப்பிட மாட்டார்கள். தும்பைப் பூவாக இட்லிக்கு தினமும் 3 கலரில் சட்னி. எல்லாவற்றிலும் ஆடம்பரம்தான்.
இப்ப பர்மா கெட்டுப்போச்சு. ஒன்றும் வராது. வரும்படி குறைந்தாலும் இருக்கிற சொத்தை அடகு வைத்துக் கடன் வாங்கி செலவழிப்பார்கள். எந்தச் சவுகரியத்தையும் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். எவ்வளவு நாட்களுக்கு ஓடும் எனத் தெரியவில்லை’ என்றார்.
பின்னர் அக்குடும்பத்தினர் நொடித்துப் போனதை நாங்களே பார்த்தோம். வெளிநாட்டு வட்டிக்கடைகள், உள்ளுர் பஞ்சாலை, காபி எஸ்டேட் என்பதில் தொடங்கி நகை வீடு என எல்லாம் போயிற்று. அவர்கள் உள்ளுரில் இருக்க வெட்கப்பட்டு வெளியூரில் வேலைக்குச் சேர்ந்து வாடகை வீட்டில் குடியேறியது பின்கதை.
சற்றே எண்ணிப் பாருங்கள்! வரவுக்கு மேல் எப்படி யாரால் செலவு செய்ய முடியும்? கடன் தானே ஒரே வழி! மளிகைக்கடை, பால்காரன், வீட்டுவாடகை என்று பாக்கி வைக்கலாம். அல்லது வீடு, நகை என அடமானம் வைத்தோ, வேறு வழியிலோ கடன் வாங்கலாம். அது வட்டிச் செலவை மேலும் கூட்டும். பின்னால் வரப்போகிற வருமானத்தை நம்பி செலவழிப்பது மேற்கத்திய கலாச்சாரம்! ஆபத்தானது!! சரிப்படாது!!! அடுத்த மாதம் சரிகட்டலாம் என கிரெடிட் கார்டில் 2.99% மாதாந்திர வட்டிக்கு வாங்கினால் வருட வட்டி 40%க்கும் மேலே!
செலவில் ஒரு அளவுகோல், அலகு இருந்தால்தானே அதைக் கட்டுப்படுத்த முடியும்? வாடகை செலவு, சம்பளத்தில் 20% மேல் கூடாது, கடன், சம்பளத்தில் 50% மேல் இல்லை என்பது போல ஏதேனும் வரையறைகள் வேண்டுமில்லையா?
தனது பொருளின் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி பின்னால் அதுவும் இல்லாமல் கெட்டுவிடும் என்று சொல்கிறார் மெய்ஞானி வள்ளுவர்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் - குறள். 479
somaiah.veerappan@gmail.com