Published : 20 Jan 2020 02:19 PM
Last Updated : 20 Jan 2020 02:19 PM

நவீனத்தின் நாயகன் 10: ஒவ்வொரு அடியும் திட்டமிட்ட அடி!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலான், ரெஸ்ஸி இருவரும் புதிய வீட்டில் குடியேறினார்கள். கடைக்குப் போய் ஏராளமாகக் கறுப்பு நிறப் பேப்பரும், ஒட்டு நாடாவும் (Cellotape) வாங்கினார்கள். வீட்டின் ஜன்னல்கள் ஒவ்வொன்றையும் அளந்து, குறிப்பெடுத்துக்கொண்டார்கள். பேப்பரை ஜன்னல் சைஸுக்கு வெட்டினார்கள்.

சூரியன் மறையக் காத்திருந்தார்கள். சுற்றுப்புற வீடுகளின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்தன. எங்கும் நிசப்தம். ஈலானும், ரெஸ்ஸியும் தங்கள் வீட்டு விளக்குகளையும் ஸ்விட்ச் ஆஃப் செய்தனர். இருட்டு, கும்மிருட்டு. கறுப்புப் பேப்பர், ஒட்டு நாடா, கத்தரி, குட்டி டார்ச் லைட்.

சதித்திட்டம் ஸ்டார்ட். ஈலான் ஒவ்வொரு ஜன்னலாகப் போனான். ரெஸ்ஸி பேப்பர்களையும், டேப்பையும் எடுத்துக் கொடுத்தான். ஈலான் அத்தனை ஜன்னலிலும் ஒட்டினான். ஈலான் வீட்டுக்கு வெளியே வந்தான். ரெஸ்ஸி லைட்களைப் போட்டான். ஒரு ஜன்னலிலும், கறுப்புப் பேப்பரைத் தாண்டி வெளிச்சமே தெரியவில்லை. ஆப்பரேஷன் சக்ஸஸ்.

சாதாரணமாக, இரண்டு நாடுகளின் விமானப் படைகளுக்குள் யுத்தம் நடக்கும்போதுதான், இந்த முன்னேற்பாடு செய்வார்கள். ராத்திரியில் எதிரி விமானம் குண்டுபோட வந்தால், அவர்களுக்கு இலக்குகள் தெரியக்கூடாது என்பதற்காக. ஈலான் இருட்டடிப்புச் செய்தது ஏன்? வந்தது வெள்ளிக்கிழமை. இரவு மணி எட்டு.

அம்பலமானது திட்டம். இளைஞர்களும், இளைஞிகளுமாக சுமார் நூறு ஜோடிகள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். தலா ஐந்து டாலர்கள் வாங்கிக்கொண்டு ஈலான் அவர்களை உள்ளே அனுமதித்தான். முன்னறை இருட்டு. அடுத்த அறையைத் திறந்துவிட்டான். வந்தவர்கள் கண்கள் ஆச்சரியத்தில். நடனத்தளம், இருட்டில் ஜொலிக்கும் பெயின்ட் அடிக்கப்பட்ட சுவர்கள், சுழலும் கலர் கலர் லைட்கள், உணர்ச்சிகளை உசுப்பேத்தும் இசை.

ஒரு மூலையில் மதுவகைகள். அந்த அறை சிறிய “இரவுக் கேளிக்கை விடுதி”(Nightclub)யாகிவிட்டது. ஈலானிடம் ஒரு பழக்கம். எப்போதாவது தான் மது அருந்துவான். அதுவும், இது பிசினஸ். ஆகவே, பணம் கலெக்ட் செய்வதிலும், ஏதாவது சச்சரவுகள் வந்தால், தீர்த்துவைப்பதிலும் மட்டுமே குறியாக இருந்தான். அதிகாலை. எல்லோரும் போனதும், ஈலானும், ரெஸ்ஸியும் வசூலை எண்ணினார்கள்.

மயக்கம் போடாத குறைதான். அவர்கள் கொடுக்க வேண்டிய மாத வாடகையைவிடப் பல மடங்கு அதிகப் பணம் கல்லாவில். கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் போதுமான பொழுது போக்கு வசதிகள் இல்லை, ஊரின் ஒதுக்குப் புறத்தில் ``நைட் கிளப்” திறக்கலாம் என்று ஐடியா கொடுத்த ஈலானின் பிசினஸ் திறமையைப் பார்த்து ரெஸ்ஸி பிரமித்தான். நைட் கிளப் வாராந்தர வாடிக்கையானது. விரைவில் அந்த வீடு போதவில்லை. 14 அறைகள் கொண்ட இன்னும் பெரிய வீட்டுக்கு மாறினார்கள்.

ஈலான் அம்மாவிடமிருந்து எதையும் மறைப்பதேயில்லை. சொன்னான். ``மகன் வீட்டு சொந்தக்காரரை ஏமாற்றுவது நிஜம். ஆனால், சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. கிடைக்கும் பணத்தையும் படிப்புக்குத்தான் செலவழிக்கிறான்” என்று ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, இன்னும் ஒருபடி மேலே போனார். ஒவ்வொரு வாரமும் வந்து, இரவு முழுக்க விழித்து, வசூலைக் கண்காணிக்க உதவினார். இப்படி ஒரு மகன், இப்படி ஒரு அம்மா! பல்வேறு ஈடுபாடுகள் இருந்தாலும், அவை ஒன்றையொன்று பாதிக்காமல் ஈலான் திட்டமிட்டுச் செயல்பட்டான். வெள்ளி இரவு முதல், ஞாயிறு இரவு முடிய நைட் கிளப் சம்பாத்தியம்.

அப்புறம், படிப்பு, பாடம் தாண்டிய அறிவுத்தேடல் வாசிப்பு. வகுப்பில் முதன்மை மாணவன்; அறிவியல் புத்தகங்கள் வாசிப்பு, தோழர்களோடு அவை தொடர்பான விவாதங்கள். சூரியசக்தி ஈலானைக் கவர்ந்தது. வகுப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். ஈலான் தேர்ந்தெடுத்த தலைப்பு, ``சூரியசக்தியின் முக்கியத்துவம்.” விவரங்கள் தேடினான். பிரமித்தான்.

சூரியன் ஒவ்வொரு நாளும் உருவாக்கும் சக்தி, ஒட்டுமொத்த உலகின் ஆற்றல் தேவையைவிட 2 லட்சம் மடங்கு அதிகம். ஆனால், சூரியசக்தியில் சுமார் ஒரு சதவிகிதத்தையே நாம் பயன்படுத்துகிறோம். மின்சாரம் தயாரிக்க நாம் பயன்படுத்துபவை, பெரும்பாலும் பெட்ரோலியம், நீர்சக்தி.

பெட்ரோலிய மூலப்பொருட்களின் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. நாம் சுவாசிக்கும் மாசுக்காற்றுக்கு முக்கிய காரணமும் பெட்ரோலியப் புகைதான். ஆனாலும், பரிசுத்தமான சூரியசக்தி பற்றி ஏனோ,யாரும் விழிக்கவேயில்லை. ஈலான் தன் அறிக்கையில் இதைச் சுட்டிக்காட்டினான். விண்வெளியில், சூரிய ஒளியை மின்சாரமாக்கும் இரண்டு பிரம்மாண்டக் கருவிகளின் படமும், அறிவியல் விளக்கங்களும்.

ஆழமான அறிக்கை, தொழில்நுட்ப நுணுக்கம். 23 வயது மாணவனிடம் கொட்டிக் கிடக்கும் திறமை கண்டு பேராசிரியர்கள் வியந்தார்கள். 100–க்கு 98 மதிப்பெண்கள்! அமெரிக்கக் கல்வித் திட்டத்தின்படி, கோடை விடுமுறையில் தொழிற்சாலையில் நடைமுறைப் பயிற்சிக்குப் போக வேண்டும். ஈலான் எட்டடி பாயச் சொன்னால், பதினாறடி பாய்பவன். அவன் தேர்ந்தெடுத்தவை இரண்டு நிறுவனங்கள் ; பகலில், ``பினாக்கிள் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்” (Pinnacle Research Institute) ; இரவில், “ராக்கெட் சயின்ஸ் கேம்ஸ்” (Rocket Science Games) கம்பெனி.

இதற்குச் சில காரணங்கள். ஏன் பினாக்கிள்? தன் ஆராய்ச்சியின்போது, சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது, கிடைக்கும் ஏகப்பட்ட சக்தியைச் சேமித்துவைக்க விசேஷக் கருவிகள் தேவை என்று ஈலான் அறிந்தான். இவற்றின் பெயர், மின் தேக்கிகள் (Capacitors). இரண்டு மின்கடத்திகளை (Conductors) ஒரு மின்காப்புப் பொருள் (Insulator) கொண்டு பிரித்தால் அது ஒரு மின்தேக்கியாகச் செயல்படும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால், இரண்டு செம்புத்துண்டுகளுக்கு நடுவே ஒரு காகிதத்தையோ, பிளாஸ்டிக் துண்டையோ வைத்தால், கிடைப்பது மின் தேக்கி.வலிமை அதிகமான மின் தேக்கிகள் “தீவிர மின் தேக்கிகள்” (Ultracapacitors) என்று அழைக்கப்பட்டன.

இவை விரைவாகச் சார்ஜ் ஆகும்; இதேபோல், மின்சக்தியை விரைவாகவும் விநியோகம் செய்யும். பினாக்கிள் இத்தகைய தீவிர மின் தேக்கிகள் தயாரித்தார்கள். ஏன் ராக்கெட் சயின்ஸ் கேம்ஸ் கம்பெனி? அவர்கள் விண்வெளிப் பயணம், ராக்கெட் தொடர்பான வீடியோ கேம்ஸ் தயாரித்தார்கள். சிறுவயது முதலே, வீடியோகேம்களில் இருந்த நாட்டம், ராபர்ட் ஹைன்லைன், ஐஸக் அஸிமோவ், டக்ளஸ் ஆடம்ஸ் ஆகிய மூவரின் அறிவியல் புதினங்கள் படிப்பால், விண்வெளி மீது ஏற்பட்டிருந்த காதல்.

இரண்டு கம்பெனிகளிலும் முழுக்க முழுக்க வித்தியாசமான அனுபவங்கள். பினாக்கிள் அறிவியல் மேதைகளின் கூடாரம். தீவிர மின் தேக்கிகள் துறை தொழில்நுட்பத்தில் புதிய எல்லைகளைத் தொட்டுக்கொண்டிருந்தது. விஞ்ஞானிகள் தங்கள் அறிவைப் பயிற்சிக்கு வந்த இளைஞனோடு தயக்கமே இல்லாமல் பகிர்ந்துகொண்டார்கள்.

ராக்கெட் சயின்ஸ் கேம்ஸ் கம்பெனி பினாக்கிளிருந்து முழுக்க முழுக்க மாறுபட்ட இன்னொரு உலகம். கேம்ஸ் தயாரிப்போடு, மாபெரும் வெற்றி கண்ட “ஸ்டார் வார்ஸ்” சினிமாவின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளும் அப்போது இங்கே நடந்துகொண்டிருந்தன.

கம்பெனிக் கம்ப்யூட்டர் நிபுணர்கள், ஓவியர்கள், அனிமேஷன் வல்லுநர்கள், ஸ்டார் வார்ஸ் குழுவினரோடு நடத்தும் பல விவாதங்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பு ஈலானுக்குக் கிடைத்தது. தொழிற்சாலை நடைமுறைப் பயிற்சி, ஏராளமான மாணவர்களுக்குக் கல்வித்திட்டம் திணிக்கும் கட்டாயம். ஆகவே, அதை விளையாட்டுத் தனமாக எடுத்துக்கொள்வார்கள். தன் அறிவை வளர்க்கக் கிடைத்த வரப்பிரசாதமாக ஈலான் எடுத்துக்கொண்டான்.

இரண்டு நிறுவன ஊழியர் களிடமும் ஈலான் பார்த்தது உழைப்பு, கடும் உழைப்பு. அதிலும், ராக்கெட் கேம்ஸ் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி. பெரும்பாலான ஊழியர்கள் வீடுகளுக்கே போவதில்லை; தூங்குவார்களா என்றே தெரியாது. எப்போதும், கண்களில் உறக்க மயக்கம். தூங்குவது, குளிப்பது, லஞ்ச், டின்னர் என்னும் பெயரில் சான்ட்விச் மெல்லுவது எல்லாம் ஆபீசில்தான். சாதனைகளின் மந்திரச்சாவி கடும் உழைப்புத் தான் என்று அம்மா அடிக்கடி அவனிடம் சொல்லுவார்.

அதை நடைமுறையிலும் வாழ்ந்து காட்டிக்கொண்டிருந்தார். ராக்கெட் கேம்ஸ் இந்த வார்த்தைகளை இன்னும் உறுதிப்படுத்தியது. தானும் அப்படி வாழவேண்டும் என்று முடிவு செய்தான்.
கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பினான். அடுத்த செமஸ்டர் ஆராய்ச்சியாக அவன் எடுத்துக்கொண்டது, தீவிரமின் தேக்கிகள். தன் தொழிற்பயிற்சி அனுபவம் அத்தனையையும் கொட்டினான்.

நவீனத் தொழில்நுட்பத்தை, சிக்கலான சமாச்சாரத்தைத் தெளிவாக விளக்கியிருந்தான். சாதாரணமாக பிசிக்ஸ் மாணவர்கள் அறிவியல் கொள்கைகளை மட்டுமே சொல்லுவார்கள். ஈலான் பலபடிகள் மேலே போயிருந்தான். ஒவ்வொரு பாகத்தின் விலை. உருவாக்கும் செலவு எனத் தந்திருந்தான். பிசிக்ஸ், பொருளாதாரம் இரண்டையும் படித்துக்கொண்டிருந்த அனுகூலம், பினாக்கிள் தந்த விவரங்கள் உபயம்.

பேராசிரியர்கள் தீர்ப்பு, 100 – க்கு 97 மதிப்பெண்கள்! இன்னும் சில மாதங்களில் படிப்பு முடியும். அடுத்து என்ன செய்யலாம்? மேற்படிப்பா, சொந்த பிசினஸா என்று மனம் நிறையக் கேள்விகள். கலிபோர்னியா மாநிலத்தில் இருந்த சிலிக்கான் பள்ளத்தாக்குப் (Silicon Valley) பகுதிதான், தொழில்நுட்பத்தின் மையமாக இருந்தது.

ஹியூலட் பக்கார்ட், ஆப்பிள், யாஹூ ஆகிய கம்பெனிகள் இங்கே இருந்தன. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் பல முன்னோடி ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்ததோடு, தன் வளாகத்தில் தொழிற்பேட்டை அமைத்து, தொழில் முனைவர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தது.

தன் வருங்காலம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தான் என்று ஈலான் முடிவெடுத்தான். பென்சில்வேனியாவை விட்டான். சிலிக்கான் பள்ளத்தாக்கில் குடியேறினான். அவன் தற்காப்புத் திலகம். ஒருவேளை பிசினஸ் தொடங்கத் தாமதமானால், சும்மா இருக்கக் கூடாதே? ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழக டாக்டர் படிப்புக்குப் பதிவு செய்துகொண்டான். படிப்பா பிசினஸா? வரும் நாட்கள் தீர்மானிக்கும்.

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x