Published : 20 Jan 2020 01:35 PM
Last Updated : 20 Jan 2020 01:35 PM

புதுப்பொலிவுடன் அசத்தும் ஆக்டிவா 6ஜி

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் 10 ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த ஆக்டிவா தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டே வருகிறது. புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதுப்பொலிவுடன் புதிய தொழில்நுட்பம், புதிய வசதிகள் என அசத்துகிறது 2020-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆறாம் தலைமுறை ஆக்டிவா.

பிஎஸ் 6 தர நிர்ணயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் இன்ஜின் 110சிசி திறன் கொண்டது. இது மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவருடன் இயக்கப்படுகிறது. மேலும் சத்தம் குறைவான மோட்டார் மூலம் இயக்கப்படும் ஸ்கூட்டர்என்ற பெருமையையும் இது கொண்டிருக்கிறது. இதை சாத்தியப்படுத்தும் ஏசிஜி மோட்டாருக்கான காப்புரிமையையும் ஹோண்டா தன்வசம் வைத்துள்ளது.

புதிய அம்சங்கள் புதிய தொழில்நுட்பங்கள் என மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் முந்தைய மாடலை விட கூடுதலாக 10% மைலேஜ் தரக்கூடியதாகவும் இது உள்ளது. இந்தப் புதியஆக்டிவாவில் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் புரோகிராமிங் வசதியுடன் செயல்படுத்தப்படுகிறது. தேவையான எரிபொருளைச் சரியாகக் கணித்து செலுத்தும் வகையில் நுண்ணறிவு சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் செலவு குறைக்கப்பட்டு மைலேஜ் அதிகரிக்கப்படுகிறது.

இதில் உள்ள டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் தாராளமான கிரவுண்ட் கிளியரன்சுடன் சுகமான ஓட்டும் அனுபவத்தை மென்மையான சவாரியாகத் தருகிறது. இருக்கையைத் திறக்கவும், எரிபொருள் நிரப்பும் மூடியைத் திறக்கவும் பட்டன் வசதி தரப்பட்டுள்ளது.

இந்த ஆறாம் தலைமுறை ஆக்டிவாவுக்கு 6 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதில் 3 ஆண்டுகால உத்தரவாதம் ஸ்டாண்டர்டாகவும், அடுத்த 3 ஆண்டு உத்தரவாதம் விருப்பத்தின் பேரிலும் நீட்டிக்கப்படும்.

வடிவமைப்பிலும் சற்று மேம்படுத்தப்பட்டிருக்கிறது. திடமான அதேசமயம் இலகுவான பயணத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஈக்வலைருடன் கூடிய கோம்பி பிரேக் சிஸ்டம் மற்றும் புதிய மூன்று அடுக்கு அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் ஆகியவை ஒவ்வொரு சவாரியையும் சொகுசாக ஆக்குகிறது.

முன்பக்க சக்கரம் 12 அங்குலத்துடன் உள்ளது. இதன் வீல்பேஸும் மேம்படுத்தப்பட்டு 22மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும், நிறுத்தவும் ஸ்விட்ச் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இடவசதியும் சற்றும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் டீலக்ஸ் மாடலில் உள்ள புதிய டிசி எல்இடி முகப்பு விளக்கு கடினமான சாலைகள், குறைவான வெளிச்சம் கொண்ட பகுதிகளில் வசதியான பாதுகாப்பான ஓட்டும் அனுபவத்தைத் தருவதாக இருக்கிறது.

இதன் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆஃப்செட் சிலிண்டர், லைட் வெயிட் கிராங்க் ஷாஃப்ட் மற்றும் பிஸ்டன் உள்ளிட்டவை இன்ஜினின் உராய்வை வெகுவாகக் குறைக்கிறது.

இந்தப் புதிய பிஎஸ்6 ஆக்டிவா ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கிளிட்டர் ப்ளூ, மெட்டாலிக் நியூ, பெர்ல் ஸ்பார்டன் ரெட், டாஸ்ல் மஞ்சள் மெட்டாலிக், பிளாக், ப்ரீஷியஸ் ஒயிட், ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய ஆறு வண்ணங்களிலும் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் மாடலின் அறிமுக விலை ரூ.63,912 எனவும், டீலக்ஸ் மாடல் ரூ.65,412 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x