Published : 13 Jan 2020 02:50 PM
Last Updated : 13 Jan 2020 02:50 PM

வெற்றியில் நேரத்தின் பங்கு என்ன?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

‘டைமே கிடைக்கமாட்டேங்குது’ என்று புலம்புபவரா நீங்கள்? ‘இருபத்தி நான்கு மணி நேரம் பத்தல’ என்று புகார் கூறுபவரா? ‘ஓயாம ஓடியும் முடிக்க முடியல’ என்று அலுத்துக் கொள்பவரா?. ஓகே அப்போ ‘டைம்’ இருந்தால் வாங்களேன். ‘நேரம்’ பற்றி கொஞ்ச நேரம் பேசுவோம்! பொதுவாகவே மற்றவர்களை விட தொழிலதிபர்கள்தான் நேரமில்லை என்று அதிகம் புலம்புகிறார்கள். ஏதோ மற்றவர்களுக்கெல்லாம் இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு மேல் இருப்பது போலவும் இவர்களுக்கு மட்டும்தான் ஆண்டவன் ஓரவஞ்சனையுடன் குறைத்து தந்திருப்பது போலவும் நினைக்கிறார்கள்.

சொல்லப்போனால் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் தாராளமாய் உண்டு. நாம்தான் நேரத்தை சரியாய் பயன்படுத்துவதில்லை. நேரம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது புரியாமல் நேரத்துக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். செய்ய வேண்டியதை செய்ய நேரமில்லை என்று நினைத்தால், நாம் நேரத்தை சரியாக பயன்படுத்துவதில்லை என்று பொருள்.

நேரம் நம்மை வைத்து ‘செய்கிறது’ என்று அர்த்தம்! ‘உனக்கென்ன, நீ சொல்வது ஈசி, நேரம் இல்லாமல் நான் படும் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்’ என்று உங்களுக்கு தோன்றலாம். உங்களிடம் ஒரு கேள்வி. உங்களை விட என்னை விட பிஸியாய் இருப்பவர்கள் எப்படி இதே இருபத்தி நாலு மணி நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைப் புரிகிறார்கள்? பல்வேறு விஷயங்களில் பிரமாதமாக எப்படி அவர்களால் பிராகாசிக்க முடிகிறது? ஆக, பிரச்சினை நேரத்தில் இல்லை, நம்மிடம்தான் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.நம் நேரத்தை இன்னமும்கூட பயனுள்ளதாக மாற்ற முடியும் என்று நம்புங்கள், அந்த நம்பிக்கையை உரம் போட்டு வளருங்கள்.

‘பிஸி’ என்பதே நம் மனதில்தான் இருக்கிறது. எந்த விஷயம் முக்கியம், எது முக்கியமில்லை என்பதில் நமக்கிருக்கும் தெளிவின்மைதான் இதற்கு அடிப்படை காரணம். மீட்டிங்கில் நாம் இருக்க வேண்டுமா என்று யோசிக்காமல், தேவையில்லாத மீட்டிங்கில் சென்று அமர்கிறோம். ‘மற்றவர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் நாமும் செய்வோம்’ என்று தேவையில்லாத விஷயங்களை செய்கிறோம்.

ஒன்றும் வேண்டாம், தினம் எத்தனை நேரம் டீவி பார்க்கிறீர்கள் என்று என்றாவது, கணக்கிட்டீர்களா? டீவியில் என்ன பார்க்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்ற நிலை வந்தால் நம் டீவி பார்க்கும் நேரம் வெகுவாக குறைந்துவிடும். இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்! உங்கள் நேரத்தை உங்கள் ஆதிக்கத்துக்கு அடிபணியச் செய்யும் ஆசையிருந்தால் உங்களுக்கு உதவ சில ‘க்விக்’ உத்திகள்!

மொழியை மாற்றுங்கள்

‘இருபத்தி நான்கு மணி நேரத்தில் இன்னமும் கூட நேரத்தை புகுத்த முதல் காரியமாக உங்கள் மொழியை மாற்றுங்கள்’ என்கிறார் ‘லாரா வேண்டர்காம்’. ‘எனக்கு நேரம் இல்லை’ என்று சொல்வதற்கு பதில் ‘இது இப்பொழுது முக்கியமில்லை’ என்று கூறிப் பாருங்கள். அப்படி சொல்லும்போது எப்படி உணர்
கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

பணிப் பளுவில் உங்கள் உடம்பை செக்அப் செய்ய நேரமில்லை என்று நினைத்தால், ‘க்ளினிக் போக நேரமில்லை’ என்று கூறுவதற்கு பதில் ‘என் ஆரோக்கியம் இப்பொழுது முக்கியமில்லை’ என்று கூறிப் பாருங்கள். கேட்பதற்கே கண்றாவியாய் இருக்கிறதா? அப்படி சொல்லும்போது உங்கள் தவறை நீங்களே உணர்ந்து, எப்படியாவது நேரத்தை உண்டு பண்ணி டாக்டரிடம் செக்அப் செய்து கொள்ள தோன்றும். நாம் பேசும் பேச்சை, மொழியை மாற்றிப் பேசும்போதுதான் நேரம் நமக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பு என்பதை உணர்வீர்கள்’ என்கிறார் லாரா. இவர் எழுதிய புத்தகம் ‘You Have More Time Than You Think’. நீங்கள் நினைப்பதை விட உங்களிடம் அதிக நேரமுண்டு!

ஆதிக்கத்துக்குட்பட்ட நேரத்தை மாற்றுங்கள்

வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் சிலவற்றை செய்தே ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நேரத்தை செலவழித்தே தீரவேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையை பள்ளிக்கு கொண்டு செல்லும் நேரம், ஆபீஸில் வாராந்திர மீட்டிங் போன்றவை மாற்ற முடியாதவை. அந்த குறிப்பிட்ட நேரங்கள் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டதல்ல. ஆனால் உங்களால் மாற்ற முடிகிற விஷயங்களையும் அதற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும் மாற்ற முயற்சியுங்களேன்..

காலை வாக்கிங் சென்று திரும்பி அதன்பின் உங்கள் மகளை பள்ளியில் ட்ராப் செய்ய நேரமிருப்பதில்லை. விடுங்கள், அது உங்கள் ஆதிக்கத்துக்கு உட்படாத வேலை, நேரம். காலை ஒரு மணி நேரம் முன்னதாக எழுங்களேன். அந்தப் பாழாய் போன டீவியை நள்ளிரவு வரை கட்டிக்கொண்டு குலாவுதை நிறுத்தித் தொலையுங்களேன். எனக்கிருக்கும் ஒரே சுகத்தை ஏன் பிடுங்குகிறாய்? என்பவர்கள், இரவில் வாக்கிங் செல்லுங்களேன். காலையில் நடந்தால்தான் உடம்பு இளைப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறதா என்ன!

மனநிலையை மாற்றுங்கள்

நேரம் பற்றி நீங்கள் நினைக்கும் விஷயத்தை அதை நீங்கள் அணுகும் முறையை மாற்றிப் பாருங்கள், தினம் உங்களுக்கு கொஞ்சம் நேரம் கூடுதலாய் கிடைப்பதை பார்ப்பீர்கள் என்கிறார் லாரா. அப்படி செய்வது நம் நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும் என்கிறார். இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை என்று நமக்குத் தோன்றுவது எதனால்? நம் வாழ்க்கையை தினப்படி திட்டமிடுவதால்.

இருபத்தி நான்கு என்பது குறைவான அளவாகத் தெரிகிறது. இனி ஒரு வாரத்துக்கு திட்டமிட்டுப் பாருங்களேன். காலை எழுந்து அன்று என்ன செய்வது என்று திட்டமிடுவதை விடுத்து அந்த வாரம் என்ன செய்வது என்று திட்டமிடுங்கள். இப்பொழுது உங்களுக்கு நூற்றியறு பத்தெட்டு மணி நேரம் கிடைப்பதையும் அதற்குள் உங்கள் வேலைகளை திட்டமிட்டு முடிக்கும் சவுகரியத்தையும் உணர்வீர்கள். இருபத்து நான்குக்குள் செய்யச் சிரமப்படுவதைவிட நூற்றி அறுபத்தி எட்டுக்குள் எங்கு புகுத்தலாம் என்று சிந்திக்கும் போது நேரம் கிடைக்காமலா போகும்!

‘சே, திட்டமிட்ட விஷயங்கள் எதையுமே செய்ய முடியவில்லை, எல்லாவற்றையும் ஒதுக்கி புதிதாய் திட்டமிடப் போகிறேன்’ என்று தொடங்குவதற்கு பதில் திட்டமிட்ட விஷயங்களை சிறிய அளவில் ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்க முடியுமா என்று பாருங்கள். நேரமும் வசப்படும்; வேலையும் லேசுபடும். உதாரணத்துக்கு, தினம் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்று புலம்புவதற்கு பதில், வாரத்துக்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்து பாருங்கள். அப்படி சில வாரங்கள் செய்துவிட்டு பின் வாரத்துக்கு இரண்டு முறையாக கூட்டும் வழியை தேடுங்கள்.

ருசி கண்ட பூனை மனம் அதற்கு நேரத்தை எப்படியாவது கண்டெடுக்கும். அதே போல் ஆபீஸில் மீட்டிங்குகளை குறைக்க முடியாதுதான். ஆனால் ஒவ்வொரு மீட்டிங்கையும் திட்டமிட்டதற்கு பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னதாக முடிக்க முடியுமா என்று பாருங்கள். அப்படி சின்னதாய் தொடங்கும் போது வாரத்துக்கு நான்கு மீட்டிங் இருந்து ஒவ்வொன்றையும் சீக்கிரம் முடிக்கும்போது வாரத்தில் ஒரு மணி நேரம் உங்களுக்கு கிடைக்கும்!

மாற்றங்களை தேடிக்கொண்டே இருங்கள்

ஆபீஸ் மீட்டிங்கில் உட்கார்ந்துதான் பேசவேண்டும் என்றில்லையே. முடிந்தால் நின்றுகொண்டு பேசுங்கள். உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு பேசும் போதுதான் மீட்டிங் டைம் வளர்கிறது. தேவையற்ற விஷயங்கள், வெட்டி பேச்சு, ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவை மீட்டிங் நேரத்தை இழுத்தடித்து உங்கள் நேரத்தை விரயமாக்குகின்றன. சில மீட்டிங்குகளை நின்றுகொண்டு நடத்திப் பாருங்கள். சுருக்கென்று பேசி, படக்கென்று முடித்து, வெடுக்கென்று வெளியேற முடிவதைப் பார்ப்பீர்கள்.

அரை வேலைகளை ஒழியுங்கள்

நான் சொல்வது அரை வேலைகளை, அரைவேக்காட்டுத் தனமாய் செய்யும் வேலைகளை அல்ல. அதையும் ஒழிக்க முடிந்தால் நல்லதே. உங்களை நீங்களே தள்ளி நின்று கவனித்துப் பாருங்கள். பல வேலைகளை ஒரே சமயத்தில் இழுத்துப் போட்டு செய்து சிரமப்படுவதைப் பார்ப்பீர்கள். ஆபிஸ் ரிப்போர்ட் படித்துக்கொண்டிருக்கும்போது ஃபோனில் வரும் வாட்ஸ் அப் மெசேஜை பார்ப்பது, அதற்கு பதில் லாவனி பாடத் தொடங்கி அதில் சில மணி நேரம் செலவழிப்பது, ஃபோனில் பேசும் போது லேப்டாப்பில் மெயிலை ஓபன் செய்வது என்று பல பணிகளை நீங்கள் முழுசாய் செய்யாமல் அரைகுறையாய் செய்வதை உணர்வீர்கள்.

அரை வேலை செய்யும் போது அதை செய்ய தேவையான நேரம் தானாகவே இரட்டிப்பாகிவிடுகிறது. ஏற்கெனவே நேரம் இல்லை என்று புலம்புகிறீர்கள். இந்த லட்சணத்தில் அரை வேலை செய்தால் நேரம் இல்லை என்று சொல்லக் கூட நேரம் இருக்காது உங்களுக்கு!

ஓரே ஒரு நாள் அந்த வாட்ஸ் அப் கர்மத்தை ஆஃப் செய்து பாருங்கள். குறைந்தது இரண்டு மணி நேரமாவது மிச்சமாகும் அதிசயத்தைக் காண்பீர்கள். அந்த நல்ல காரியத்தை செய்து பார்த்துவிட்டுத் தான் சொல்கிறேன். வாட்ஸ் ஆப் தொழிலுக்கு தேவைதான். ஆனால் தேவையற்ற, பைசாவுக்கு பிரயோஜனப்படாத குரூப்புகளில் சேர்வது, யாரோ அழைத்தார் என்று எந்த குரூப்பிலாவது இணைவது என்று நம் வாழ்நாளில் பெரும்பகுதியை வாட்ஸ் அப்பில் தொலைக்கிறோம். அதை குறைத்தாலே நம் ஆயுள் கூடும்.

இன்னொன்றும் செய்யுங்கள். தினம் காலை வேலை வெட்டி இல்லாமல் கர்மசிரத்தையாய் ‘குட்மார்னிங் சொல்பவர்களை, பைசா பிரயோஜனப்படாத தத்துவ மெசேஜ் அனுப்புபவர்களை தயவு தாட்சண்யமின்றி ப்ளாக் செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகும்! சராசரியாக ஒரு அமெரிக்க பிரஜை வருடத்துக்கு இரண்டரை நாட்களைத் தான் வைத்ததை காணாமல் தேடுவதிலேயே கழிக்கிறார் என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு.

இந்தியாவில் அப்படி ஒரு ஆய்வு நடந்திருக்கிறதா, நடந்த ஆய்வு ரிப்போர்ட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இன்னமும் தேடுகிறார்களா என்பது பற்றிய தகவல் இல்லை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பொருளையும் அதது இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே வைப்பேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுங்கள். உங்களுக்கு நீங்கள் தொலைத்த பல மணி நேரங்கள் திரும்பக் கிடைக்கும்! வாழ்க்கை நேரங்களால் ஆனது.

அந்நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. நம் நேரத்தை நாம் முதலில் மதித்தால் மட்டுமே மற்றவர்கள் நம் நேரத்தை மதிப்பார்கள். அப்பொழுதுதான் நேரமே நம்மை மதிக்கும்! சரி, இத்தனை நேரம் இதை படித்துக்கொண்டிருந்தது போதும். இனியும் நேரத்தை வீணாக்காமல் போய் வேலையைப் பாருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x