

1926-ம் ஆண்டு பிறந்த எலிசபெத் குப்லர்-ரோஸ் சுவிஸ்-அமெரிக்க உளவியலாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
மரணத்தை வாழ்க்கையின் இயல்பான கட்டங்களில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் “ஆன் டெத் அண்ட் டையிங்” என்னும் புத்தகத்தின் ஆசிரியர் இவரே. பிரபலமான டைம் பத்திரிகையின், இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நூறு சிந்தனையாளர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கௌரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். 2004-ம் ஆண்டு தனது 78-வது வயதில் மறைந்தார்.
* நிபந்தனையற்ற அன்பே நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய இறுதிப் பாடம், இதில் மற்றவர்கள் மட்டுமல்ல நாமும் அடங்குவோம்.
* வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் நோக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* பாடங்களைக் கற்றுக்கொள்வது என்பது கொஞ்சம் முதிர்ச்சியை எட்டுவதைப் போன்றது.
* தோல்வி, துன்பம், போராட்டம், இழப்பு ஆகியவற்றை அறிந்து, அந்த ஆழத்திலிருந்து வெளியேறும் வழியைக் கண்டறிந்தவர்களே நமக்கு தெரிந்த மிக அழகான மனிதர்கள்.
* சேவை செய்வதற்கு, நீங்கள் சேரிகளில் இலவசமாக வேலை செய்யும் மருத்துவராக இருக்க வேண்டியதில்லை அல்லது ஒரு சமூக சேவையாளராக மாற வேண்டியதில்லை.
* தெரிந்தோ இல்லையோ, நாம் அனைவரும் பதில்களைத் தேடுகிறோம், வாழ்க்கையின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.
* நாம் யார், எப்படி உண்மையான மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்பதைக் கண்டறிய நாம் முயல்கிறோம்.
* நம்மால் கையாளமுடிந்த அளவுக்கு மட்டும் அனுமதிப்பதே இயற்கையின் வழி.
* அவர்களின் வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு என்பதை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நாம் முதல் நாளிலிருந்தே கற்பிக்க வேண்டும்.
* கோபம் என்பது இழப்பின் நியாயமற்ற தன்மைக்கான இயல்பான எதிர்வினை.