Published : 17 Aug 2015 10:28 AM
Last Updated : 17 Aug 2015 10:28 AM

வாகன நெரிசலால் இழப்பு ரூ.60 ஆயிரம் கோடி

காலையில் அலுவலகம் செல்லும்போதும் சரி, அவசர வேலையாக விமான நிலையம் செல்ல வேண்டும் என்றாலும் சரி, இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பிவிட வேண்டும். ஏனென்றால் வாகன நெரிசலில் சிக்கி அலுவலகத்துக்குச் செல்வது என்பது அன்றாட சாகச பயணமாகவே மாறிவிட்டது.

காலையில்தான் என்றில்லை, மாலை நேரத்தில் வீடு திரும்பும்போதும் இதே பிரச்சினைதான். ஒரு மணி நேர வாகனப் பயணம் என்றால் அது நெரிசலைப் பொறுத்து இரண்டு மணி நேரம் கூட ஆகலாம்.

அரசு போக்குவரத்தான பஸ்களில் செல்வோருக்குத்தான் இந்தப் பிரச்சினை என்றில்லை. சொந்தக் காரில் செல்வோரும், வாடகைக் காரில் செல்வோரும் வாகன நெரிசலி லிருந்து தப்பிப்பது என்பது நிச்சயம் சாத்தியமாகாத ஒன்று.

வணிக வீதிக்கும் வாகன நெரி சலுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழாமலிருக்காது. வாகன நெரிசலால் ஆண்டு தோறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது புரிந்திருக்குமே, வாகன நெரிசலும் பொருளாதாரத்தோடு சம்பந்தப் பட்டதுதான் என்று.

பொதுவாக வாகன நெரிசலுக்குப் பெயர் போனது மும்பை நகரம்தான். ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லி அதையும் மிஞ்சிவிட்டது. அங்கு பெய்த கன மழை வாகன போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டது. தேசிய நெடுஞ்சாலை எண் 8-ல் 20 கி.மீ. நீளத்துக்கு வாகனங்கள் நின்றிருந்தன. இந்தப் போக்குவரத்து சரியாக 4 மணி நேரம் பிடித்தது.

வாகன நெரிசலால் எப்படி இழப்பு ஏற்படுகிறது என்பதை வெகு எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67 என வைத்துக் கொள் வோம். உங்கள் கார் லிட்டருக்கு 15 கி.மீ. தூரம் ஓடும் என்றால் நீங்கள் தினசரி 20 கி.மீ. பயணிப்பதாக இருந்தால் பெட்ரோலுக்கு செலவிடும் தொகை ரூ. 89 ஆக இருக்கும். வாகன நெரிசலின்போது கார் கூடுதலாக 20 சதவீத பெட்ரோலை உறிஞ்சும். இதனால் 20 கி.மீ. தூரத்தைக் கடக்க நீங்கள் செலவிட வேண்டிய தொகை ரூ. 107 ஆக உயரும். வாரத்துக்கு 6 நாள் நீங்கள் காரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் மாதத்துக்கு ரூ.432 கூடுதலாகச் செலவிடுகிறீர்கள். ஆண்டுக்கு பெட்ரோலுக்கு நீங்கள் கூடுதலாக செலவிடும் தொகை ரூ.5 ஆயிரமாக இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட வாகன நெரிசல்தான் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 2010 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக 100 கி.மீ. நீளத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது சரியாக 10 நாள்கள் ஆனது.

வாகன நெரிசலுக்கு முக்கியக் காரணம், பெருகிவரும் வாகன உற்பத்திக்கேற்ப நமது சாலைகள் விரிவுபடுத்தவில்லை என்பதுதான். டெல்லியில் மட்டுமே 96 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் இது 25 லட்சமாக உள்ளது. ஆனால் சென்னையில் 44 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இணையதளம் குறிப்பிடுகிறது.

பெருநகரங்களில் வாழ்வோரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவருவதால் அனைவருமே தங்களுக்கென்று ஒரு காரை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு பஸ் பயனாளி ஆக்கிரமிக்கும் இடத்தைப் போல 30 மடங்கு அதிக இடத்தை ஒரு கார் உபயோகிப்பாளர் ஆக்கிரமிக்கிறார். இதுவும் வாகன நெரிசலுக்கு முக்கியக் காரணமாகும்.

வாகன நெரிசலில் டெல்லி முதலிடத் திலும் பெங்களூரு இரண்டாமிடத்திலும் உள்ளன. மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாகத்தான் சென்னை உள்ளது. ஓரளவு வாகன நெரிசல் குறைந்த நகராக அகமதாபாத் உள்ளது.

வாகன நெரிசலைக் குறைக்க, மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன் படுத்த வேண்டும். அல்லது வாகன பெருக்கத்துக்கு ஏற்ப புதிய மேம் பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

டெல்லியில் உள்ள வாகன நெரி சலைக் குறைக்க புதிய மேம்பா லங்கள் அமைக்க ரூ. 33 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் அதிகரித்துவரும் கார் உபயோகத்தைக் கருத்தில் கொண்டால் சாலை, மேம்பாலம், சுரங்கம் அமைக்க ரூ. 2.90 லட்சம் கோடி தேவைப்படுகிறதாம்.

ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி வீணாவதைத் தடுக்க நம்மால் சாத்தியமான நடவடிக்கையை எடுக்கலாமே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x