

கடந்த இருபது ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை, அரிசி விளைச்சல் பெருமளவு சரிந்துவிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது. இந்த இரண்டு செய்திகளும் விவசாயம் சார்ந்தது, மண்வளம், வனவளம் சார்ந்தது என்று நினைக்கலாம். ஆனால், இவை இரண்டுக்கும் நேரடியான பாதிப்பு ஒன்றுதான். அது புவி வெப்பமடைவதால் ஏற்பட்ட நிகழ்வு.
இந்தியாவில் மிகச் சிறந்த மண்வளம் மிக்க மாநிலங்களுள் முதன்மையானது பஞ்சாப். பசுமை புரட்சியின் பெருமளவு வெற்றியை முதலில் தொட்டது இந்த மாநிலம்தான். கோதுமை மட்டுமின்றி நெல்லும் பயிரிடப்பட்டு அதை அரசு ஊக்குவித்ததும் இந்த மாநிலத்தில்தான். நாட்டின் உணவு தேவையில் 12 சதவீத தேவையை பூர்த்தி செய்யும் மாநிலம் என்ற பெருமையும் பஞ்சாபுக்கு உண்டு.
மத்திய தொகுப்புக்கு கோதுமை அளவில் 45 சதவீதமும், நெல் தேவையில் 30 சதவீதமும் இம்மாநிலத்தால்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இம்மாநிலத்தில் நெல் சாகுபடி பரப்பளவு மட்டும் 28.94 லட்சம் ஹெக்டேராகும். ஒரு ஹெக்டேருக்கு 3,838 கிலோ நெல் விளைச்சல் கிடைத்து வந்தது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இங்குப் பருவ நிலையில் மிகப் பெரும் மாற்றம் நிகழ்ந்து விளைச்சலும் படிப்படியாகக் குறைந்துவந்துள்ளது. கோடைக்காலத்தில் வெப்பத்தின் அளவு மிகுந்த உச்சத்தை எட்டுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் தொடங்கும் பருவமழை காலம் ஜூன் முடிந்தும் தொடங்கவே இல்லை.
ஒரு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் அதிகரித்தால் கோதுமை, சோயா பீன், கடுகு, கடலை, உருளை ஆகியவற்றின் உற்பத்தி 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை குறைகிறது. 2099-ம் ஆண்டில் வெப்ப நிலை 2.5 டிகிரி சென்டி கிரேடு முதல் 4.9 டிகிரி சென்டிகிரேடு வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்ந்தால் விளைச்சல் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரியும். அதேபோல ஒரு டிகிரி வெப்பம் அதிகரித்தால் தண்ணீர் தேவை 10 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் மிகுந்த கவலையை அளிக்கும் காரணிகளாகும்.
வட கிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா, மிஜோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள வன வளமானது பெருமளவு குறைந்துவருகிறது. இப்பகுதிகளிலுள்ள வனப் பகுதியில் பழங்குடி மக்கள் வசிப்பதால் அங்கு வன வள பெருக்கத்தில் மாநில அரசுகள் ஈடுபடமுடியவில்லை.
2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வன உரிமை பாதுகாப்பு சட்டத்தை இங்குள்ள மாநில அரசுகளால் செயல்படுத்த முடியாத சூழல் நிலவுவதும் வனவளம் குறைவுக்கு முக்கியக் காரணமாகும். இயற்கை சீற்றங்களுக்கும், பேரழிவுகளுக்கும் பெரும்பாலும் மனித தவறுகளே காரணம் என்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தபோதிலும் அதை நமது சமூகம் அடிக்கடி மறந்துவிடுகிறது அல்லது வரும்போது பார்த்துக் கொள்ளலாம், எதிர்கொள்ளலாம் என்ற அலட்சிய போக்கு அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கு எதிராகத் தோன்றியுள்ள ஒரே பிரச்சினை புவி வெப்பமடைவதுதான். ஆனால் அதுகுறித்து ஆண்டுதோறும் சர்வதேச அளவில் கூட்டங்கள் நடத்தி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் தள்ளிப்போடும் போக்குதான் இங்கு காணப்படுகிறது.
ஓசோனில் ஓட்டை, கடல் மட்டம் உயரும் என்றெல்லாம் அறிவியலாளர்கள் ஆதாரப்பூர்வமாக எச்சரித்தாலும் அதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. எதிர்கால சந்ததி குறித்த சமூக பிரக்ஞை குறைந்து சுயநலமாய் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து மாற்றங்களை செயல்படுத்தினால் மட்டுமே இந்தப் பூமி பிழைக்கும்.