

உலகில் ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய, சமாளிக்க வேண்டியது எது என எண்ணிப்பார்த்தால் அது ‘தோல்வி’ எனத் தோன்றுகிறது. போரில், தேர்தலில் மட்டுமல்ல படிப்பில், விளையாட்டில், வேலையில், வியாபாரத்தில். முதலீட்டில் ஏன் குடும்ப வாழ்வில் கூட பெரிய, சிறிய தோல்விகளைக் கண்டு துவண்டு ஒதுங்கி விட்டால், வெற்றிக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்!
அதை விடுங்கள்! மேற்கூறிய உதாரணங்களில் வெற்றி பெற்று விட்டால் மட்டும் எல்லாம் சுபம் என முடிந்து விடுமா என்ன? வெற்றி பெறுவது கடினமென்றால் அதைத் தக்க வைத்துக்கொள்வது அதனிலும் கடினமாயிற்றே. சாதாரணமாக வெற்றி பெற்றவர் அந்த நினைப்பில் மிதந்து விடுகிறார். தோல்வி ஓர் அனாதை! அதற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்! ஆனால் வெற்றிக்குப் பலரும் சொந்தம் கொண்டாடுவார்கள்.
தோல்வியுற்றவர் விதி என்றும் எதிரணி சரியில்லை என்றும் குறை சொல்வார். வென்றவரோ தன்னிடம் உள்ள திறமையே காரணம் என்பார்! அவரே சும்மா இருந்தாலும், சுற்றி இருப்பவர்கள் அவரது அறிவு, அனுபவம், சாமர்த்தியம் என வெற்றிக்குப் புதுப்புதுக் காரணங்களைக் கண்டுபிடித்து போஸ்டர் ஒட்டுவார்களே! பின்னர் என்ன? அவர் தமது தகுதியைத் தானே வியந்து இன்னும் பெரிதாய் முயல்வார். முயற்சி தவறில்லை. ஆனால் தம் தகுதியறிந்து, வெல்வதற்கான வாய்ப்பறிந்து தானே இறங்க வேண்டும்? எல்லோராலும் ராஜா வேடம் போட முடியுமா?
மேலாண்மையில் பீட்டரின் கொள்கைகள் (Peter’s Principle) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த நியதிபடி ஒவ்வொருவரும் தனது அதிகபட்ச திறனில் இருந்து ஒரு படி மட்டுமே மேலே உயரமுடியும். அதற்குமேல் உயர முடியாது. ஒருவேளை அப்படியே உயர்ந்தாலும், அந்த பதவியிலே தங்கி, தேங்கி விடுவார்!
சென்ற தீபாவளியின் ஒரு பில்லியன் விற்பனைக் கொண்டாட்டம் ஞாபகம் இருக்கிறதா? சும்மா கைபேசி, மடிக்கணினி என்று மட்டுமில்லாமல் டிவி, பிரிட்ஜ், சோபாசெட் என்பவை கூட 25%, 55%, ஏன் 80% தள்ளுபடியில் விற்கப்படுமென்று பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டன. எனவே காலையில் விற்பனை தொடங்கிய உடன் கும்பமேளா கூட்டம் போல பல லட்சம் பேர் அவர்கள் இணையதளத்தை படை எடுத்தனர்!
விளைவு? சிஸ்டமே கிராஷ் ஆனது. பலமணி நேரத்திற்கு பலரால் அவர்கள் இணையத்துக்குள் நுழையவே முடியவில்லை! பெரும் வரவேற்பை எதிர்பார்த்திருந்த அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்க நேர்ந்தது. கணினியின் திறனுக்குமேலும் மற்ற செயல்திறன்களுக்கும் விஞ்சியும் முயன்றதால்தான் இது நடந்தது என்பது பலரது விமர்ச்சனமாக இருந்தது.
ஓர் மரத்தில் நுனிக்கொம்பு வரை ஏறியவர், தனது ஊக்கத்தினால் அதையும் கடந்து உச்சிவரை ஏற முயற்சித்தால் அது அவரது உயிருக்கே முடிவாகிவிடும் என்கிறார் வள்ளுவர்!
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் (குறள் 476)