Published : 16 Dec 2019 11:56 AM
Last Updated : 16 Dec 2019 11:56 AM

நவீனத்தின் நாயகன் 05: எங்களுக்கு அப்பா வேண்டாம்!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

மகன் புத்தகங்களுக்குள் புதைந்து கற்பனை உலகில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்த அம்மா பயந்தார். தம்பியும், தங்கையும் தங்கள் நண்பர்களை வீட்டுக்கு விளையாட அழைத்து வருவார்கள். ஈலானையும் சேர்த்துக்கொள்ளும்படி அம்மா கெஞ்சுவாள். இதற்காக சேர்த்துக்கொண்டார்கள்.

சூரியன் மறைந்து, இருட்டு பரவத் தொடங்கியது. ஒரு சிறுவன் பயந்தான். நம் பொடியர் அவனுக்கு எப்படி ஆறுதல் சொன்னார் தெரியுமா, ”பயப்படாதே. இருட்டு என்பது வேறு ஒன்றுமில்லை. வெளிச்சம் இல்லாமல் இருப்பது தான்.” பத்து வயதுச் சிறுவன் தரும் பதிலா இது? சுற்றியிருந்த பொடியர் கூட்டம் மிரண்டார்கள். மாற்றுக் கிரகத்திலிருந்து வந்த அந்நியனைப்போல் ஈலானைப் பார்த்தார்கள். வயதுக்கு மீறின முதிர்ச்சி, பிஞ்சில் பழுத்த பழம்! அவனைத் தவிர்த்தார்கள்.

ஒருநாள். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கை டோஸ்க்காவுக்கு ஒரு கேள்வி, “பூமியிலிருந்து சந்திரன் எத்தனை தூரம்?” அவள் வாய் மூடும் முன், வந்தது ஈலானின் பதில் ‘‘சராசரி தூரம் 2,38,855 மைல்கள். இது சராசரி, ஏனென்றால், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் கோளப்பாதை வட்ட வடிவமல்ல, முட்டை வடிவமானது.

ஆகவே, இந்த தூரமும் மாறுபடும்.” அண்ணனின் அறிவில் நம்பிக்கை இருந்தாலும், தங்கை கலைக் களஞ்சியத்தில் தேடினாள். நூறு சதவிகிதம் கரெக்ட்! இதற்குப் பிறகு, டோஸ்க்கா யார் எந்தத் துறை தொடர்பான கேள்வி கேட்டாலும் சொல்லுவாள், “அந்த ஜீனியஸ் பையனைக் கேளுங்கள். எதைக் கேட்டாலும், கரெக்டான பதிலை உடனே தருவான்” என்று ஈலானுக்கு ஒன்பது வயது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் அமைவதும் இப்படித்தான். மே-க்கு ஆண்டவனின் இந்த ஆசீர்வாதம் கிடைக்கவில்லை.

காதல் கல்யாணம் கசந்தது. விவாகரத்து. அப்பாவோடு குடும்பம் வசதியான வாழ்க்கை. இப்போது தலைவிதி தலைகீழாக மாறியது. அம்மாவுக்கு ஜீவனாம்சப் பணம் எதுவும் கிடைக்கவில்லை. குழந்தைகளோடு டர்பன் (Durban) என்னும் நகரத்துக்கு இடம் மாறினார். சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். ஊட்டச்சத்து ஆலோசகர், டோரன்ட்டோ பல்கலைக் கழகத்தில் (Toronto University) ஆராய்ச்சி உதவியாளர், ஊட்டச்சத்து மாணவ, மாணவியருக்கு இரவுநேர வகுப்பு, மாடலிங் பள்ளியில் பகுதிநேர ஆசிரியை, மாடலிங் பற்றிப் பேசுதல் எனப் பல்வேறு வழிகளில் செலவுகளைச் சமாளித்தார்.

இரண்டு வருடங்கள். ஏனோ, ஈலான் அம்மாவை விட்டுப் போய் அப்பாவோடு தங்க முடிவெடுத்தான். சில மாதங்களில் தம்பி கிம்பலும் பின் தொடர்ந்தான். “நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். இருவரும் ஏன் எங்களை விட்டுப் போனார்கள் என்று தெரியவில்லை” என்கிறார் மே. ஈலான் சொல்லும் காரணம், “அப்பா தனியாக இருந்தார்.
அதனால்தான்.” சிலர் தரும் காரணம், “ஈலானின் அப்பா வழிப் பாட்டி சிறுவனை வற்புறுத்தினார்.” எது உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், சீக்கிரமே, தாங்கள் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று அண்ணனுக்கும், தம்பிக்கும் தெரிந்தது. அம்மா குடும்பத்துக்கும், அப்பா குடும்பத்துக்கும் அத்தனை வித்தியாசம். அம்மா வழித் தாத்தா ஈலானுக்கு ஹீரோ. இந்தத் தாத்தாவோ, முசுடு மனிதர். பேரன்களிடம் பேசவே மாட்டார். எந்நேரமும் குடி. பாட்டி பரவாயில்லை.

அப்பா மிகத் திறமையான இஞ்சினீயர். தான் இஞ்சினீயராக வேலை செய்த கட்டிடங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மகன்களைக் கூட்டிக்கொண்டு போவார். சிக்கலான டெக்னிக்கல் சமாச்சாரங்களையும் தெளிவாக விளக்கிப் புரியவைப்பார். கஞ்சத்தனமே இல்லாமல், ஈலான் ஆசைப்படும் புத்தகங்களை வாங்கித் தருவார்.

அவனின் 10 வயதில் ஒரு நாள், எலெக்ட்ரானிக் கடைக்குப் போனபோது ஈலான், கமடோர் VIC – 20 (Commodore VIC – 20) என்னும் கம்ப்யூட்டரைப் பார்த்தான். அப்பாவிடம் கேட்டான். விலை உயர்ந்த அந்தக் கணினியை உடனேயே வாங்கிக் கொடுத்தார். BASIC, COBOL, Pascal ஆகிய கம்ப்யூட்டர் புரோகிராமிங் முறைகளை தானாகவே கற்றுக்கொண்டான். புத்தகங்களோடு, கம்ப்யூட்டரும் அவன் நேரத்தை ஆட்கொண்டது.

ஈலானுக்கு இயற்கையாகவே பிசினஸ் புத்தி. மகன்களின் ஒவ்வொரு சின்னச் செயல்பாட்டிலும் தலையிட்ட அப்பா, அவர்கள் தொழில் முனைப்புக்கு ஆதரவு தராவிட்டாலும், ஏனோ, தடை போடவில்லை. வந்தது ஈலானின் முதல் வெளிப்பாடு.

கிறித்தவச் சகோதரர்களின் ஈஸ்டர் பண்டிகை. சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட ஏசு பெருமான், மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த தினம். வண்ணம் தீட்டப்பட்ட முட்டைகளைப் பரிசாகப் பரிமாறிக்கொள்வார்கள். முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வெளிவருவதால், ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

ஏசு பெருமானின் உயிர்த்தெழுதலுக்கும் இது குறியீடு. ஈஸ்டர் முட்டையில் காசு பண்ணும் ஒரு வழியை ஈலான் பார்த்தான். அவன், கிம்பல், அவன் நண்பர்கள் முட்டைகளுக்கு வண்ணம் தீட்டினார்கள். செலவு 50 சென்ட் (Cent). 10 டாலர்கள் (1,000 சென்ட்கள்) விலை வைக்குமாறு ஈலான் சொன்னான். தயக்கத்தோடு மற்றவர்கள் சம்மதித்தார்கள். வீடு வீடாகப் போய் விற்றார்கள். சிறுவர்களின் முயற்சியைப் பாராட்டுவதற்காக அக்கம்பக்கத்தார் பேரம் பேசாமல் வாங்கினார்கள். ஈலானின் விற்பனை யுக்தி சக்ஸஸ்.

அடுத்த முயற்சி- வீடியோ கேம். அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், Dungeons and Dragons என்னும் விளையாட்டு உண்டு. Dungeon என்றால் சிறை; Dragon என்றால், புராணக் கதைகளில் வரும் கொடிய உருவம். விலங்கு, பறவை, முதலை ஆகிய மூன்றும் கலந்த தோற்றத்தோடு, நெருப்பைக் கக்கி வரும். இந்த விளையாட்டில் போட்டிகள் நடக்கும். அணியாக ஆடவேண்டும்.

அணித்தலைவர் தான் கதைசொல்லி. Dragon – ஐத் தோற்கடிக்கும் கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி, வியூகங்கள் வகுக்கவேண்டும். ஈலானுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஒரே ஒரு நிபந்தனை, அவன்தான் தலைவன். ஜெயித்த போட்டிகள் ஏராளம்.

14 வயது. Dungeons and Dragons போன்ற விளையாட்டுகளில் இருந்த திறமை, வீடியோ கேம்களில் இருந்த ஆர்வம், காமிக்ஸ் புத்தகங்களின் தாக்கம், டோல்கீன், ராபர்ட் ஹைன்லைன், ஐஸக் அஸிமோவ், டக்ளஸ் ஆடம்ஸ் ஆகியோர் வளர்த்துவிட்ட விண்வெளிக் கனவு, கம்ப்யூட்டர் அறிவு, சொந்தக் கற்பனை அத்தனையையும் ஈலான் கலந்தான். Blaster என்னும் வீடியோ கேமை உருவாக்கினான். ‘‘வேறொரு கிரகத்தைச் சேர்ந்த விண்கலம்.

அணுகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவற்றோடு உலகை அழிக்கவருகிறது. அதை முறியடிக்கவேண்டும்” என்பதுதான் ஆட்டம். எப்படி விளையாடவேண்டும் என்னும் வழிமுறைகளை PC and Office Technology என்னும் பத்திரிகைக்கு அனுப்பினான். வெளியிட்டார்கள். ‘‘ஸ்பெக்ட்ரா வீடியோ” (Spectravideo) என்னும் கம்பெனி இதைப் படித்தார்கள். தேடி வந்தார்கள். 500 டாலர்கள் விலை கொடுத்து உரிமையை வாங்கிக்கொண்டார்கள். அந்த நாட்களில், 14 வயதில் மிகப் பெரிய தொகை. வெளியீடும், காசும் சிறுவனின் தொழில்நுட்ப அறிவுக்கும், தொழில் முனைப்புக்கும் கிடைத்த முதல் கிரீடம்.

ஈஸ்டர் முட்டை விற்பனை, கையில் 500 டாலர் ஆகியவை உத்வேகம் தந்தன. அகலக் கால் வைக்கும் தைரியம். வீடியோ கடை தொடங்கும் திட்டம். அப்பாவுக்குத் தெரிந்தால் சம்மதிக்கமாட்டார். ஆகவே, ரகசியம், பரம ரகசியம். வாடகைக்கு இடம், ஒரு பெரிய கடையிலிருந்து வீடியோக்கள் வாங்கும் ஏற்பாடு அத்தனையும் ரெடி. ஒரு சிக்கல். அரசு அனுமதி வாங்கவேண்டும்.

அதற்கான படிவத்தில் பதினெட்டு வயது நிரம்பியவர் கையெழுத்துப் போடவேண்டும். ஈலான் தான் மூத்தவன். அவன் வயது 16 மட்டுமே. மற்றக் கூட்டாளிகள் 13 முதல் 15 வரை. கையெழுத்துப் போட ஆளில்லை. ஈலானும், கிம்பலும் அப்பாவிடம் கையெழுத்துப் போடக் கெஞ்சினார்கள். அவர் மறுத்துவிட்டார். மற்றப் பெற்றோர்களும் ஜகா வாங்கினார்கள். வீடியோ கடை திட்டம் புஸ்.

நம்மில் பலரும் மனிதன் பாதி, மிருகம் பாதி. எரல் மஸ்க் மனிதன் கொஞ்சம், மிருகம் மீதி. மகன்களை நாள் முழுக்கக் கேள்விகளால் துளைப்பார். மணிக்கணக்காக உட்காரவைத்து அறிவுரைகள் தருவார். அவர்கள் வாயைத் திறக்கவே கூடாது. ஏதாவது முணுமுணுத்தாலும், தண்டனை. இதைபோல், பல்வேறு மனோரீதியான காயப்படுத்துதல்கள்.

புழுவைக் குத்திக் குத்திச் சிலர் ஆனந்தம் காண்பதுபோல், சாடிஸச் (Sadism) செயல்கள். இவற்றின் விவரங்கள் தரக் குடும்பத்தார் எல்லோருமே மவுனம். அந்தரங்கம் புனிதமானது. ஆகவே, ஊடகங்களும் துருவிக் கேட்பதில்லை. மே, ஈலான், கிம்பல், டோஸ்க்கா நால்வரும் எரலுடன் இருந்த தொடர்பை அறுத்துவிட்டார்கள். மே சொன்னார், ‘‘எரல் கொடுமைகளைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.”

ஈலானின் கருத்துகளும் இப்படித்தான். பிற்காலத்தில் சொன்னார், ‘‘அப்பாவுடன் செலவிட்ட என் குழந்தைப் பருவம் மிகச் சோகமானது. சுற்றியிருப்பவர்கள் வாழ்க்கையை நரகமாக்குவதில் அவருக்குத் தனித்திறமை, விருப்பம். எந்த மகிழ்ச்சியான சூழ்நிலையையும் துன்பமயமானதாக்கிவிடுவார்.

அவர் செய்யாத குற்றங்களும், தீய செயல்களும் இருக்கவே முடியாது. அவரைப்போல் ஒரு மனிதர் எப்படி இருக்கமுடியும் என்பதே எனக்குப் புரியவில்லை.”மனைவி, மகன்கள், மகள் ஆகிய யார் வீடுகளுக்குள்ளும் எரல் இதுவரை நுழைந்ததில்லை, தன் பேரக் குழந்தைகள் யாரையும் பார்த்ததேயில்லை. அனுமதி கிடைத்தால் தானே போகமுடியும்?

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x