Published : 16 Dec 2019 11:39 AM
Last Updated : 16 Dec 2019 11:39 AM

கடன் அட்டை இருந்தால் காப்பீடு உண்டா?

விவேக் ஆனந்த்
vivek.ananth@thehindu.co.in

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனி நபர் காப்பீடு விஷயத்தில் மிகக்குறைவான அளவில்தான் இந்தியர்கள் ஈடுபாடு காட்டுகின்றனர். ஆயுள் காப்பீடாக இருந்தாலும் சரி, மருத்துவக் காப்பீடாக இருந்தாலும் சரி, இங்கு காப்பீடு வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான்.

இன்றைக்கும் பலர் காப்பீட்டுத் திட்டங்களை ஒரு சேமிப்பாகத்தான் கருதும் போக்கு நிலவுகிறது. அதை தனியான காப்பீடு திட்டமாக யாரும் பார்ப்பதில்லை என்பதே யதார்த்தமான உண்மை. இப்போது காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்துமே பல்வேறு நிதித் திட்டங்கள் உள்ளடக்கிய காப்பீடுகளை வழங்குகின்றன.

குறிப்பாக வங்கிகளில் சேமிப்புக்கணக்கு வைத்திருந்தாலும் காப்பீடு தருவது, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு வசதி என பலவாறாக காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளுடன் இலவசமாக காப்பீட்டுத் திட்டங்களையும் அளிக்கின்றன.

இத்தகைய இலவச காப்பீட்டுத் திட்டங்கள் முற்றிலும் இலவசம். உங்களுக்கு சேவை அளிக்கும் நிறுவனங்கள் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனது வாடிக்கையாளர்களை சேர்த்து அவர்களுக்காக காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை நிறுவனங்களே செலுத்துகின்றன. பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் பயன்படுத்தும் சேவையுடன் இலவச காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதே தெரியாமல் உள்ளது.

விவரம் தெரிந்தவர்கள் அதை பயன்படுத்துகின்றனர், பலர் தெரியாததால் அதைப் பயன்
படுத்தாமலேயே விட்டுவிடுகின்றனர். ஆனால், இத்தகைய காப்பீடு திட்டங்கள் உங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களோடு கூடுதலான ஒன்று மட்டுமே. நீங்கள் எடுக்கும் காப்பீடு போன்றதல்ல. அதேசமயம் காப்பீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை எந்த வகையிலும் பாதிக்காது. திட்டத்தில் நுழைந்த உடனேயே உங்களுக்கும் காப்பீட்டுக்கான பலன் கிடைக்கும்.

காப்பீடுகளின் வகைகள்

இரண்டு வகையான காப்பீட்டுத் திட்டங்கள் பொருட்களுடன் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் சுற்றுலா காப்பீடு. கடன் அட்டை வழங்கும் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்களது கடன் அட்டையைத் தேர்வு செய்யபவர்களுக்கு தனிநபர் விபத்து காப்பீடு வசதியை அளிக்கின்றன. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கடன் அட்டை மதிப்பின் அடிப்படையில் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.3 கோடி வரை காப்பீடு செய்யப்படுகிறது.

அதேபோல தனிநபர் விபத்து காப்பீடு திட்டங்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. விபத்து காப்பீட்டின் பலன் தொடர வேண்டுமானால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த அட்டைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அதாவது 90 நாள்களுக்கு ஒரு முறை இத்தகைய அட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் தனிநபர் விபத்து காப்பீடு வசதி தொடர்ந்திருக்கும் என்று எஸ்பிஐ டெபிட் கார்டு உபயோகிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டுகளுக்கான தனிநபர் விபத்து காப்பீடு திட்டமானது ரூ. 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. (விமான விபத்து தவிர்த்து) விமான விபத்தில் உயிரிழப்பவர்களின் வாரிசுகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியானது தனது வாடிக்கையாளர்கள் கடன் அட்டை மூலம் பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் காப்பீடு அளிக்கிறது. அத்துடன் திருடு போனாலும் காப்பீடு அளிக்கிறது. இந்த வசதி டயமண்ட், சபையர், ரூபி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விமான விபத்து காப்பீடு மற்றும் விபத்தில் காயமடைந்தால் அதற்கு மருத்துவ காப்பீடு, பயணம் மேற்கொள்ளும்போது காயமடைந்தால் அதற்கும் மருத்துவ காப்பீடு ஆகியவை தவிர பயணத்தின்போது உடைமைகள் திருடு போனாலோ, பயண ஆவணங்கள் தொலைந்தாலோ, விமான தாமதம் உள்ளிட்டவற்றுக்கும் இழப்பீடு தருகிறது.

அதேபோல கடன் அட்டையில் வாடிக்கையாளர் தவிர மற்றவர்கள் முறைகேடாக பயன்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கும் காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த காப்பீடு வசதியை ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனம் அளிக்கிறது. காப்பீடு தொகை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 கோடி வரையாகும்.

மொபைல் போன் திட்டங்கள்

மொபைல் சேவை அளிக்கும் சில நிறுவனங்கள் தங்களது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு வசதியையும் அளிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பார்தி ஏஎக்ஸ்ஏ லைப் நிறுவனத்தின் மூலம் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு வசதியை வழங்கியது. ரூ.599 தொகைக்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்பட்டது. நிறுவனம் அளிக்கும் மொபைல் சேவை மற்றும் இணையதள உபயோகம் உள்ளிட்டவை தவிர்த்து ரூ. 4 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டு வசதியை இந்நிறுவனம் அளித்தது.

இது தவிர எஸ்ஐபி எனப்படும் தொடர் சேமிப்பு பரஸ்பர நிதி திட்டத்துக்கு காப்பீடு வசதி அளிக்கப்பட்டது. ஆக்சிஸ் பரஸ்பர நிதி நிறுவனம் சமீபத்தில் ஓய்வு கால சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்து திட்டத்தில் சேர்பவர்களுக்கு இலவச காப்பீடு வசதியை அளித்தது. பிற பரஸ்பர நிதி திட்டங்களை வழங்கும் நிறுவனங்களும் எஸ்ஐபி திட்டத்தில் செலுத்தும் தொகையின் அடிப்படையில் காப்பீடு வசதியை அளிக்கின்றன.

பரஸ்பர நிதி திட்டங்களுடன் இணைந்த எஸ்ஐபி திட்டத்தில் மொத்தம் செலுத்தும் கால அளவின் அடிப்படையில் காப்பீட்டு திட்டங்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மற்றும் அதன் மடங்குகளிலான ஆண்டுகளில் அமையும். எஸ்ஐபி தொகையை தொடர்ந்து செலுத்துவதன் மூலம் காப்பீடு திட்டத்தின் பலனும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

ஆக்சிஸ் பரஸ்பர நிதி திட்டத்தில் சேருவோர் குறித்த காலத்துக்கு முன்பே உயிரிழக்க நேர்ந்தால் அவர் செலுத்த வேண்டிய மாதாந்திர தொகையை தொடர்ந்து செலுத்தும் வகையிலான காப்பீடு வசதியை வாரிசுதாரர்களுக்கு அளிக்கிறது. உதாரணத்துக்கு 10 ஆண்டுக்கான எஸ்ஐபி திட்டத்தில் சேரும் ஒருவர் துரதிருஷ்டவசமாக 5-ம் ஆண்டு முடிவில் உயிரிழந்துவிட்டால், காப்பீட்டு தொகையை அடுத்த 60 மாத (5 ஆண்டுகளுக்கு) சம விகிதத்தில் பிரித்து செலுத்தப்படும்.

உங்களுக்கு இலவச காப்பீடு வசதி கிடைத்தால் முதலில் உங்களது வாரிசுதாரர் யார் என்பதை குறிப்பிடத் தவறாதீர்கள். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் உங்களது வாரிசுதாரருக்கு காப்பீட்டின் பலன் கிடைக்கும். டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். அடுத்ததாக உங்களிடம் உள்ள காப்பீடு திட்டங்கள் குறித்து உங்களது வாரிசுதாரரிடம் தெரிவியுங்கள். அத்துடன் அவரைத்தான் வாரிசுதாரராக நியமித்துள்ளதையும் குறிப்பிடுங்கள்.

குறிப்பாக காப்பீட்டு திட்டம் மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு திட்டங்களுக்கு மிகவும் அவசியமானதாகும். அத்துடன் பயணம் மேற்கொள்ளும்போது உள்ள காப்பீட்டு திட்டங்களையும் விவரியுங்கள். உங்களுக்கு காப்பீடு திட்டங்கள் உள்ளது என்பது வாரிசுதாரருக்கு தெரிந்தால் மட்டுமே அவரால் அதற்குரிய இழப்பீடு விவரங்களை கோரி பெற முடியும்.

எந்த மொபைல் திட்டத்தை தேர்வு செய்து அதன் மூலம் காப்பீடு திட்டங்களை இலவசமாகப் பெற்றுள்ளீர்கள் என்பதையும் தெரிவியுங்கள். அவ்விதம் அளிக்கப்படும் இலவச காப்பீடு திட்டங்களை எடுக்கும் முன்பு விதிமுறைகளை தெளிவாக படித்து வைக்கவும். அதில் உள்ள நிபந்தனைகள் விவரங்களை உங்கள் வாரிசுதாரருக்கும் தெரியப்படுத்துங்கள். இவையெல்லாம் தெரிந்து இருந்தால் மட்டுமே உங்களது இழப்பை பொருளாதார ரீதியில் காப்பீடு திட்டங்கள் மூலம் உங்கள் வாரிசுதாரர்கள் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x