

இப்போது ஸ்மார்ட்போன்களின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போதிய வருமானம் இருக்கிறதோ இல்லையோ, கையில் உயர்மதிப்பிலான பிராண்டட் ஸ்மார்ட்போன் வைத்திருப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே பலரும் ஆப்பிள், சாம்சங் போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் 30 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்போது அதை வாங்கத்தான் பலரும் விரும்புகின்றனரே தவிர, அது வந்த வழியைப் பற்றியோ, தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனுக்கு பில் அவசியம் என்பதைப் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. இதனாலேயே இந்தியாவில் கள்ளச் சந்தை வர்த்தகம் மிகவும் அமோகமாக இயங்குகிறது.
கள்ளச் சந்தை மூலம் இந்தியாவுக்குள் வரும் ஸ்மார்ட்போன்களால் இந்திய அரசுக்கு ஏற்படும் வரி வருமான இழப்பு ஆண்டுக்கு ரூ.2,400 கோடியாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு உயர் ரக பிரீமியம் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் விற்கின்றன. ஆனால் கள்ளச் சந்தை வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு உள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேலான ஸ்மார்ட்போன்களால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய 12 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 20 சதவீத சுங்க வரி வராமலேயே போய்விடுகிறது. துபாய், ஹாங்காங், அமெரிக்கா போன்ற நாடுகளில் இவற்றின் மீதான வரி முற்றிலும் இல்லாத நிலையில் இவை அனைத்தும் இந்த நாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி பிற கடத்தல் பொருட்களால் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வர வேண்டிய வருமானம் குறைகிறது. இதனால் இது சார்ந்த தொழில்துறையினருக்கு ஏற்படும் நஷ்டம் ரூ.1.05 லட்சம் கோடியாக உள்ளது.
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மதுபானங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், எஃப்எம்சிஜி பொருட்கள், புகையிலை சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி வரப்படுகின்றன. கடத்தல் தொழில் சிறப்பாக நடைபெறும் பட்சத்தில் அது முறை சார்ந்த தொழில்துறையையும், வேலை வாய்ப்பையும் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். வரி விதிப்பு அதிகமாக இருப்பதாலும், பிராண்டுகளுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதாலும் கள்ள சந்தை வர்த்தகம்
செழிப்பாக வளர்கிறது. அனைத்துக்கும் மேலாக கள்ளச் சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த போதிய அதிகாரிகள் மற்றும் கடுமையான கண்காணிப்பு இல்லாததே முக்கிய காரணமாகும். கள்ளச் சந்தை வர்த்தகத்தில் பிரதான இடம்பிடிப்பது தங்கம். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.600 கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பொருளாதார தேக்க நிலை நிலவுவதாக பொதுவாக பேசப்பட்டாலும், நிதி அமைச்சரைப் பொறுத்தமட்டில் ``தொய்வு நிலை'' என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது.
கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், அடுத்த கட்டமாக தனிநபர் வருமான வரியைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரி குறைப்புக்கு சாமானிய மக்கள் சந்தோஷப்படுவதா அல்லது சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு குறித்து வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை.
தனிநபர் வரியைக் குறைத்து பொருட்களின் வரியை உயர்த்துவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது நிதி அமைச்சர் மட்டுமே அறிந்த ரகசியம். வரியை உயர்த்துவதைக் காட்டிலும் கள்ளச் சந்தை மூலம் அரசுக்கு வராமல் போகும் வருமானத்தை தடுத்து நிறுத்தினாலே அரசின் கஜானா நிறையும்.
சாமானிய மக்களை வதைக்க வேண்டிய அவசியமும் நிகழாது. பிப்ரவரி 1-ம் தேதி புதிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கும் வேளையில், கள்ளச் சந்தை வர்த்தகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.