Published : 03 Aug 2015 13:05 pm

Updated : 03 Aug 2015 13:06 pm

 

Published : 03 Aug 2015 01:05 PM
Last Updated : 03 Aug 2015 01:06 PM

நம் ஜனநாயகத்தை செப்பனிட வேண்டும்

இந்திய ஜனநாயகத்துக்கு ஏதோ ஆகிவிட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடர்களைக் கெட்ட ஆவி பிடித்து ஆட்டுகிறது. மிகவும் மந்தமாக மீண்டுவரும் பொருளாதாரம் குறித்தும், மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்து பேச வேண்டிய ஊழல் எது என்று சிந்தித்து வருகிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் முடக்குவது எப்படி என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிந்தித்து வரும் வேளையில், எதற்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டோம் என்பதையே மறந்து குழி முயல்களைப் போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள்.

ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 3 வாரங்களாக ‘லலித்(மோடி)கேட்’ ஊழல் தொடரில் சிக்குபவர்கள் யார் என்று தொலைக் காட்சியில் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதை மிஞ்சிவருகிறது ‘வியாபம்’ ஊழல் தொடர். பாரதிய ஜனதா கட்சியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகிறது ‘வியாபம்’. தாங்கள் சொல்லும் ஆளும்கட்சி முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று அறிவித்துவிட்டது காங்கிரஸ்.

இந்த நிலைமை இப்படியே தொடரக்கூடாது. அரசியல் சூழலை பாதித்துவரும் சில அம்சங்களைக் களைந்தே தீர வேண்டும்.

முதலாவதாக, நாட்டில் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அல்லது சில மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் மத்திய அரசு முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் நிர்வாக முடிவுகளையும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது.

இரண்டாவதாக, எதிர்க்கட்சிகள் நினைக்கும்போதெல்லாம் எதையாவது வலியுறுத்தி பிடிவாதம் பிடித்து அவை நடவடிக்கைகளை நடத்தவிடாமல் முடக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும். காலையில் அவை கூடி ஒத்திவைக்கப்பட்டதும் அடுத்து மீண்டும் கூடுவதற்குள் நாடாளுமன்றத்தின் மையப் பகுதிக்குள் எப்படி எகிறிக் குதிக்க வேண்டும், நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த எப்படி கோஷமிட வேண்டும், தேசத்துக்கான செயல்திட்டத்தை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இப்படி அடிக்கடி தொல்லை தந்த ஐரிஷ் உறுப்பினர்களை அவைக் காவலர்களைவிட்டு தூக்கி வீதியில் விட்டபோதுதான், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுமை யானது என்று அவர்கள் உணர்ந்தனர்.

நம் நாட்டு நாடாளுமன்ற உறுப்பி னர்களை அதிக நாள்களுக்கு உழைக்க நாம் வலியுறுத்த வேண்டும். இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 67 நாள்கள் மட்டுமே கூடுகிறது. பிரிட்டனில் 150 நாள்களுக்கு நடக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றம் ஆண்டுக்கு 200 நாள்கள் நடை பெறுகிறது. மழைக்காலக் கூட்டத் தொடர் ஏன் 3 வாரங்களுக்கு மட்டும் கூட்டப்பட வேண்டும், 3 மாதங்களுக்கு நடந்தால் என்ன? அவை உறுப்பினர்களில் மூன்றில் இரு பகுதியினர் விரும்பினால்கூட அவை கூடும் என்ற நடைமுறை இந்தியாவிலும் வரவேண்டும். நீண்ட நாள்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்தால் அவ்வப்போது எதிர்க்கட்சியினர் தங்களுடைய கோபத்தை, அதிருப்தியை வெளிப் படுத்த வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க போதிய நேரம் கிடைக்கும். பிரிட்டனில் அவை கூடும் 150 நாள்களில் 20 நாள்களுக்கான விவாதப் பட்டியலை அல்லது நிகழ்ச்சி நிரலை எதிர்க்கட்சித் தலைவர்தான் தீர்மானிக்கிறார்.

மூன்றாவதாக, பிரிட்டனிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் இன்ன மாதம், இன்ன தேதியில்தான் நடைபெறும் என்று நிரந்தரப்படுத்த வேண்டும்.

இதனால் ஒவ்வொரு மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலையும் பார்த்து முடிவுகளை அறிவிக்கும் ஒழுங்கற்ற போக்குகள் முடிவுக்கு வரும். ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள் வதற்காகச் செய்யும் சமாதானங்களும் குறையும்.

மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஆண்டின் குறிப்பிட்ட தேதிகளில்தான் தேர்தல் என்பதை சட்டப்பூர்வமாகவே நிர்ணயித்துவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தால்கூட எஞ்சிய கட்சிகளும் தலைவர்களும் சேர்ந்து மாற்று அரசை எஞ்சிய பதவிக்காலத்துக்கு நடத்தியே தீர வேண்டும். அப்படி இல்லையென்றால் அடுத்த தேர்தல் வரும் நாள் வரை குடியரசுத் தலைவர் ஆட்சிதான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் தேதியில் நிச்சயமற்ற தன்மை கூடாது என்பது என்னுடைய புதிய யோசனையல்ல. நிர்வாக சீர்திருத்த கமிஷன் இதை ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கிறது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அதை ஏற்று வழிமொழிந் திருக்கிறார்; நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தேர்தல்கூட டெல்லியில் அரசு நிர்வாகத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவைக்கிறது என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இப்போது நாச்சியப்பன் தலைமையிலான குழு இந்த சீர்திருத்தம் குறித்துப் பரிசீலிக்கிறது. மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று அத்வானி கூறியிருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு இடையில் ஒரு தேதியையும் உடன் நிர்ணயிப்பது, நிலைமை மோசமாகாமல் பாதுகாக்க உதவும் என்று கருதுகிறேன்.

மேற்கொள்ளப்பட வேண்டிய நான்காவது சீர்திருத்தம் யாதெனில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது மாற்று அரசியல் அணி எது என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துத் தெரிவிக்க வேண்டும். ஜெர்மனியில் அப்படித்தான் நடைமுறை. அப்போதுதான் ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு அப்புறம் பேரம் பேசிக்கொள்ளலாம் என்ற அணுகு முறை தவிர்க்கப்படும். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் களிடமும் சட்டப் பேரவை உறுப்பினர்களிடமும் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஏற்படும்.

ஐந்தாவது சீர்திருத்தம் விளையாட்டு சங்கங்களிலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலக்கிவைப்பது. சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக் கப்பட்ட உடனேயே விளையாட்டு அமைப்புகளிலிருந்தும் விலகிவிட வேண்டும் என்ற சட்டம் இயற்றப் பட்டிருந்தால் லலித் மோடி விவகாரமே பெரிதாகியிருக்காது.

வெற்றிகரமான ஜனநாயகம் என்பது மக்களுடைய மாறுபட்ட தேவைகளுக்கேற்ப சட்டங்களை இயற்றுவதிலும் திட்டங்களை வகுப்பதிலும்தான் இருக்கிறது. நாம் ஏன் தேர்ந்தெடுத்து அனுப்பினோம் என்பதை நம்முடைய பிரதிநிதிகளின் முகத்துக்கு நேராக நாம் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்முடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்லவும், விவாதிக்கவும், தீர்வு காணவும்தான் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கின் றனர்.

மக்களுடைய வரிப் பணத்தையும் மக்களுக்கான நேரத்தையும் வீணாக்குவதற்காக அல்ல. நாம் எப்படி நடந்தாலும் மக்கள் நம்மை எதுவும் கேட்கமாட்டார்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நினைத்துவிடக்கூடாது.

gurcharandas@gmail.com

ஜனநாயகம்பாராளுமன்றம் முடக்கம்இந்திய ஜனநாயகம்ஜனநாயக செப்பனிடல்வியாபம் ஊழல்மக்கள் வரிப்பணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

kollywood-junction

கோலிவுட் ஜங்ஷன்

இணைப்பிதழ்கள்

More From this Author

x