ஜாகுவார் எக்ஸ்இ பேஸ்லிஃப்ட் 

ஜாகுவார் எக்ஸ்இ பேஸ்லிஃப்ட் 

Published on

ஜாகுவார் எக்ஸ்இ முதன் முதலாக 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மாடலின் தோற்றம், உட்புற வடிமைப்பு போன்றவற்றை தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் புத்துருவாக்கம் செய்து, பேஸ்லிஃப்ட் மாடலாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

ஆனால் அந்த சமயம் இந்தியாவில் அது அறிமுகம் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேஸ்லிஃப்ட் மாடல் எக்ஸ்இ எஸ் மற்றும் எக்ஸ்இ எஸ்இ என இரண்டு வேரியண்டுகளில் வெளிவந்துள்ளது.

புறத்தோற்றம் மெருகேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக, எல்இடி முகப்பு விளக்கு, பம்பர், முன்புற கிரில், அலாய் வீல் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உட்புற வடிமைப்பில் நவீன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பென்ஸ் சி-கிளாஸ், ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3-சீரிஸ், வோல்வோ எஸ்60 ஆகிய மாடல்களுக்கு போட்டியாகவே இந்த மாடல் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ.45 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.

இன்ஜினைப் பொறுத்தவரை முந்தைய மாடலில் உள்ள இன்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 8 ஸ்பீட் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் என இருவகையிலும் கிடைக்கிறது. அதன் இன்ஜின் 1997 சிசி முதல் 1999 சிசி திறனைக் கொண்டிருக்கிறது. ஐந்து பேர் அமரக் கூடிய அளவில் இருக்கை வசதி உள்ளது.

இதன் டீசல் இன்ஜின் 250 ஹார்ஸ்பவரை 365 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும். அதேபோல் பெட்ரோல் இன்ஜின் 180 ஹார்ஸ் பவரை 430 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும். புஜி ஒயிட், கால்டெரா ரெட், ஃபயர்ன்ஸ் ரெட் மெட்டாலிக், போர்டோபினோ ப்ளூ மெட்டாலிக், ஈகர் கிரே மெட்டாலிக், சாண்டோரினி பிளாக் மெட்டாலிக் உள்ளிட்ட ஆறு வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in