Published : 02 Dec 2019 01:51 PM
Last Updated : 02 Dec 2019 01:51 PM

நவீனத்தின் நாயகன் 03: நல்லதொரு குடும்பம்!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஜாஷுவாவின் மனைவி வின்னிஃப்ரெட் ஜோஸஃபைன் (Winnifred Josephine - சுருக்கமாக வின்). மஸ்க்கின் அம்மாவழிப் பாட்டி. ஜாஷுவா என்னும் ஜாடிக்கு ஏற்ற மூடி. திருமணம் ஆகும் முன், நடன ஆசிரியராக இருந்தார். எங்கேயோ அவரைப் பார்த்த ஜாஷுவாவுக்கு வின் மேல் ஒரு கண். பட்சியை வளைப்பதற்காகவே, டான்ஸ் கோர்ஸில் சேர்ந்தார். ஆறு மாதப் பயிற்சி. கடைசி நாள்.

எல்லோரும் போகும்வரை காத்திருந்தார். வின் அருகே போனார். ``ஐ லவ் யூ” என்பதை வித்தியாசமாகச் சொல்ல வேண்டும். அவர் அதிர்ச்சி அடைவாரோ, என்ன பதில் சொல்லுவாரோ என்று கொஞ்சம் பயம். தயங்கித் தயங்கிக் கேட்டார்.

“நாம் இருவரும் எப்போது கல்யாணம் செய்துகொள்ளலாம்?”
அவர் வாய் மூடும் முன் வந்தது வின்னின் பதில்.
“நாளைக்கே.”
“ஜாஷூவா மயங்கி விழாத நிலை. அதே சமயம், அவர் மனதில் தெளிவு – எனக்குச் சரியான
துணிச்சல்காரி இந்தத் துடுக்குப் பெண்தான்.”

விரைவில் திருமணம். மகன் ஸ்காட், மகள் லின் (Lynne), இரட்டைப் பெண்கள் மே, கே. மகன் ஆங்க்கர் லீ (Anghor Lee) என வரிசையாய் ஐந்து குழந்தைகள். ஜாஷூவா விசித்திரமான மனிதர். அரசியலில் மட்டுமல்ல, தனி வாழ்க்கையிலும் முரட்டுப் பிடிவாதம்.

தினசரி சாப்பாட்டுக்குப் பயன்படும் கோதுமை மற்றும் தானியங்களைக் கடையில் வாங்கக்கூடாது. பயிரிடும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக முழு தானியங்களாக வாங்குவார். மனைவிதான் உமி நீக்கிப் பொடித்து மாவாக்கவேண்டும். ரசாயனம் சேர்த்த சர்க்கரை கிடையாது. வெல்லம் மட்டுமே. வீட்டில் காபி, கொகோ கோலா போன்ற குளிர்பானங்கள், மது அனைத்துக்கும் தடை. விருந்தாளிகள் கூட புகை பிடிக்கக்கூடாது.

குழந்தைகளை அதட்டுவதும், அடிப்பதும் ஜாஷுவாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. திட்டுவதும், அவர்கள் குறும்பு எல்லை மீறும்போதுதான். குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் சர்ச் போக வேண்டும். பைபிள் படிக்க வேண்டும். எல்லோரையும் சேர்ந்து உட்கார வைத்து அவரே படிப்பார். தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் குழந்தைகள் பிறந்த நாள், பள்ளி நிகழ்வுகள் ஆகியவற்றுக்குத் தவறாமல் மனைவியோடு போவார்.

குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுவார். மேஜிக் செய்து காட்டுவார். தன் ஜல்லிக்கட்டு, விமானப் பயணம் ஆகிய அனுபவங்களை அவர்களுக்குக் கதைபோல் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். அவர்களுக்கு எப்போதும் தரும் அறிவுரை, “நீங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் அனுபவித்துச் செய்தால், உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எதுவுமே இருக்காது.” (If you always enjoy everything you do, you will never do anything that you don't enjoy.) இதே சமயம், மகன்கள், மகள்களின் முடிவுகளிலும், செயல்பாடுகளிலும் தலையிடவே மாட்டார். முழுச் சுதந்திரம். தன் குழந்தைகள் படித்த பள்ளிகளுக்கு அவர் ஒரு நாள் கூடப் போனதில்லை.

ஜாஷுவாவுக்கு இன்னொரு பழக்கம் – எங்கே போனாலும் தனியாகப் போகமாட்டார். ஒட்டுமொத்தக் குடும்பமும் உடன் போகவேண்டும். இரட்டைப் பெண்கள் மூன்று மாதக் குழந்தைகளாக இருந்தபோதே இப்படிப்பட்ட பயணங்கள். அடிக்கடி பயணம் செய்ததால், விமான நிலையங்களில் பரிச்சய முகங்களானார்கள். ``பறக்கும் இரட்டைப் பெண்கள்” என்றே பலர் பெயர் வைத்தார்கள்.

குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வரவும், சமாளிக்கவும் தன் மனைவி எத்தனை சிரமப்படவேண்டும் என்பதே ஜாஷுவாவுக்குத் தெரியாது. குடும்பத்திடம் இருக்கும் அளவற்ற பாசத்தால்தான் இதைச் செய்கிறார் என்று வின் புரிந்துகொண்டதால், அவர் முணுமுணுத்தது கூட இல்லை. 32 வருடத் திருமண வாழ்க்கையில், அம்மாவும், அப்பாவும் வாக்குவாதம் செய்வதைக்கூட மகன்கள், மகள்கள் பார்த்ததில்லை. ஜாஷூவா தன் குழந்தைகளுக்கு எப்போதும் தந்த அறிவுரை.

``இப்படிப்பட்ட கணவருக்கு ஈடு கொடுத்து வின் வாழ்ந்ததே ஆச்சரியம். அவரோ, இன்னும் பல படிகள் மேலே போனார். ஜாஷுவாவின் சாகசங்களிலும் பங்கேற்றார். இருவரும், தங்கள் ஒற்றை எஞ்சின் விமானத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா வழியாக ஆஸ்திரேலியா போய்த் திரும்பும் 30,000 மைல்கள் துணிகரப் பயணம் செய்தார்கள். (இந்திய விண்ணின் மேலும் பறந்தார்கள்.) மெய்சிலிர்க்கும் தங்கள் அனுபவங்களை, The Flying Haldeman's: Pity the Poor Private Pilot என்னும் புத்தகமாக இருவரும் சேர்ந்து எழுதினார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஆண்டுதோறும் 12,000 மைல் தூரக் கார் பந்தயம் நடக்கும். கரடுமுரடான மலைப்பாதைகளில் ஓட்ட வேண்டும். உலகின் மிகக் கடுமையான கார் பந்தயம் என்று கருதப்படுவது. ஜோஷுவா, வின் இருவரும் முதல் இடம் பிடித்தார்கள். தென்னாப்பிரிக்காவின் தேசிய கைத்துப்பாக்கியால் சுடும் போட்டி. ஆண்களில் நம்பர் 1 ஜோஷூவா; பெண்களில் வின்!

இத்தனை சாதனைகள், ஐந்து குழந்தைகளை வளர்க்கும் குடும்ப பாரம் – இவற்றுக்கு நடுவிலும் எப்படித்தான் நேரம் கிடைத்ததோ, வின் தன் நடனப் பள்ளியையும் தொடர்ந்து நடத்தினார். Sleeping Beauty, Peter and the Wolf, The Fire Bird, La Boutique Fantastique, The Nutcracker Suite என அவர் தயாரித்து, இயக்கிய நாட்டு நாடகங்கள் பொதுமக்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றன.

கலைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு – இறுதிமூச்சை மேடையில் விடவேண்டும். வின்னும் இப்படித்தான். நடனப் பள்ளியில் கற்றுக் கொடுத்தல், நாடகத் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றைத் தன் 96 – ஆம் வயது வரை தொடர்ந்தார். அப்போதும், நிறுத்த ஒரே காரணம், தள்ளாடும் கால்களால் அவருக்கு நிற்கவே முடியவில்லை.

அப்புறமல்லவா ஆடுவது? ஆனாலும், நடனவெறியை விடவில்லை. கம்ப்யூட்டரில், புதிய நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். 98 – ஆம் வயதில் சுவாசம் நின்றது. நடனமும் அப்போதுதான்.மகள் மே, படிப்பில் மகா கெட்டிக்காரி. அதுவும் குறிப்பாகக் கணிதத்தில். ஆசிரியர்கள் அவளை அடிக்கடி, சீனியர் மாணவர்களுக்குக் கணித வகுப்புகள் எடுக்கச் சொன்னதுண்டு.

``உணவு ஊட்டத் துறையில்” (Nutrition) பி.எஸ்சி பட்டம் வாங்கினார். பள்ளி, கல்லூரிகளிலிருந்து வந்தவுடன், அப்பாவின் மருத்துவமனையில் வரவேற்பாளர், கைரோப்ராக்டிக் சங்கத்துக்காக அப்பா நடத்திய செய்திமடலுக்கு உதவியாளர்.
அறிவு மட்டுமல்ல. அழகும் அதிகம். பதினைந்தாம் வயதில் குடும்ப நண்பர் நடத்திய மாடலிங் பயிற்சியில் சேர்ந்தார். வந்தன வாய்ப்புகள். 1969. 21 – ஆம் வயதில் தென்னாப்பிரிக்க அழகிப்போட்டியில் இறுதிச்சுற்றில் இடம். 1970. திருமணம். அடுத்த நான்கு வருடங்களில் மூன்று குழந்தைகள். ஒன்பது வருடங்களில் விவாகரத்து.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, மாடலிங். “ரெவ்லான்” (Revlon) என்னும் அழகுப் பொருட்கள் தயாரிக்கும் அமெரிக்கக் கம்பெனி தந்தது வாய்ப்பு. முகம் நாடு முழுக்கப் பரிச்சயமானது. சிந்தித்துச் செயலில் இறங்குவார். தனக்குச் சரி என்று பட்டால், பிறர் கருத்துகள் பற்றிக் கவலைப்படாத டோண்ட் கேர் மாஸ்டர்.

துணிச்சலான போஸ்கள் கொடுப்பார். ‘‘ப்ளேபாய்” (Playboy), வானிட்டி ஃபேர் (Vanity Fair) போன்ற பத்திரிகைகளின் அட்டைப்படத்தை இப்படிப்பட்ட படங்கள் அலங்கரித்தன. ‘‘டைம்” பத்திரிகையின் அட்டையில் வருவது எல்லா உலகப் பிரபலங்களுக்கும் கனவு. விரல்விட்டு எண்ணும் சிலருக்கே நனவாகும் கனவு. இவர் வந்தார்.

அறுபதாம் வயதில், தலைமுடிக்குக் கறுப்புச் சாயம் அடிப்பதை நிறுத்தினார். அவர் மாடலிங் வாழ்க்கை முடிந்துவிடும் என்று விளம்பர ஏஜென்சிகள் பயமுறுத்தினார்கள். நடந்தது ஆச்சரியம். புத்தம் புதிய வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அத்தனைக்கும் கிரீடமாக, 2017 – இல், ``கவர்கேர்ள்” (Covergirl) என்னும் அமெரிக்க அழகுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள், இந்த 69 வயதுப் பாட்டியைத் தங்கள் மாடலாக நியமித்தார்கள். 2018 – இல் நியூயார்க்கிலும், இத்தாலி மிலான் நகரிலும் நடந்த ஃபேஷன் ஷோக்களில் 70 வயதுக்காரர் ``கேட் வாக்” (Catwalk) நடந்தபோது, அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. இன்றும், 71 வயதில், எக்கச்சக்க ரசிகர் கூட்டம். இன்ஸ்ட்டாகிராமில் 1,70,000 ஃபாலோயர்கள்!

மனோதத்துவ மேதைகள் மனித ஆளுமைகளை மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள்- ஆல்ஃபா(Alpha), பீட்டா (Beta), ஒமேகா(Omega). ஆல்ஃபா - தலைவராகும் ஆசை, தெளிவான இலக்குகள், தலைக்கனத்தை நெருங்கும் அபாரத் தன்னம்பிக்கை, விரும்பியதை “எப்படியாவது” அடையும் வெறி, சவால்களில் ஆசை, தேவைப்படும்போது உணர்ச்சிகளைப் புறம் தள்ளும் சக்தி, தனிமையில் இனிமை. பீட்டா – தொண்டராக இருப்பதில் திருப்தி, கவனமாக எடுத்துவைக்கும் அடிகள், விளம்பரம், புகழ் ஆகியவற்றில் விருப்பம் இல்லாமை, குறைவான பேச்சு, கடும் உழைப்பு (குடத்தில் இட்ட குத்துவிளக்குகளாக இருப்பதால், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ற உயர்வுகள் இவர்களுக்குச் சாதாரணமாகக் கிடைக்காது.)

ஒமேகா – இவர்களிடம் ஆல்ஃபா, பீட்டா ஆகிய இரு தரப்பினரின் குணங்களும் இருக்கும். இவர்களுள் சிலர், சமுதாயத்தைப்பற்றியே கவலைப்படாதவர்கள்.அவரையைப் போட்டால் துவரையா முளைக்கும்? தாத்தா, பாட்டி, அம்மா மூன்று பேரும் ஆல்ஃபா ஆளுமைகளாக இருந்தால், ஈலான் மஸ்க் எப்படி இருப்பார்? அவரும் ஆல்ஃபா ஆளுமைதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x