இனி படங்களில் மட்டுமல்ல; நிஜத்திலும் பார்க்கலாம்: அறிமுகமானது டெஸ்லாவின் சைபர் டிரக்

இனி படங்களில் மட்டுமல்ல; நிஜத்திலும் பார்க்கலாம்: அறிமுகமானது டெஸ்லாவின் சைபர் டிரக்
Updated on
3 min read

ஜாக் மா, ஈலான் மஸ்க். தற்போது உலகம் வியக்கும் தொழில் முனைவோர்களில் இவர்கள் இருவரின் பெயர்தான் எங்கும் ஒலிக்கிறது. அசாத்திய கனவுகளை நிஜமாக்கும் செயலாற்றல் மிக்கவர்களாக இவர்கள் இருப்பதே, பிற வெற்றியாளர்களைக் காட்டிலும் இவர்கள் மீது கூடுதல் கவனம் ஏற்படக் காரணம்.

தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டுமல்ல, தம் அன்றாட வாழ்வின் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான சக்தியையும் பலர் இவ்விருவரிடமிருந்தே பெறுகின்றனர். இதில் ஜாக் மா வணிகம் சார்ந்து செயல்படக்கூடியவர் என்றால், ஈலான் மஸ்க் தொழில் நுட்பங்கள் சார்ந்து செயல்படக்கூடியவர். அந்தவகையில் சென்ற வாரம் மீண்டும் ஒருமுறை உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்து இருக்கிறார் ஈலான் மஸ்க்.

அவருடைய டெஸ்லா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘சைபர் டிரக்’ கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிநவீன வடிவமைப்புடன், புதிய சாத்தியத்தைக் கொண்டதாக வெளிவந்திருக்கிறது அந்த டிரக். ஈலான் மஸ்கின் அடிப்படை நோக்கம் ஒன்று தான். நவீன கண்டுபிடிப்புகள் அனைவரையும் சென்று சேர வேண்டும்; பணம் அதற்குத்
தடையாக இருக்கக் கூடாது; அதற்கேற்ப வாங்கத்தக்க விலைகளில் தயாரிப்புகளை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் ‘சைபர் டிரக்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அவருடைய குழந்தைப் பருவம்முதல் தற்போதைய காலகட்டம்வரை அவருடைய வாழ்க்கைப் போக்குகளை கவனிக்கும்போது, ஒன்றை புரிந்து கொள்ள முடியும். அவர் தன்கனவுகளை நோக்கி பயணிக்கும் பேராற்றல் கொண்டவர் என்று. ஈலான் மஸ்க் பணம் சேர்ப்பதிலோ, வெற்றிகளை ஈட்டுவதிலோ பெரிதாக ஆர்வம் கொண்டவராக தெரியவில்லை.

மாறாக, புது உலகத்தை படைத்தல் என்பதே அவருடைய செயல்பாடுகளின் அடிநாதமாக உள்ளது. பெரும்பாலும், ஈலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகிறார். ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால் டெஸ்லா நிறுவனத்தை தொடங்கியது ஈலான் மஸ்க் அல்ல. மார்டின் எபர்ஹார்ட், மார்க் டார்பென்னிங் என்ற இரு பொறியாளர்கள்தான் 2003-ம் ஆண்டு டெஸ்லா மோட்டார்ஸ் என்றொரு நிறுவனத்தை தொடங்குகின்றனர்.

நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் நிதி திரட்டுகையில்தான், மறுவருடம், அதாவது 2004-ம் ஆண்டு ஈலான் மஸ்க் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து அதன் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகவும், அதன் தலைவராகவும் ஆககிறார். அதன் பிறகு அந்நிறுவனம் சார்ந்து மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறார். இந்நிறுவனத்துக்கான பெயர் காரணம் மிக முக்கியமானது. மாறுதிசை மின்னோட்டம் எனப்படும் அல்டர்னேட்டிவ் கரன்ட் (ஏசி) தொடர்பான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நிகோலோ டெஸ்லா என்ற அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

இந்தப் பெயரை ஈலான் மஸ்க் வைக்கவில்லை என்றாலும், ஈலான் மஸ்க்கின் லட்சிய அடையாளங்களில் ஒருவர் நிகோலோ டெஸ்லா என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா மோட்டார்ஸ் என்று இருந்த நிறுவனத்தின் பெயர் 2017-ம் ஆண்டு டெஸ்லா என்று மாற்றப்பட்டது. மக்கள் வாங்கத் தக்கவிலையில் எலக்டிரிக் கார்களை தயாரிப்பதுதான் நிறுவனத்தின் நோக்கம். ஆனால் அதற்குத் தேவையான பணத்தை ரேஸ் கார்கள் தயாரித்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு குறைந்தவிலை கார்களை தயாரிப்பது ஈலான் மஸ்கின் திட்டம்.

அந்த வகையில், நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களிலேயே உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்தது டெஸ்லா மோட்டார்ஸ். டெஸ்லா ரோட்ஸர், மாடல் எஸ், மாடல் எக்ஸ் உள்ளிட்ட அதன் தயாரிப்புகள் வாகன உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இந்நிலையில்தான் கடந்த வாரம் அறிமுகமாகி இருக்கிறது ‘சைபர் டிரக்’. அதன் தோற்றம் அறிவியல் புனைவுகளில் வரும் வாகனங்களை போன்று இருக்கிறது.

வண்ணக்கலவைகள் ஏதுமற்று, ஸ்டெயின்லஸ் ஸ்டீலின் நிறத்திலேயே அதன் புற வடிவம் உள்ளது. முன்புற மற்றும் பின்புற விளக்குகள், பக்கவாட்டு கண்ணாடிகள் என்றுதற்போது புழக்கத்தில் இருக்கும் வாகனங்களின் எந்தக் கூறுகளையும் இது கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் மிகத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புகழ்பெற்ற திரைப்படங்களான பிளேட் ரன்னர் மற்றும் ஜேம்ஸ் பாண்ட படமான தி ஸ்பை லவ்ட் மி (the spy loved me)-யில் வரும் வாகனங்களில் உந்தப்பட்டே இந்த டிரக்கை வடிவமைத்ததாக ஈலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

ஃபோர்ட் எஃப் 150 மாடலுக்கு போட்டியாகவே இந்த டிரக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிரக் என்றால் சரக்குகளை கொண்டுபோவதற்கு என்று மட்டும் நினைத்து விட வேண்டும். ரேஸ் கார் போலவும் இதைப் பன்படுத்த முடியும். 6 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி உள்ளது. இந்த காரை தங்கள் காவல்படை பணிகளுக்கு பயன்படுத்த துபாய் அரசு முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘சைபர் டிரக்’ மூன்று மாடல்களில் வெளிவருகிறது. என்ட்ரி மாடலான சிங்கிள் மோட்டார் ரியர் வீல் டிரைவ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ அளவிலும், மிட் மாடலான டபுள் மோட்டர் ஆல் வீல் டிரைவ் 480 கிமீ அளவிலும், டாப் மாடலான டிரை மோட்டார் ஆல் வீல் டிரவை 800 கிமீ அளவில் செல்லும் திறன் கொண்டதாகவும் உள்ளன. இதில்
என்ட்ரி மாடல் 6.5 வினாடிகளில் 97 கிமீ வேகத்தை எட்டும்.

அதைப்போல், மிட் மாடல் 4.5 வினாடிகளிலும், டாப் மாடலான 2. 9வினாடிகளிலும் அந்த வேகத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற மாதம் நவம்பர் 21-ம் தேதியில்தான் இந்த டிரக் அறிமுகமானது. ஆனால், அடுத்த நான்கே தினங்களில் 2 லட்சத்துக்கும் மேலாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு தொகை இந்திய மதிப்பில் ரூ.7,000 (100 டாலர்) மட்டும்தான்.

விற்பனைக்கான தயாரிப்பு 2021-ல் தான் ஆரம்பமாக உள்ளது. டெஸ்லா விரைவிலேயெ இந்தியாவில் கால் பதிக்க உள்ளது. எனினும் சைபர் டிரக் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான உடனடி வாய்புகள் இல்லை என்றே தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in