

ஃபோர்டு நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான முஸ்டாங் மாக்-இ சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் தோற்றம், செயல்திறன் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த ஃபோர்டு முஸ்டாங் இந்தியாவுக்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு கார் பிரியர்கள் மத்தியில் அதிகரித்தது. ஃபோர்டு நிறுவனமும் ஒருவழியாக அதற்கான பதிலை அறிவித்திருக்கிறது. வரும் 2021-ல் முஸ்டாங் மாக்-இ இந்தியச் சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.
ஆனால், இது சிபியு வழியாக வருவதால் விலை அதிகமான எலெக்ட்ரிக் எஸ்யுவியாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே சந்தையில் இரண்டு முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் மாடல்களைச் சந்தைப்படுத்த தயாராக உள்ளன. ஒன்று ஆடி ஈ-ட்ரான், மற்றொன்று ஜாகுவார் ஐ-பேஸ். ஃபோர்டு முஸ்டாங் மாக்-இ இந்த இரண்டு மாடல்களுக்கும் போட்டியாகக் களம் இறங்கும்.
முஸ்டாங் மாக் இ மாடலில் இரண்டு வகையான பேட்டரி மாடல்கள் உள்ளன. ஆனால், இதில் எந்த மாடல் இந்தியச் சந்தைக்கு வர உள்ளது என்ற விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. என்ட்ரி லெவல் மாடலான சிங்கிள் மோட்டார் ரியர் வீல் டிரைவ் மாடல் மணிக்கு 75 கிலோ வாட் மற்றும் 99 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரிகளுடன் வருகின்றன. இவை 258 ஹெச்பி, 289 ஹெச்பி திறனை கொண்டுள்ளன. இரண்டுமே 416 என் எம் டார்க்கை வெளிப்படுத்துகின்றன. 8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவின் மோட்டார், ஆல் வீல் டிரைவ் மாடலானது மேற்குறிப்பிட்ட அதே பேட்டரி திறன்களுடன், 258 மற்றும் 337 ஹெச்பி திறனுடன் 582 என் எம் டார்க்கை வெளிப்படுத்துகின்றன. இவை 7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். எலெக்ட்ரிக் மாடல்களுக்கான சந்தை இந்தியாவில் அதிகரிக்கும்பட்சத்தில் இவற்றுக்கான வரவேற்பு சூடுபிடிக்கும் என நம்பலாம்.