Published : 25 Nov 2019 11:58 AM
Last Updated : 25 Nov 2019 11:58 AM

அலசல்: இதற்கு முடிவு எப்போது?

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் 6 மாத காலத்தில் பொதுத் துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடிகளால் ஏற்பட்ட நஷ்டம் ரூ.96 ஆயிரம் கோடி. மொத்தம் 5,743 மோசடி நிகழ்வுகளால் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது ஒரு செய்தி.

மற்றொன்று ``பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) நிர்வாகம் எங்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது,’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. இவை இரண்டும் சாதாரண செய்திகளாக படித்துவிட்டு மறந்து போகக் கூடிய சமாச்சாரங்களா? வங்கிகளில் மோசடி நிகழ்வு ஆண்டுக்காண்டு 15 சதவீதம் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. இதைக் கண்டு பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா? வங்கி மோசடிகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுவரை 3,38,000 நிறுவனங்களின் செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

சரி, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் வங்கி மோசடிகளின் விகிதம் ஆண்டுதோறும் 15% எப்படி உயர்கிறது? நாட்டில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த சில ஆண்டுகளாக ரூ.25,400 கோடி அளவுக்கு மோசடி நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த மோசடி தொகை ரூ.10,800 கோடி. மூன்றாமிடத்தில் ரூ.8,300 கோடி தொகையை இழந்து நிற்கிறது பாங்க் ஆஃப் பரோடா. விதிமுறைகள் கடுமையாக இல்லை என்று வங்கியாளர்கள் சிலர் கூறுகின்றனர். சில வங்கி அதிகாரிகள், மோசடி பேர்வழிகளோடு கைகோர்த்து மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் வங்கிகளில் நிகழ்ந்த மோசடிகளின் எண்ணிக்கை 6,801. ஏற்பட்ட நஷ்டம் ரூ.71,542 கோடி. இதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் இது அதிகமாகும். 2018-ம் நிதி ஆண்டில் நிகழ்ந்த மோசடிகளின் எண்ணிக்கை 5,916. இழப்பு ரூ.41,167 கோடி. வங்கிகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புள்ள ரிசர்வ் வங்கியே, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் கூறுகிறது. அப்பாவி மக்கள் பிஎம்சி வங்கியிலிருந்து தங்கள் சேமிப்பை எடுப்பதற்கு சிரமப்படும் அளவுக்கு விதிமுறைகளை வகுப்பது மட்டும்தான் ரிசர்வ் வங்கியால் எடுக்க முடிந்தது.

மோசடிகளின் புள்ளி விவரத்தை அறிக்கையாகப் படிப்பது, உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக பதில் அளிப்பது என்பதோடு நிதி அமைச்சரின் கடமை முடிந்துவிடுகிறதா. அல்லது சுருட்டிக் கொண்டு ஓடிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடுமா?
விதிமுறைகள் கடுமையாக இருந்தாலும், அதில் உள்ள நெளிவு, சுளிவுகள் அதைக் கையாளும் அதிகாரிகளுக்குத்தான் தெரியும்.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் பணத்தைக் கையாள்கிறோம் என்ற பொறுப்புணர்வு வங்கி அதிகாரிகளுக்கு வர வேண்டும். இவையெல்லாம் நடக்காதவரை வங்கி மோசடிகளின் வளர்ச்சி ஆண்டுக்கு 15 சதவீதம் அல்ல 50 சதவீத வளர்ச்சியைக் கூட எட்டுவதை யாராலும் தடுக்கவே முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x