வெற்றி மொழி: சாணக்கியர்

வெற்றி மொழி: சாணக்கியர்
Updated on
1 min read

கி.மு 350-க்கும் கி.மு 250க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவர் சாணக்கியர். கௌடில்யர் மற்றும் விஷ்ணுகுப்தர் போன்ற பெயர்களாலும் அறியப்படுபவர். சிறு வயதிலேயே தனது வயதுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலுடன் விளங்கினார். இந்தியாவைச் சேர்ந்தவரான இவர் ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரசு ஆலோசகர் போன்ற பன்முக வித்தகர்.

மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மவுரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர். பண்டைய இந்திய அரசியல் இலக்கியமான அர்த்தசாஸ்திரத்தைப் படைத்தவர். இவரது பெயரால் கௌடில்யம் என்றும் இது குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

* மலர்களின் நறுமணம் காற்றின் திசையில் மட்டுமே பரவும். ஆனால், ஒரு மனிதனின் நற்குணம் அனைத்து திசைகளிலும் பரவும்.
* கடவுள் சிலைகளில் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்களது கடவுள். ஆன்மாவே உங்கள் கோயில்.
* கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வியானது அழகு மற்றும் இளமையை வீழ்த்திவிடுகின்றது.
* ஒரு குருடனுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ, அது போன்றதே முட்டாளுக்கு புத்தகங்கள்.
* மிகப்பெரிய குரு மந்திரம்: உங்கள் இரகசியங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அது உங்களை அழித்துவிடும்.
* ஒரு பாம்பு விஷமில்லாததாக இருக்கலாம்; ஆனால் அது விஷமுள்ளது போல் காட்டிக்கொள்ள வேண்டியது அவசியம்.
* ஒருவர் மிகவும் நேர்மையானவராக இருக்கக்கூடாது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன, நேர்மையானவரே முதலில் வீழ்த்தப்படுகிறார்.
* பயம் உங்களை நெருங்கி வரும்போதே அதை தாக்கி அழித்துவிடுங்கள்.
* ஒரு மனிதன் அவனது செயல்களினாலேயே உயர்ந்தவனாகிறான், பிறப்பால் அல்ல.
* ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் கொஞ்சம் சுயநலம் இருக்கின்றது. சுயநலமற்ற நட்பு என்பதே கிடையாது. இது ஒரு கசப்பான உண்மையே.
* ஒரு வேலையை செய்யத்தொடங்கிவிட்டால், தோல்வி குறித்து பயப்படவோ அல்லது அப்பணியை கைவிடவோ கூடாது.
* நேர்மையாக பணியாற்றுபவர்களே மகிழ்ச்சியானவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in