Published : 25 Nov 2019 11:18 AM
Last Updated : 25 Nov 2019 11:18 AM

கட்டாயமாகிறது ‘பாஸ்டேக்’- டோல் கேட்டில் இனி காத்திருக்கத் தேவையில்லை..

நகர சாலைகளை அடுத்து வாகன நெரிசல் காணக்கிடைக்கும் ஒரு இடம் உண்டு என்றால் அது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்தான். இரவு நேரங்களில் நீண்ட பயணமாக பேருந்தில் செல்லும்போது ஆழ்ந்த தூக்கத்தில், திடீரென்று ஒரு உணர்வு தோன்றும்.

வண்டி போகுதா இல்லையா! இன்ஜினின் இயக்கம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும். கண் விழித்து ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தால் நம் பேருந்துக்கு முன்னாலும், அருகிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்று கொண்டிருக்கும்.

தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய அறையின்முன் நிற்கும் வாகனத்தில் இருந்து ஒரு கை வெளிவரும்; பணத்தை கொடுக்கும்; ரசீதை வாங்கும். அங்கு நிறுவப்பட்டு இருக்கும் தடுப்பு பலகை மேல்தூக்கப்படும். அந்த வாகனம் விரையும்.

இது சுங்கச் சாவடிகளில் அன்றாடம் காணக்கிடைக்க கூடிய ஒரு காட்சி. சுங்கச் சாவடியில் நம் தருணத்துக்காக காத்திருப்பது சற்று இளைப்பாறல் போன்ற அனுபவம்தான். அடுத்து கடக்க வேண்டிய தூரத்துக்கான உத்வேகம் அந்த சிறு இடைவெளியில் கிடைக்கக்கூடும்.

ஆனால் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் அது அப்படியான அனுபவமாக அமைந்து விடுவதில்லை. சில சமயங்களில் டோல் வரிசையில் காத்து இருப்பது பெரும் அயர்ச்சி அளிக்கக் கூடியது. அதைவிட துயரம் அதன் கட்டணம். இந்திய சாலைகளில் உலவும் டிரக்குகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.5 லட்சம் வரையில் டோலுக்கு என்று செலுத்துகின்றன.

எதற்கு இவ்வளவு பீடிகை என்றால் இனி சுங்கச் சாவடியில் காத்திருக்கத் தேவையில்லை. கட்டணம் வசூலிப்பவரின் அறை வரும்போது, வாகன ஜன்னலை கீழ் இறக்கி பணம் செலுத்தும் நடைமுறை அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. யெஸ்.. அப்போ இனி டோல் இல்லையா என்று மகிழ்ச்சி அடைய வேண்டாம். அப்படியெல்லாம் பெரிய மகிழ்ச்சியான செய்தி தந்திட மாட்டோம். ஆனால், கொஞ்சம் சுவாரஸ்யமான செய்தி வேண்டுமானால் தருகிறோம்.

பாஸ்டேக்… இனி டோலில் ஆட்கள் அமர்த்தப்பட்டு உங்களிடம் பணம் வசூலிக்கப்படாது. பதிலாக, உங்களுடைய வாகன முன்புற கண்ணாடியில் இந்த ‘பாஸ்டேக்’ அட்டையை ஒட்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் டோலை கடந்து செல்லும்போது, தானாக அதற்கான கட்டணம் உங்கள் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

எப்படி செயல்படுகிறது?

‘ரேடியோ பிரிக்குவன்ஸி ஐடன்டிஃபிக் கேஷன்’ (ஆர்எஃப்ஐடி) என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பாஸ்டேக் செயல்படுகிறது. உங்கள் வாகனங்களில் இந்த அட்டை பொருத்தப்பட்டு, டோல் வழியாக பயணிக்கும்போது அங்குள்ள கண்காணிப்பு கருவி உங்கள் அட்டையை கன வினாடியில் ஸ்கேன் செய்யும். அதன் வழியாக உங்கள் வாகனம் தொடர்பான கணக்கு அடையாளம் காணப்பட்டு, உரிய தொகை கழிக்கப்படும். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

நேரம் மிச்சமாகும். அதேபோல் வரிசையில் நிற்கும் கணத்தில் ஏற்படும் எரிபொருள் இழப்பும் குறையும். இது பல்வேறு இடங்களில் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. பாஸ்டேக் என்று தனி வரிசை உண்டு. கடந்த செம்படம்பர் மாதம் 9.7 லட்சம் பரிவர்த்தனைகள் பாஸ்டேக் மூலமாக நடந்துள்ளன. தற்போதைய விஷயம் என்னவென்றால், அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் இந்த நடைமுறை கட்டாயமாகிறது.

எங்கே பெறுவது?

டோல்களில், சில பெட்ரோல் பங்குகளில், முன்னணி வங்கிக் கிளைகளில் இந்த பாஸ்டேக்கிடைக்கிறது. ஆன்லைன் மூலமும் வாங்க முடியும். முதல் தவனையாக ரூ.100 செலுத்த வேண்டும். வாகனப் பதிவு சான்றிதழ், வாகன உரிமையாளர் அடையாள அட்டை போன்ற அடிப்படை தகவல்களை வழங்கிய பிறகு, உங்களுக்கென்று தனி கணக்கு உருவாக்கப்பட்டு விடும். அதன் பிறகு உங்களுக்கான பாஸ்டேக் கணக்கில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். வங்கிக் கணக்குகள் மூலமாக, பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வசூலில் மட்டும்தான் தொழில்நுட்பமா?

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் போன்ற நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால் அதைவிட அத்தியாவசியமானது ஒன்று உள்ளது. அது ‘ரெட் லைட் கேமரா’. சாலை விபத்துகளால் அதிகம் உயிர் இழப்பு நிகழும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்திய நகர சாலைகளில் ஒருவர் பயணிப்பதற்கென்றே தனியாக காப்பீடு செய்ய வேண்டும்.

அந்த அளவில்தான் இங்கு சாலை விதிகள் மதிக்கப்படுகின்றன. எந்தக் கணத்தில் எந்த வாகனம் எங்கிருந்து வந்து மோதும் என்று தெரியாது. வெளிநாடுகளில் இத்தகைய விதி மீறல்களை தடுப்பதற்கு என்று ரெட் லைட் கேமரா சாலைகளில் பொருத்தப்படுகிறது.

சிவப்பு விளக்கு போடப்பட்ட பிறகும், வாகனத்தை நிறுத்தாமல் சென்றால் அந்தக் கேமரா பளிச்சிடும். உடனே அபராதத் தொகை அவரது கணக்கில் ஏறிவிடும். இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள்தான் மிக அத்தியாவசியம்.

இந்த வழிமுறை நெதர்லாந்தில்தான் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. அதுவும் எப்போது 1969-ம் ஆண்டே. ஐம்பது ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்திய தலைநகர் டெல்லிக்கு அந்த வசதி அறிமுகமாகிறது. சரி பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகாவது, இந்திய சாலைகளில் ரெட் லைட் கேமராவை அறிமுகம் செய்யும் முயற்சியில் அரசு இறங்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x